இந்தப் பதிவு விழிகளில் துளிகள் பிரியுமோ? தொடரிலுள்ள 2 பதிவுகளில் 2 ஆவது பதிவு

அன்று…

சோமேஸ்வரனுக்கு இந்த ஆண்களின் அநாதை விடுதி பயத்திற்கு பதில் ஆச்சரியத்தையே அதிகம் தந்தது. ஆண்களின் அநாதை விடுதி என்று பெயரிடப்பட்டிருந்தாலும் இந்த விடுதியின் மூலம் பயன்பெறுபவர்களில் பெரும்பாலானோருக்கு அம்மாவோ இல்லை அப்பாவோ அல்லது இரண்டு பேருமோ இருப்பது தெரிந்து ஆச்சரியமடைய விடுதியில் இவனுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே சேர்ந்திருந்த இவனுடைய அண்ணன் சங்கரன் அந்த சந்தேகத்திற்கு விடையளித்திருந்தான்.

“சோமு, இது அநாதைகளின் விடுதின்னு நினைச்சுகிட்டு நம்ம அம்மா இப்படி ஒரு இடத்துக்கு வந்து சேர்த்துட்டாங்களேன்னு கவல படாதே. இதோட பெயர்தான் அப்படி. ஆனா அநாதைகளுடன் அப்பா அம்மான்னு ரெண்டு பேரும் இருந்தாலும் படிக்க வைக்க முடியாத அளவு ஏழையா இருக்கிறவங்களுக்கும் இங்கே இடமுண்டு. அம்மா என்னிய இங்க சேர்த்தபோ நான்கூட என்னடா நம்ம அம்மா இப்படி செஞ்சிடுச்சேன்னு கவல பட்டேன். ஆனா இங்க இருக்கிற வசதிங்களயெல்லாம் பார்த்தபிறகு படிக்கறதுக்கு இந்த அளவுக்கு சிறப்பான இடம் வேற எங்கேயுமே இல்லன்னுதான் எனக்கு தோணுச்சு. நம்மள மாதிரி ஏழைப் பசங்களுக்கு இந்த இடம் ஒரு பெரிய வரப்பிரசாதம்டா. இதை சரியா உபயோகப்படுத்திக்கிட்டியின்னா உன்னோட வாழ்க்கையில முன்னேறி வந்துடுவ. அம்மா அப்பாவை நாம நல்லபடியா வச்சுக்கலாம். சரியா?”

அப்போது சரியென்று தலையை ஆட்டிய சோமேஸ்வரனுக்கு அப்போது புரியாததெல்லாம் போகப் போக மெல்ல புரிய ஆரம்பித்தது. இந்த விடுதியை நடுத்துபவர் ஒரு பிரெஞ்சு பாதிரியார் என்பதாலும் இந்த விடுதிக்கு சொந்தமான எதிரிலிருக்கும் கிறிஸ்தவ ஆலயம் பிரெஞ்சு ஆதிக்கத்தின் போது கட்டப் பட்ட பழங்காலத்தது என்பதாலும் ஆலயத்திற்கு வருபவர்கள் மட்டுமின்றி பிரான்சு நாட்டிலிருப்பவர்களும் பண உதவிகளை செய்துவந்ததால் விடுதியின் செலவுகளுக்கு ஒரு பஞ்சமும் இன்றி இருந்ததால் பல வசதிகளை செய்து கொடுக்க பாதிரியாரால் முடிந்திருந்தது. இதேமாதிரி ஒரு விடுதி தமிழ்நாட்டில் தமிழர்களால் நடத்தப்பட்டால் இவ்வளவு சிறப்பாக நடத்த முடியுமா என்பது மிகவும் சந்தேகம்தான்.

18 அடிக்கு குறையாத உயரம் கொண்ட மாடிகளற்ற விடுதியின் அமைப்பே அவனுக்கு ஆச்சரியத்தை கொண்டு வந்தது. விடுதியின் வாசல் சுர் கூப் வீதிக்கு வலது புறத்தில் கற்தூண்களுக்கு நடுவில் கட்டைகளாலேயே அமைக்கப்பட்டு அதில் கொடிகள் படர்ந்து தெரிந்தது. வீதிக்கு இடது புறத்தில் அழகான பிரெஞ்சுக் கலையின் ஆதாரமாக தோன்றிய ஆலயம் விஸ்தாரமாக தெரிந்தது.

வாசலைத் தாண்டி உடனே தெரிந்த இரண்டு மாடி கட்டிடத்தின் கீழ்தளத்தின் இடது ஓரத்தில் சமையலுக்கான பொருள்களும் பல அத்தியாவசிய பொருள்களும் இருந்த கிடங்கு இருக்க அதை ஒட்டியே வாசலுக்கு நேராக வீற்றிருந்தது பாதிரியாரின் உணவு அருந்தும் அறை. அந்த அறைக்குப் பக்கத்தில் வாசலுக்கு நேரெதிரில் இருந்த ஒரு பெரிய அறையில் என்ன இருக்கின்றது என்பது இன்னமும் சோமேஸ்வரனுக்குத் தெரியாது. அது எப்போதும் பூட்டப்பட்டேயிருந்தது. அந்த அறைக்கு அடுத்தது வலது புற ஓரத்தில் வளைந்து சென்ற மாடிப்படிக்கட்டுகள் முதல் மாடியிலிருந்த நீண்ட வராந்தாவிற்கு செல்ல. அங்கே விழுந்துவிடாமலிருக்க மாடியோரமாக அமைக்கப்பட்டிருந்த கைப்பிடி சட்டங்களுக்கு இடையிடையே இருந்த சிறிய கல் தூண்களின் மேல் சிறிய பூந்தொட்டிகள் அமைக்கப்பட்டு அழகாக தெரிந்தது. வராந்தாவின் வலது புறம் ஒரு நீண்ட அறையைக் கொண்டிருந்தாலும் அது எப்போதும் மூடியே வைக்கப்பட்டிருந்தது. வராந்தாவின் முடிவில் வலதுபுறத்தில் தெரிந்த அறையில்தான் பாதிரியார் முழு நேரமும் இருப்பார். அவருடைய படிப்பு, வேலை, வெளியாட்களை சந்திப்பது போன்றவை அனைத்தும் அந்த அறையில்தான். வளைந்து சென்ற மாடிப்படிகள் முதல் மாடி முடிந்ததும் நேரான ஒரே மாடிப்படியாக மொட்டை மாடிக்குப் போனது.

