ஐ லவ் யூ அப்பா
முதலில்...
வழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்துவிட்ட சுபாஷ் வழக்கம் மாறாத வழக்கமாக பக்கத்து தலையணைகளை தடவ அங்கே அம்மாவும் அப்பாவும் இல்லாதது இதுவும் வழக்கமான நாள்தான் என்பதை புத்திக்கு புரியவைத்தது. ஆனால் இன்று அவனுக்கு பிறந்தநாள் ஆச்சே இன்னைக்கு கூடவா? வருத்தத்துடன் எழுந்துகொண்டு வெளியே வந்தான்.
"ஹேப்பி பர்த்டே செல்லக்குட்டீ..."
"ஹை... அப்பா... இன்னைக்கும் சீக்கிரமே எழுந்திட்டீங்கன்னு நினைச்சேன்!" நம்ப முடியாமல் அப்பாவை ஆச்சரியத்துடன் பார்த்தான் சுபாஷ்.
"இன்னைக்கு உன்னோட பர்த்டே இல்லையாடா? எப்படி எழுந்து போயிடுவேன்னு நினைச்சே? அம்மா உனக்கு பிடித்த பாதாம் கேசரி செஞ்சுட்டிருக்கா. நாங்க ரெண்டு பேருமே நேத்தைக்கே அப்ளிகேஷன் போட்டு இன்னிக்கு 2 மணி நேரம் பர்மிஷன் வாங்கிட்டோம்."
"அதானே பார்த்தேன். எப்பவுமே காலங்கார்த்தாலயே எழுஞ்சு நான் கண் முழிக்கிறதுக்குள்ள வேலைக்கு போயிட்டு நைட்டு நான் தூங்கற நேரம்தானே வருவீங்க?"
"வேலை அப்படியாச்சேடா. இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை உன்னோடதானே இருக்கிறோம்?"
"அந்த ஒரு நாள் எனக்கு போதமாட்டேங்குதுப்பா. என்னோட ஸ்கூலுல படிக்கிற பசங்க எல்லாம் அவங்க அப்பா அம்மாவோடதான் வர்றாங்க தெரியுமா?"
"கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைன்னா சும்மா இல்லைடா கண்ணா. அதுவும் அம்மாவும் நானும் ஒரே கம்பெனியில வேற வேலை செய்யறோமில்லையா அதான். அடடே இதோ உனக்கு பிடிச்ச பாதாம் கேசரி வந்தாச்சே?"
"ஹேப்பி பர்த்டே கண்ணா..." சுபாஷின் அம்மா கெளதமி மலர்ந்த புன்னகையுடன் கையில் ஒரு சின்ன தட்டில் சுடச்சுட பாதாம் கேசரி எடுத்துக்கொண்டு வந்தாள்.
"தேங்ஸ்மா..."
"கண்ணா, சாப்பிட்டு வந்து பாரு, உனக்காக எவ்வளவு பரிசு எல்லாம் வாங்கி வந்திருக்கோம் தெரியுமா?"
"இதோ வந்துட்டேன்பா..."
ஹாலுக்குள் வந்து பார்த்த சுபாஷின் கண்களே பூத்துவிடுமளவுக்கு ஹாலையே நிறைத்துக்கொண்டு விதம் விதமான வண்ண காகிதங்களில் சுற்றப்பட்ட பரிசுபொருட்கள் பளபளத்தன.