இந்த கட்டிடத்தின் இடது ஓரத்தில் ஒரு மரத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த போர்டுக்கு நேரே ஒரு சிறிய வாசல் தெரிய அதனுள்ளே நுழைந்தால் இடது பக்கம் நீண்டு விரிந்து மாடிகளின்றி 18 அடிக்கு உயரமாகத் தெரிந்த கட்டிடம்தான் விடுதி. வலது புறம் முழுவதும் விளையாட்டுத் திடல் போல விரிந்திருக்க நட்ட நடுவில் ஒரு பெரிய ஆலமரம் பரந்து விரிந்து தெரிந்தது. அது வேர்களை நீட்டி இரண்டு கட்டடங்களையும் விழுங்கிவிடாமலிருக்க வேண்டி அதைச்சுற்றி கல்லாலான ஒரு குட்டிச் சுவரை கட்டியிருந்தனர். மரத்தைத் தாண்டி வலது புறத்தில் இரண்டு இரும்பாலான உறுதியான கம்பிகள் ஒரு ஊஞ்சலை கொண்டிருந்தது. ஊஞ்சலைத்தாண்டி தெரிந்த சாலையின் இடது பக்கத்தில் ஆலய பராமரிப்பாளர், விடுதியின் காப்பாளர் மற்றும் சமையல்காரி போன்றோர் குடும்பத்தோடு தங்கியிருக்க வழிசெய்யும் சிறு சிறு வீடுகள் கட்டப்பட்டிருக்க வலது புறத்தில் நீண்ட ஒரு கட்டிடம் தெரிந்தது. அது ஒரு குட்டி திரையரங்கம் என்றும் அங்கே பாதிரியார் தன் நண்பர்களுடனும் அவ்வப்போது விசிட் செய்யும் பல முக்கியஸ்தரர்களுடனும் பிரெஞ்சுப் படங்களை பார்ப்பது வழக்கமென்றும் அண்ணன் சொல்லிக் கேட்டிருக்கின்றான் சோமேஸ்வரன். விடுதியின் வாசலுக்கு முன்னால் நடுமையமாக வீற்றிருந்த அந்த ஆலமரத்திற்கு எதிரில் நேர்ப்புறமாக வீற்றிருந்த சிறிய அறைதான் சமையலறை. அதை ஒட்டி இடது புறமாக இருந்த சிறிய வாசலில் நுழைந்து பார்த்தால் நீண்டு விரிந்து தெரிவதுதான் காலைக்கடன்களுக்கும் மாலைக்கடன்களுக்குமான இடம். சிறிய வாசலைத்தாண்டி இடது புறத்தில் நான்கு சிறு சிறு கழிவறைகள் கட்டப் பட்டிருக்க அதை ஒட்டி இடது புறத்தில் ஒரு இடம் தெரிய அதில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்த கயிறுகள் அது துணி காயவைக்கும் கொடிகள் என்பதை அறிவித்தது. அதைத் தாண்டி வலது புறமாக இரண்டு நீண்ட கல் தொட்டிகள் கட்டப்பட்டிருக்க இரண்டுக்கும் நீர் பாய்ச்சும் இயந்திர மோட்டார் பொருத்திய இடது பக்கச்சுவர் மழையிலிருந்து தப்பிக்க வேண்டி ஒரு சிறிய மரத்தாலான கூரையுடன் தெரிந்தது. ஒட்டி நீண்டிருந்த கல் தொட்டிகளைச் சுற்றி வட்ட வடிவமாக கான்க்ரீட் தரை தெரிய அதில் திசைக்கொன்றாக துணி துவைக்கும் கற்கள் நடப்பட்டிருந்தன. வலது பக்கத்தில் சமையலறையின் சுவற்றை ஒட்டி தெரிந்த இடத்தின் நேரெதிரில் சில ஜன்னல்கள் தெரிய அது ஒரு பாலர்கள் படிக்கும் பள்ளியின் ஜன்னல்கள் என்பதும் அதில் வசதியுள்ளவர்களின் குழந்தைகள் படிக்கின்றனர் என்பதும் சோமேஸ்வரன் பின்னால் அறிந்துகொண்ட விஷயம்.