சிறிது நேரத்தில் அப்பா அம்மாவின் கூட வேலை செய்பவர்கள், நண்பர்கள், தினமும் இவனை அன்புடன் கவனித்துக்கொள்ளும் காமாட்சி ஆயா எல்லார் முன்னிலையிலும் கேக் வெட்டி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஊட்டிவிட்டு தனக்கு அவர்கள் இருவரும் ஊட்டியதை சாப்பிட்டுவிட்டு அதற்குப்பின் அரங்கேறிய விருந்துகளையும் கண்டு பூரித்திருந்த சுபாஷுக்கு இனம்புரியாத ஒரு சோகமும் கூடவே இருந்தது. அப்பா சந்திரசேகரனையே பார்த்துக்கொண்டிருந்தான். சந்திரசேகர் வந்திருந்த ஒவ்வொரு விருந்தாளிகளுடனும் சந்தோஷமாக சிரித்துப் பேசிக்கொண்டிருக்க வந்தவர்கள் அனைவரும் சொல்லி வைத்த மாதிரி பல்வேறு பரிசுப்பொருட்களையும் பூங்கொத்துக்களையும் சுபாஷின் கைகளில் திணிப்பதும் அதை அவன் அம்மா கெளதமி வாங்கி ஹாலில் ஏற்கனவே சேர்ந்துவிட்ட பரிசுப்பொருள் குன்றின் மேல் போடுவதுமாக இருந்தாள்.
ஒருவழியாக அனைவரும் கிளம்பிவிட, அப்பாவும் அம்மாவும் வேலைக்கு கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருக்க, காமாட்சி ஆயா வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். பரிசுப்பொருட்களை பிரித்துப் பார்க்கும் ஆசையே இல்லாத சுபாஷுக்கு அப்பாவிடம் கொஞ்ச நேரமாவது தனியாகப் பேச வேண்டும் என்று ஆசையாய் இருந்தது. படுக்கை அறைக்குள் நுழைந்து பார்க்க தீவிர மேக்கப்பில் மூழ்கியிருந்த அம்மா தெரிந்தாள். வெளியில் வந்து பார்க்க சோபாவில் அமர்ந்து கழுத்து டையைக் கட்டிக்கொண்டிருந்த அப்பா தெரிந்தார். அவரை நோக்கி ஓடிய சுபாஷ் பாய்ந்து அவரின் மடியில் அமர்ந்துகொண்டான்.
"அட கண்ணுக்குட்டி. என்னடா, உன்னோட பிரசன்ட்ஸையெல்லாம் பிரிச்சி பார்க்கலயா?"
"அத பாக்கறதுக்கு எனக்கு எவ்வளவோ நேரமிருக்குப்பா, உங்களோட பேசத்தான் எனக்கு நேரம் இல்ல."
"என்? ஐயா அவ்வளவு பிஸியோ?"
"நானா நீங்களாப்பா?"
"குட்டி, நீ பேசறதுக்குதான் அப்பா நம்பர் கொடுத்திருக்கேன் இல்ல? எப்ப வேணும்னாலும் போன்ல கூப்பிடறதுதானே?"
"போன்ல பேசறதுக்கே பிடிக்கலப்பா. அப்படியே மீறி பேசினாலும் நான் கூப்பிடற நேரம்தான் ஏதாவது மீட்டிங்ல இருப்பீங்க. அப்படியே இல்லைன்னாலும் அவசரம் அவரசமா பேசுவீங்க. ஏம்பா? இன்னைக்கு என்னோட பிறந்தநாள்தானே? இன்னைக்கு ஒருநாளாவது என்கூட இருக்கக்கூடாதா?"
"அதான் 2 மணி நேரம் இருந்தேனே குட்டி. அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு தயாரிச்ச பிராஜக்ட்டோட ஆடிட்டிங் மீட்டிங் இன்னைக்கு. இன்னைக்கு உனக்கு ஸ்கூலுல லீவு வாங்கிக்கொடுத்திருக்கேன்ல, எங்க வேணும்னாலும் காமாட்சி ஆயாவைக் கூப்பிட்டுக்கிட்டு போயிட்டு வா. அதோட ஒரு நாள் நான் லீவு போட்டா மாத சம்பளத்துல 1500 ரூபீஸ் பிடிச்சுடுவாங்கடா. அப்பா இவ்வளவு கஷ்டப்படுறதே நிறைய பணம் சம்பாதிச்சு நாமெல்லாம் சந்தோஷமா இருக்கணும்னுதானே?"
"ஏம்பா? இன்னைக்கு எனக்கு என்ன பரிசு வாங்கினீங்க?"