விடுதியினுள் நுழைந்தவுடன் வரவேற்பது வலது பக்கம் இருக்கும் ஒரு பெரிய கதவும் இடது பக்கம் நீண்டு வளர்ந்திருந்த சாப்பாட்டு மேஜையும்தான். நீண்டு வளர்ந்த சாப்பாட்டு மேஜையில் மரத்தாலான பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. அந்த விடுதியின் ஒரு ஆச்சரியமான விதிமுறை என்னவென்றால் எந்தக் காலத்திலும் மொத்தமாக அங்கே 40 பசங்களுக்கு மட்டுமே அனுமதி என்பதுதான். ஒவ்வொரு வருஷமும் படிப்பை வைத்து நன்றாக படிக்காத பசங்கள் வெளியேற்றப்பட்டால்தான் புதிய பசங்கள் சேர்க்கப்படுவர். எந்த வருஷத்திலும் 40க்கு மேற்பட்ட பசங்களை அனுமதிக்காததில் ஒரு ஒழுங்கும் கவனிப்பும் தெரிந்தது. அங்கே இருந்தவை அனைத்துமே 40 பசங்களை மனதில் வைத்து அவர்களுக்கென சரியாக அமைக்கப்பட்டிருந்தது. விடுதியின் கதவைத்தாண்டி உள்ளே நுழைந்ததுமே வலது பக்கத்தில் தெரிவதுதான் துணிகள் மற்றும் பலவிதமாக பொருட்களை பையன்கள் வைத்துக்கொள்ளும் அறை. அந்த அறையினுள் இடது பக்க சுவற்றில் மொத்தம் 40 மரப்பெட்டிகள் அடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பெட்டிக்கும் எண் கொடுக்கப்பட்டிருந்தது. இரண்டு வரிசையில் மேலும் கீழுமாக அடிக்கப்பட்டிருந்த பெட்டிகள் இருபது நீண்டு இருந்தது. சோமேஸ்வரனுடைய எண் 18. அவனுடைய பெட்டிக்கான பூட்டும் சாவியும் அவனுக்கு வழங்கப்பட்டிருந்தது. மாற்றுச்சாவி எப்போதும் விடுதியின் காப்பாளர் பரபாஸிடம் இருக்கும். இது போதாமல் துண்டுகளை போடுவதற்கு என்று வலது பக்க சுவற்றை ஒட்டி நீண்ட கயிறுகள் கட்டப்பட்டிருந்தன.

நீண்டு வளர்ந்திருந்த சாப்பாட்டு மேஜையை அடுத்து தெரிந்த அறைதான் தட்டுகள் மட்டும் கிளாஸ்கள் வைக்கும் அறை. அந்த அறையில் குறுக்கே நீண்ட சட்டங்கள் அடிக்கப்பட்டு ஒவ்வொன்றின் மேலும் எண்கள் பொறிக்கப்பட்டிருந்தன. தட்டுகள் மட்டும் கிளாஸ்களில் கூட எண்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எல்லாமே 40 எண்கள்தான். சாப்பாட்டு மேஜையைத் தாண்டி உள்ளே நுழைந்தால் விரிந்து தெரிந்த வராந்தாவின் மையத்தில் ஒரு மேஜைப் பந்து விளையாட்டு மேஜை தெரிந்தது. அந்த மேஜையைத் தாண்டி இடது பக்க ஓரத்தில் தெரிந்த அறை ஒரு சிறிய ஆலயம் போலிருக்கும் இயேசு சிலை முதற்கொண்டு வீற்றிருக்கும் அந்த அறையில்தான் ஒரு பெரிய கால்களால் இயக்கும் ஆர்மோனியம் இருந்தது. கோயிலில் காலையில் நடக்கும் பூஜைகளில் பாட்டுப் பாடும் மாணவர்களுக்கு பாட்டு கிளாஸ் நடப்பதும் அங்கேதான்.

பந்து விளையாட்டு மேஜையைத் தாண்டி தெரிந்த நீண்ட இடத்தில் இரண்டு பேர் உட்காரக்கூடிய, உட்காரும் பெஞ்சும் படிக்கும் மேஜையும் அதனடியில் புத்தகம் வைத்துக்கொள்ள இடமும் கொண்டு அமைக்கப்பட்டிருந்த படிப்பு மேஜைகள் இடது வலமுமாக இரண்டாக போடப்பட்டிருக்க அதற்கு நடுவில் இரண்டு பேர் நடக்கக்கூடிய அகலத்தில் ஒரு வழி நீண்டு இருந்தது. அந்த வழியின் வலது புற முடிவில் நீண்டு நான்கு பேர் அமரக்கூடிய ஒரு மேஜையும் தெரிந்தது. இடது புற ஓரத்தின் நடுமையத்தில் ஒருவர் உட்காரக்கூடிய பெரிய மேஜையில்தான் பரபாஸ் எப்போதும் வீற்றிருந்து மாணவர்களை கண்கானிப்பார். அவருடைய மேஜைக்குப் பின்னால் தெரிந்த அறையில்தான் படுக்கைக்கான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கேயும் எண்கள்தான். உள்ளே பாய், தலையனை மற்றும் போர்வை ஒவ்வொரு மரச்சட்ட ரேக்குகளிலும் தெரிந்தது. பரபாஸின் மேஜைக்குப்பின்னாலிருந்த படுக்கைப் பொருட்களின் அறைச்சுவற்றை ஒட்டியமாதிரி தெரிந்த எலக்டிரிக் சுவிட்ச் போர்டுதான் மொத்த விடுதிக்குமான மின்சார வழங்குதலை செய்கின்றது. அந்த போர்டின் மேல் ஒரு இஞ்ச் அளவிற்கு தடிமனாகவும் ஒன்றரை மீட்டர் நீளமுமுள்ள ஒரு நீண்ட கழி தெரிந்தது. அந்தக் கழிக்கு எண்ணை போட்டு பளபளவென்று வைத்திருந்த பரபாஸ் மாணவர்களை கண்டிக்க அதை எப்போதும் உபயோகப்படுத்துவது உண்டு. அந்தக் கழியை அவர் கையிலெடுத்தாலே பல மாணவர்கள் கால்சட்டையிலேயே மூத்திரம் போய்விடுவார்கள். அவ்வளவு பயம் அந்தக் கழியிலும் அந்தக் கழியைப் பிடித்திருந்த கையின் மேலும் அந்தக் கைக்கு சொந்தமான ஈவு இரக்கம் இல்லாத பரபாஸின் மேலும் மாணவர்களுக்கு இருந்தது.

சேர்ந்ததிலிருந்து ஒவ்வொன்றும் புரியாத புதிராகவே இருந்தது சோமேஸ்வரனுக்கு. அந்த விடுதியின் ஒவ்வொரு செயலும் கண்கானிக்கப்பட்டு முறையாக வைத்திருந்தது அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. பல அறைகள் பூட்டியே வைக்கப்பட்டிருந்தாலும் மீதியுள்ள இடங்களெல்லாம் மாணவர்கள் செல்ல சுதந்திரம் இருந்தது. நேரங்களும் சரியாக வழிவகுக்கப்பட்டிருந்தன. காலையில் ஐந்தரை மணிக்கே மாணவர்கள் எழுந்துவிட வேண்டும். விடுதியின் பந்து விளையாட்டு மேஜையைச் சுற்றியிருந்த பெரிய வராந்தாவில்தான் மாணவர்கள் இரவில் உறங்குவார்கள். ஒவ்வொருவர்க்கும் உறங்கும் இடம் கூட பிரித்துக்கொடுக்கப்பட்டிருந்தது. வராந்தாவிலிருந்த பெரிய பெரிய தூண்களின் ஒரு தூணுக்கு பின்புறம்தான் சோமேஸ்வரனின் உறங்குமிடம். காலையில் ஐந்தரை மணிக்கு பரபாஸ் உள்ளே நுழைந்து மணியடிக்க மாணவர்கள் எழுந்து பாய் தலையணை மற்றும் போர்வைகளை சுருட்டி மடித்து படுக்கைப் பொருட்களை வைக்கும் அறையில் வைத்துவிட்டு மாணவர்கள் ஒன்றாக சோந்து ஓட ஆரம்பிப்பார்கள் அந்த ஓட்டம் அங்கே ஆரம்பித்து ஒருவர் பின் ஒருவராக ஒரு தொடர் ஓட்டம் போல நீண்டு வாசலுக்கு வந்து வாசலைத்தாண்டி தெருவில் நுழைந்து தெருவிற்கு மறுபுறமிருந்த ஆலயத்தின் பெரிய சுற்றத்தில் மூன்று முறை ஓடியபின் ஆலயத்தின் பின்னால் விரிந்திருந்த சிறிய மைதானத்தில் உடற் பயிற்சிகள் செய்ய வேண்டும். ஆறு மணிக்குள் இவை அனைத்தையும் முடித்துவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்து தென்னந்துடைப்பங்களை எடுத்து விடுதி முழுவதும் வெளியேயும் உள்ளேயும் பெருக்க வேண்டும். விடுதியின் முன்னாலிருக்கும் செடிகள் முதற்கொண்டு அனைத்து மரங்களுக்கும் நீரூற்ற வேண்டும். பின் சரியாக ஆறரை மணிக்கு குளிக்கப் போய்விட வேண்டும் பதினைந்து நிமிஷங்களில் குளித்துமுடித்துவிட்டு தலை துவட்டி உடல் துவட்டி பள்ளி செல்லும் சீருடைகளை அணிந்துகொண்டு உள்ளே வந்து படிப்பு அறைக்கு சென்று அவரவர் மேஜையில் அமர்ந்து எட்டு மணிவரை படிக்க வேண்டும். படிக்கும் போது அந்தப் புறம் இந்தப் புறம் தலையைத் திருப்பினாலோ மற்றவரிடம் பேச முயன்றாலோ பரபாஸின் நீண்ட கழிதான் பதில் சொல்லும். இரண்டிரண்டாக போடப்பட்ட மேஜைகளுக்கு நடுவிலிருக்கும் வழியில்தான் பரபாஸ் திரும்பத்திரும்ப நடந்து மாணவர்களை கண்காணிப்பார். சரியாக எட்டு மணிக்கு சாப்பாடு ஒரு மரத்தாலான கையால் தள்ளக்கூடிய வண்டியில் வைக்கப்பட்டு சமையல் செய்யும் ஆயாவால் கொண்டு வரப்படும். அதற்குள் மாணவர்கள் சென்று தங்களுடைய தட்டு கிளாஸ்களை எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்துவிட சிறிய பிரேயருக்குப் பின் அனைவரும் சென்று சாப்பாட்டை வாங்கிக்கொண்டு வந்து சத்தமின்றி அமைதியாக சாப்பிட வேண்டும். எட்டரை மணிக்கெல்லாம் அணைத்தும் முடித்துவிட்டு புத்தக பைகளை சுமந்தபடி வெளியே வந்து அவரவர் படிக்கும் பள்ளிகளுக்கு விரைய வேண்டியதுதான். நன்றாக படிக்கும் மாணாக்கர்கள் ஒரு ஆங்கில கான்வென்டில் சேர்க்கப்பட, கொஞ்சம் மந்தமான மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். சோமேஸ்வரன் புதுவையின் புகழ்பெற்ற அரசு பள்ளியான வ.உ.சி ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்தான். அவனுடைய அதிர்ஷ்டம் அவனுக்கு பள்ளி பாதி நாள்தான். மதியமே மீண்டும் விடுதிக்கு வந்துவிடுவான். அவனுடன் சேர்த்து இரண்டு மாணவர்களும் அவனுடைய அண்ணனும் மட்டுமே வ.உ.சியில் படித்துக்கொண்டிருந்தனர். வ.உ.சி பள்ளியின் ஒரு வித்தியாசமான வழக்கம், 6வது முதல் 8வது வரை படிக்கும் மாணவர்களுக்கு காலையிலும் 9வது மற்றும் 10வது படிக்கும் மாணவர்களுக்கு மதியத்திலும் என்று அரை நாள் மட்டுமே நடத்தப்பட 11வது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் காலை மாலை என்று இரண்டு வேளையும் பாடம் நடத்தப்பட்டது.