"இன்னும் பார்க்கலயா? உனக்கு நிறைய பரிசு வாங்கியிருக்கோம். ஆனா, அதெல்லாத்துக்கும் சிகரம் வச்ச மாதிரி நீ ஆசையா கேட்ட காஸ்ட்லி புட்பால் வாங்கியிருக்கேன்."
"எவ்வளவு செலவாச்சுப்பா?"
"அதெல்லாம் உனக்கு ஏன்டா கண்ணா? எங்களுக்கு நீ ஒரே பையன். உனக்குதானே நாங்க சம்பாதிக்கறதெல்லாம்?"
"இல்லப்பா, சும்மா சொல்லுங்க. தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருக்கு."
"நானும் அம்மாவும் சேர்ந்து சுமார் 12000 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியிருக்கோம்."
"அப்பா, எனக்கு அவ்வளவு பணம் செலவு செஞ்சு பரிசு வாங்கிக்கொடுக்கிறத விட நீங்க ஒரு நாள் என்கூட இருந்தா எவ்வளவு ஜாலியா இருக்கும் தெரியுமா?"
"அப்பாவுக்கும் ஆசைதாண்டா. ஆனா பணம் மட்டும் காரணமில்லடா. நான் ரொம்ப கஷ்டப்பட்டு செஞ்ச பிராஜக்ட் இன்னைக்கு ஆடிட்டிங்ல வருது அதான். மன்னிச்சிக்கோடா."
"ஐ லவ் யூ அப்பா..." அப்பாவை இறுக்கக் கட்டிக்கொண்ட சுபாஷின் கண்களில் வழிந்த சிறு துளி நீரும் சந்திரசேகரின் சட்டையால் துடைக்கப்பட்டு மறைக்கப்பட்டது.
"மீ டூடா கண்ணா..." சுபாஷின் கன்னத்தில் ஒரு ஈர முத்தத்தை வைத்துவிட்டு சந்திரசேகர் புறப்பட்டுவிட கெளதமியும் அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு அவனுடன் சேர்ந்து சென்றுவிட்டாள்.
தனிமையில் விடப்பட்ட சுபாஷ் வருத்தத்துடன் காமாட்சி ஆயாவை நோக்கி ஓடினான்.
பிறகு...
காலை பதினோரு மணிக்கு டி.வி பார்த்துக்கொண்டிருந்த சுபாஷ் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். அழுது ஓய்ந்திருந்த கண்களில் வெளியில் நின்றிருந்தவரின் பிம்பம் மங்கலாக தெரிய யாரோ என்று நினைத்து காமாட்சி ஆயாவைக்கூப்பிடத் திரும்பியவன் மூளையில் சட்டென்று மின்னலடிக்க சடாரென்று திரும்பினான்.
"அப்பா... அப்பா..."
ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக பாய்ந்து ஓடிவந்து தன்னைக் கட்டிக்கொண்ட சுபாஷை அப்படியே வாரி எடுத்து முகம் முழுக்க ஈரமாக்கினான் சந்திரசேகர்.
"எப்படிப்பா? எப்படி வந்தீங்க?"
"நீ காலையிலேயே கேட்ட இல்லடா குட்டீ? அதான் மனசு கேக்கல லீவு போட்டுட்டு வந்துட்டேன். இனிமே எனக்கு நீதாண்டா முக்கியம். நாலைக்கே ஷிப்ட் டைமை மாத்த அப்ளிகேஷன் போட்டுட்டு நானும் அம்மாவும் காலையில உன்ன ஸ்கூலுல விட்டுட்டுத்தான் வேலைக்குப் போவோம். சாயந்திரம் சீக்கிரமே வந்து உன்னோட விளையாடுவேன்."
"நிஜமாத்தான் சொல்றீங்களாப்பா? என்னால நம்பவே முடியலப்பா. நான் புட்பால் கேட்டதே உங்களோட விளையாடத்தாம்பா."