மாலையில் மாணவர்கள் அனைவரும் 7 மணிக்குள் திரும்ப வந்துவிட வேண்டும். சரியாக 7 மணிக்கு அனைவரும் குளிக்கச் சென்று குளித்துமுடித்துவிட்டு பதினைந்து நிமிஷங்களுக்குள் மீண்டும் வந்து பாடம் படிக்கும் அறைக்குச் சென்றுவிட வேண்டும். சரியாக எட்டரை மணிக்கு சாப்பாட்டு நேரம். 9 மணிக்கு அனைவரும் தூங்க சென்றுவிட வேண்டும். இரவில் படிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கும் அனுமதி இல்லை. வேண்டுமானால் காலையில் சீக்கிரம் எழுந்து படிக்கலாம். இப்படி ஒவ்வொரு அசைவும் தீவிரமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட விதம் சோமேஸ்வரனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

படிக்க புத்தம், இருக்க இருப்பிடம், சாப்பிட உணவு, உடுத்த ஒரு ஜோடி சாதாரண உடைகளும் இரண்டு ஜோடி பள்ளி சீருடையும், குளிக்க சோப்பு, தலைக்கு தேய்க்க எண்ணெய், பல் விளக்க பல்பொடி, துணிதுவைக்க சோப்பு, படுக்கை, தலையனை, போர்வை இப்படி அனைத்தும் இலவசமாக கிடைத்த அந்த விடுதி அவனுக்கு சொர்க்கம் என்றுதான் தோன்றியது. இல்லை இல்லை, ஆரம்பத்தில் தோன்ற வைத்தது…

இன்று…

சென்னையின் அதிகாலை விடிந்த நேரம் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி கம்பீரமாக வீற்றிருந்த மருந்தீஸ்வரர் கோயிலின் ஆலய மணியில் திருவான்மியூர் விழித்துக்கொண்டது. கோயிலுக்கு பின்னால் மீனவரின் கடற்கரையை நோக்கி நீண்டிருந்த சாலையின் மையத்திலிருந்த அந்த சிறிய பங்களாவின் வெளிச்சங்கள் உயிர்பெற்றன. வாசலில் வீற்றிருந்த நேபாளி கூர்கா தூக்கம் கெட்ட கண்களுடன் கதவைத்திறந்துவிட வெளியில் வந்த சாம் ஆன்டனிக்கு இருபத்தியெட்டு வயது.

பளீரென்ற வெள்ளை நிறத்தில் தெரிந்த பனியன் மற்றும் காற்சட்டையில் அவனின் ஆரோக்கியமான உடம்பு திமிறிக்கொண்டிருந்தது. கால்களில் வெள்ளை நிறத்தில் சாக்ஸும் அதை உள்வாங்கிய விளையாட்டு ஷுவும் தெரிய அதற்கு மேலே தெரிந்த காற்சட்டைக்கும் சாக்ஸுக்கும் இடைப்பட்ட கால்கள் உறுதியைக் காட்டின. இடுப்பு சிறுத்து இருக்க அதற்கு மேலே விரிந்த பரந்த மார்பும் இடுப்புக்கு கீழே விரிந்திருந்த உறுதியான தொடைகளும் அவன் ஆரோக்கியமான இளைஞன் என்பதுடன் உடற்கட்டான இளைஞன் என்பதையும் பறைசாற்றிக்கொண்டிருந்தன. வெள்ளை பனியனுடன் போட்டி போடுவது போன்ற சிவந்த நிறத்தில் உடம்பு விறைத்து நீண்டு தெரிய உடலின் ஆதாரமாக வீற்றிருந்த தலை மட்டும் சிறிது கருமை நிறம் படிந்து இருந்தது. சீராக எண்ணெய் தடவி வாரப்பட்ட தலைமுடி நெற்றியின் வலது பக்க வகிட்டிலிருந்து இரண்டு பக்கமும் செங்குத்தாக அழகாக இறங்கி கழுத்தை மறைக்க பின்னாலிருந்து பார்ப்பவர்களின் மனதில் பெண்தான் இப்படி ஆண் வேடமணிந்து வந்துவிட்டாளோ என்ற சந்தேகத்தை விளைத்துக்கொண்டிருந்தது. அவன் தலையசைந்த புறமெல்லாம் அசைந்து அழகுக்கு அழகுகூட்டிய அந்த கூந்தலைப் பார்த்தவர்களுக்கு எண்ணெய் போட்டு சீவினாலும் இப்படி அலையும் முடி ஆச்சரியத்தை கொடுத்தது. பெரியதாக தெரிந்த நெற்றியைத் தாண்டி வில்போல விரிந்திருந்த தடிமனான புருவங்களுக்கு அடியில் எவரையும் கவர்ந்திழுக்கும் காந்தக் கண்கள் கூர்மையுடன் தெரிந்தன. முகத்திற்கு பொருந்தாதது போல தடிமனாக விரிந்து இருந்த மூக்கு அவனுக்கு ஆண்டவன் வைத்த திருஷ்டிப் பொட்டு. ஆனால் அந்த திருஷ்டிப்பொட்டையும் காணாமல் செய்துவிடும் மீசையற்ற தடித்த கருமையான உதடுகள் சிவந்த உதடுகள் மட்டுமே கவர்ச்சியாக இருக்கும் என்றும் யோசிப்பவர்களை திரும்பவும் மாற்றி யோசிக்க வைத்தது. காதுகளில் எப்போதோ சின்ன வயதில் போட்ட துளை சிறிதாக ஆனால் இன்னமும் கண்களுக்குத் தெரிய அதில் பேஷன் என்ற பெயரில் எதையும் மாட்டாதது அவனுடைய இயற்கையான அழகுக்கு கட்டியம் கூறியது. பெயருக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் கழுத்தில் உத்திராட்ச மாலை ஒன்று வீற்றிருந்தது. வலது கையில் ஒரு செப்புக் காப்பு ஓம் நம சிவாய என்று ஹிந்தியில் எழுதப்பட்டு தெரிந்தது. இடது கையில் வீற்றிருந்த ரோலக்ஸ் வாட்ச் அவனுடைய செல்வசெழிப்பை மட்டுமின்றி நேரம், நாள், கிழமை, மற்றும் மாதம் போன்றவற்றையும் காட்டிக்கொண்டிருந்தது.

நமது பார்வைக்கு அதிக நேரம் தாமதிக்காத சாம் ஆன்டனி திரும்பி மீனவர் கடற்கரை செல்லும் சாலையில் ஓட ஆரம்பித்துவிட்டான். அவன் திரும்பி வரும்வரை வீட்டையும் அங்கே வாழும் மற்ற மனிதர்களையும் ஒரு பார்வை பார்த்துவிடுவோம்.

வாசல் கேட்டைத் தாண்டி கூர்காவின் அனுமதியில்லாமலேயே உள்ளே நுழைந்து பார்த்தால், இரண்டு புறமும் சீராக அமைக்கப்பட்ட புல்வெளியும் வலது புறம் புல்வெளியைத் தாண்டி வீற்றிருந்த கார் ஷெட்டும் அதில் வீற்றிருந்த ஹோண்டா அக்கார்டும், ஸ்கார்பியோவும், மாருதி வேகன் ஆரும், ஹுயுண்டாய் ஆக்சென்டும், செவர்லே ஏவியோவும், செவர்லே ஸ்பார்க்கும் அந்த வீட்டில் வசிக்கும் பல்வேறு மனிதர்களின் இரசனைகளையும் தேவைகளையும் மெளனமாக காட்டிக்கொண்டிருந்தன. புல்வெளி முடிந்த சரளைக்கற்கள் பதித்த பரப்பின் மையத்தில் வீற்றிருந்த வட்டவடிவ நீறூற்றின் மையத்தில் வீற்றிருந்த இரண்டு டால்பின்களில் வாய் வழியே நீர் பீய்ச்சியடிக்க அது சரியாக வட்டவடிவ நீறூற்றிலேயே விழுந்தது. அதைத் தாண்டி தெரிந்த நான்கு படிக்கட்டுக்களைத் தாண்டித் உயரமாகத் தெரிந்தது அந்த சிறிய பங்களா. முதல் மாடியின் மையத்திலிருந்த வரவேற்பறையைத் தாண்டி பின்புறம் விரிந்திருந்த சாப்பாட்டு அறையும் அதில் போடப்பட்டிருந்த நீள்வட்ட மேஜையும் இந்த வீட்டில் வசிப்பவர்கள் அதிகம் என்பதை பறைசாற்றிக்கொண்டிருக்க அதை ஒட்டித் தெரிந்த சமையற்கட்டும் ஒரு விரிந்து பரந்து தெரிந்தது. நுழை வாயிலுக்கு வலது பக்கத்தில் தெரிந்த அறையில்தான் சாம் ஆன்டனியின் அப்பாவும் அம்மாவும் உறங்கும் படுக்கையறை என்பது தெரிய அதில் நுழைவது நாகரீகமாக இருக்காது என்று இடது பக்கம் நீண்டு விரிந்த ஒரு அறைக்குள் நுழைய அங்கே சிறிய மரத்தாலான ரேக்குகளில் பல்வேறுவிதமான ஹாலிவுட், பாலிவுட் மற்றும் கோலிவுட் பட சிடி மற்றும் டிவிடிக்கள் அழகாக தெரிந்தன. அறையின் ஒரு பக்கத்து சுவரை முழுவதும் அடைத்துக்கொண்டு பெரிய எல்.சி.டி திரை விரிந்திருந்தது. அறையின் குறுக்கே போடப்பட்டிருந்த வசதியான சோபாக்களைத் தாண்டி ஒரு பெரிய டிவிடி பிளேயரும் அறையின் மூலைக்கொன்றாக சுவற்றில் வீற்றிருந்த பெரிய ஸ்பீக்கர்களும் அந்த அறை ஒரு குட்டி திரையரங்கம் என்பதை உறுதிசெய்தன.