"நிஜமாத்தாண்டா குட்டீ. இப்பவே புட்பால் விளையாடலாமா?"
முகம் முழுக்க சிரிப்புடன் எழுந்து தன்னுடைய விரல்பிடித்து நடக்கும் மகனை நினைத்து சந்தோஷத்தில் மிதந்த சந்திரசேகரனின் மனத்திரையில் அன்று காலையில் அலுவலகத்தில் நடந்தது மெளனமாக ஓடியது.
முன்பு...
"என்ன சார் சொல்றீங்க? நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த பிராஜக்ட்டை செஞ்சேன் தெரியுமா?"
"புரியுது மிஸ்டர் சந்திரசேகர். ஆனா, கம்பெனி முடிவு செஞ்சுட்டா நான் என்ன செய்யிறது? உங்களுக்கே நம்ம கம்பெனியப் பத்தி தெரியும். ஆடிட்டிங்ல சரியா வரலன்னா பிராஜக்டை பெயிலியர்னுதான் முடிவு செய்வாங்க. அதனால உனக்கு இந்த மாதம் தர வேண்டிய புரமோஷனையும் இன்னும் கொஞ்ச மாசத்துக்கு தள்ளிப்போட்டிருக்காங்க."
"சார். இந்த பிராஜக்ட்டுக்காக நான் என் பையனைக்கூட கவனிக்காம இரவு பகலா உழைச்சேனே. அதற்கு கம்பெனி குடுக்குற மரியாதை இதுதானா?"
"முதல்ல இந்தமாதிரி செல்றத நிறுத்துங்கப்பா. இன்னமும் எவ்வளவு நாளுக்குத்தான் சாப்ட்வேர் எஞ்ஜினீயருங்கல்லாம் இந்தமாதிரியே சொல்லிட்டிருப்பீங்க? நானும் சாப்ட்வேர் எஞ்ஜினீயரா இருந்துதான் இன்னைக்கு பிராஜக்ட் மேனேஜரா இருக்கேன். எனக்கு வீடு இல்லையா குடும்பம்தான் இல்லையா? குடும்பமும் வேலையும் இரண்டு துருவங்கள் போலத்தான். ஆனா அது ரெண்டுக்கும் நீங்க கொடுக்கிற ரேஷியோ சரியா இருக்கனும். அதவிட்டுட்டு குடும்பத்தை விட்டுட்டு வேலை செஞ்சேன்னு சொல்றவனும் வேலையை விட்டுட்டு குடுப்பத்த பார்த்தேன்னு சொல்றவனும் பைத்தியக்காரணுங்க. உனக்கு நேர நிர்வாகம் தெரியலேன்றதுதான் உண்மை."
பிராஜக்ட் மேனேஜர் கூறிவிட்டுப் போய்விட, அவரின் கூற்றிலிருந்த உண்மை சந்திரசேகரினின் நெஞ்சை சுட்டது. ஆமாம், எனக்கு நேர நிர்வாகம் தெரியவில்லைதான். எது முக்கியமோ அதற்கு அதிக நேரம் ஒதுக்க மறந்துவிட்டேன். தற்காலிக சந்தோஷமான பணத்திற்கும் வேலைக்கும் பார்த்து நிரந்தர சந்தோஷமான குடும்பத்தையும் பாசத்தையும் மறந்துட்டேன். இன்னைக்கு கூட சுபாஷ் எவ்வளவு ஆசையா ஒரு நாள் என்கூட இருங்கப்பான்னு கேட்டான். இனிமே அலுவலகத்திற்கு கொடுக்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு வீட்டிற்குத்தான் அதிக நேரம் கொடுக்க வேண்டும். அப்பத்தான் ரேஷியோ சரியா இருக்கும்.
அப்பாவும் மகனும் மதியான வெயிலையும் மதிக்காமல் அபார்ட்மென்ட் பார்க்கில் துள்ளிக்குதித்து கால்பந்து விளையாடுவதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தான் அபார்ட்மென்ட் வாட்ச்மேன்.