முதல் மாடி முழுவதும் பெரிய பெரிய அறைகள் படுக்கை மட்டும் கழிப்பறை குளியலறைகளுடன் சேர்ந்து தெரிந்தது. ஒரு மாடிக்கு மூன்று வீதம் இரண்டு மாடிகளில் ஆறு அறைகள் வசதியாகத் தெரிந்தது. மூன்றாவது மாடியின் ஒரு பகுதி முழுவதையும் ஆக்ரமித்துக்கொண்டிருந்த உடற்பயிற்சிக் கூடத்தில் சாம் ஆன்டனியின் அண்ணன்கள் இருவரும் தம்பிகள் இருவரும் தீவிரமாக உடற்பயிற்சி செய்துகொண்டிருக்க அதைத் தாண்டி இடது புறத்தில் கிழக்கு திசை நோக்கி ஆடம்பரமாக ஒரு சிறிய கோயில் அளவிற்கு இருந்தது சாமியறை. உள்ளே பலவிதமான சிலைகளும் படங்களும் வியாபித்திருக்க சுவர் முழுவதும் படங்களில் பல்வேறுவிதமான சாமிகள் அருள்பாலித்துக்கொண்டிருந்தனர். பூஜையறையைத் தாண்டி இருந்த சிறிய அறையின் அமைதியே அதை யோகாசனம் மற்றும் தியான அறை என்று கூறிக்கொண்டிருந்தது. அந்த அறையின் நடுவில் ஆச்சரியப்படும்விதத்தில் ஒரு சிவலிங்கம் வீற்றிருந்தது தியானத்திற்கு மதம் இல்லை என்பதை சந்தேகத்துக்குரியதாக்கியது. மூன்றாவது மாடியைக் கடந்த நான்காவது மாடி முழுவதும் மொட்டை மாடி என்பது தெரிய அதில் சில ஆன்டனாக்களும் துணி காய வைக்கும் கொடிகளும் பெரிய தண்ணீர்த் தொட்டியும் தெரிந்தது.

இரண்டாவது மாடியில் அண்ணன்கள் இருவர் மற்றும் சாம் ஆன்டனியின் அறையும் இருக்க மூன்றாவது மாடியில் தம்பிகள் இருவர் அறையும் மூத்த அக்காள் அறையும் இருந்தது. அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்ட சாம் ஆன்டனியின் அம்மாவும், அக்காவும் மூத்த அண்ணன் மனைவியான பெரிய அண்ணியும் சமையலறையில் மூழ்கியிருந்தனர். அண்ணியும் அக்காவும் உதவி மட்டும் செய்துகொண்டிருக்க பிரதான சமையலை அம்மா மட்டும் செய்துகொண்டிருந்தாள். காலைத் தூக்கம் இன்னமும் கண்களிலிருக்க மெல்ல சாப்பாட்டு அறைக்குள் நுழைந்தார் சாம் ஆன்டனியின் அப்பா.

“ஏம்மா, கொஞ்சம் காபித்தண்ணி எடுத்துவாயேன்…”

அவரின் ஈனக்குரலுக்கு முதலில் செவிசாய்த்தவள் சாம் ஆன்டனியின் அண்ணிதான்.

“இருங்க மாமா, எடுத்திட்டு வரேன். அத்தை நீங்க இன்னும் ஒரு மணிநேரமாவது தூங்குவீங்கன்னு சொல்லியிருந்தாங்க அதான் முன்பே எடுத்து வரவில்லை.”

“இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமாத்தாம்மா எழுந்துட்டேன். சின்னவனுக்கு பெண் பார்க்க போகனும் இல்ல.”

“ஏம்பா, பொண்ணு பாக்க போறது பத்து மணிக்கு நீங்க ஆறு மணிக்கே எழுந்திருக்கலன்னு யாரு கேட்டா?” உள்ளேயிருந்து அவரின் முதல் பெண் பதிலளித்தாள். அதற்குள் சாப்பாட்டறைக்குள் நுழைந்துவிட்ட அண்ணி சுடச்சுட காபியை அவருக்கு கொடுக்க. மகளுக்கு பதிலளிக்காமல் மருமகளை நன்றியுடன் பார்த்துக்கொண்டு காபியை அருந்த ஆரம்பித்துவிட்டார்.

“ஏம்மா, சாம் வந்துட்டானா?”

“இல்ல மாமா, வெளியே ஜாகிங் போயிருக்கிறவர் வர நேரம்தான். வந்தாலும் உடனே இங்க வரமாட்டார். அவர்தான் எப்பவுமே உடற்பயிற்சியும் தியானமும் முடிச்சிட்டு குளிச்சிட்டுத்தானே மறுபடியும் கீழே வருவார்?”

“ஆமாம்மா, இன்னைக்கு அவன்கிட்ட கொஞ்சம் பேசனும்னு இருந்தேன். வரட்டும் பேசிக்கிறேன்.”

அவர் காபியை அருந்துவதற்குள் திரும்பிவிட்ட சாம் ஆன்டனி யாரையும் கவனிக்காமல் படபடவென்று மாடிப்படியேறிவிட அவருக்கு கூப்பிடக்கூட அவகாசம் இல்லை. உதடுகளில் மெல்லிய புன்னகையை தவழவிட்டவாறு காபியை அருந்தி முடித்தார் அவர். சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து மாடிப்படிகளில் சத்தம் கேட்க அண்ணன் தம்பிகள் ஐவரும் ஒன்றாக கீழே இறங்கிக்கொண்டிருந்தனர். சத்தம் கேட்டவுடன் வெளியில் வந்து பார்த்த அம்மாவிற்கு வழக்கம்போலவே தனது ஐந்து மகன்களையும் கண்டு பெருமிதமாக இருந்தது.

“வாங்கப்பா, சாப்பாடு ரெடி. சாப்பிட்டுட்டு டி.வி பார்த்துட்டிருந்தீங்கன்னா ஒன்பதரை மணிக்கு எல்லாரும் கெளம்பிடலாம்.”

“எங்கம்மா போறோம்?” சாம் ஆன்டனி குழப்பத்துடன் கேட்க. அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் அம்மாள்.

“ஏம்பா, இன்னைக்கு உன்னோட சின்ன அண்ணனுக்கு பொண்ணு பார்க்க போறோமே? போன வாரம் நீ பிரான்சுலயிருந்து வந்தபோதே சொன்னோமே மறந்துட்டியா? இந்த முறை நீ திரும்பி போறதுக்குள்ள உன்னோட சின்ன அண்ணன் கல்யாணத்தை முடிச்சிடனும்னு நீதான சொல்லிக்கிட்டிருந்த?”

“ஐயோ, அம்மா மறந்தே போயிட்டேன். சாரிம்மா. சாரிண்ணா. எண்ணன்னா முகமே மாறிப்போயிடுச்சி?”

“டேய், அதுக்குப் பேரு வெட்கம்டா!” முகம் நிறைய சிரிப்புடன் இடைவெட்டிய அக்காளைப் பார்த்தபின்தான் சின்ன அண்ணனுக்கு வெட்கமே வந்தது.

“ஏங்க்கா, என்ன சீண்டலன்னா உனக்கு தூக்கமே வராதே?”

“ஓ! இன்னைக்குத்தான் அந்த சோக நாளா? பாவம்டா நீ!” அக்காளுடன் சேர்ந்து பெரிய அண்ணனும் கலாய்க்க அறையிலிருந்த அனைவருமே சிரித்துவிட அண்ணியின் முகம் மட்டும் சூடாகிவிட்டது.

“ஏங்க, உங்களுக்கு நான் என்ன கொடுமை செஞ்சேன்னு இப்படி சோக நாளுன்னு சொல்றீங்க?” அவளின் சூடான கேள்விக்கு உடனே பொட்டிப் பாம்பாய் அடங்கிய பெரிய அண்ணன் சமாளிப்பில் இறங்கினார்.

“ஐயோ, உன்னைச் சொல்வேணாடி, சும்மா அவன சீண்டறதுக்காக அப்படி சொன்னேன். இனிமே சொல்லல.”

சமாதானமடைந்தது போல அண்ணி திரும்பிக்கொள்ள தம்பிகள் இருவரும் சாமுடன் சேர்ந்துகொண்டு சின்ன அண்ணனை சீண்டிக்கொண்டே வர, சும்மா வெட்கப்பட்டுக்கொண்டே வந்த சின்ன அண்ணன் அப்பா ஏற்கனவே உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அமைதியாகிவிட மற்றவர்களும் மெளனமானார்கள்.

“ஏண்டா? நான் செவிட்டு மெஷின் மாட்டலன்னு நினைச்சீங்களா? நீங்க பேசிட்டிருந்த எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். கழுத மாதிரி வளர்ந்த பிறகு என்னடா வெட்கம்?”

“இல்லப்பா, சும்மா எல்லாரும் சீண்டினாங்க அதான். நீங்க ஏற்கனவே இங்க இருக்கீங்கன்னு நாங்க எதிர்பார்க்கல.”

“சரி சரி, டேய் சாம், உன்கூட கொஞ்சம் பேசனும். மாடிக்கு போகலாமா?”

“இது என்னப்பா புதுப் பழக்கம்? எதுவா இருந்தாலும் அண்ணங்க முன்னாடியே சொல்றதுதானே?”

“அது சரி, அண்ணனுங்களுக்கு தம்பி தப்பாம பொறந்திருக்க. நீ எப்ப கல்யாணம் செஞ்சுக்கப் போறன்றதப் பத்திதான் பேசப்போறேன்.”

இதைக் கேட்டவுடன் இதுவரை கலகலப்பாக பேசிக்கொண்டிருந்த சாம் ஆன்டனியின் முகம் இருண்டு போய்விட, கண்கள் வெறுப்பை உமிழ்ந்தன. பக்கத்தில் நின்றிருந்த அண்ணன்கள் இருவரும் அவனுடைய இரண்டு கைகளையும் அப்பாவிற்குத் தெரியாமல் அழுத்திக்கொடுத்தனர். தம்பிகள் இருவரும் அவன் என்ன சொல்லப் போகின்றான் என்பதுபோல அவன் முகத்தையே கண் இமைக்காமல் பார்த்தனர்.

தொடர் வரிசை<< விழிகளில் துளிகள் பிரியுமோ? – முன்னோட்டம்

அகஸ்ரீ

எழுத்தாளன், கவிஞன், கலைஞன், இசைஞன் மற்றும் சர்வ கலா இரசிகன்...

0 Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன