விழிகளில் துளிகள் பிரியுமோ? முன்னோட்டம்

கண்களின் ஓரம் துளிர்த்துவிட்ட கண்ணீரை கைகளால் துடைத்துக்கொண்ட வடிவுக்கரசி மறுபடியும் மனதிற்குள் கூறிக்கொண்டாள். நான் அழுவதைப் பார்த்துவிட்டால் அப்புறம் பாண்டிச்சேரிக்குப் போகவே மாட்டேன் என்று கூறிவிடுவான் சோமேஸ்வரன். அப்புறம் அவன் படிப்பு என்னாவது? பாசம் இருந்தால் மட்டும் போதுமா?

விழிகளில் துளிகள் பிரியுமோ? முன்னோட்டம்
புதுவையில் உள்ள தேவதைகளின் நமது தலைவி கிறிஸ்தவக் கோயில்.

சூரியனின் காலைக் கதிர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடலூரின் திடீர்குப்பம் கிராமத்தைச் சூடேற்றிக்கொண்டிருக்க, கிராமத்தை ஒட்டி இருந்த பென்னையாற்றில் சூரியக் கதிர்கள் பட்டு எதிரொலித்தது பொன்னை அள்ளிக் கொட்டியது போல ஜொலிஜொலித்தது. ஆற்றுக்கு இந்தப் பக்க கரையில் வீடுகள் குட்டி குட்டியாக முளைத்திருக்க ஆற்றின் மறுக் கரையில் நீண்ட வயல்வெளியும் அதை ஒட்டிய கள்ளுக் கடையும் தெரிந்து. ஆற்றில் எப்போதுமே இடுப்பளவு தண்ணீர் என்பதால் தைரியமாக அந்த அதிகாலை வேலையிலும் ஆற்றைக் கடந்து கள்ளுக் கடைக்கு சென்றுகொண்டிருந்த 'குடி'மகன்களின் கூட்டம் ஆற்றில் குளிக்க வந்தவர்களை வழக்கம்போல கோபப்படுத்திக்கொண்டிருந்தது.

சுற்றுப்புறமெங்கும் பச்சைப் பசேல் என்று கண்களுக்கு குளிர்ச்சி விருந்தளிக்க, கண்களுக்கு மட்டும் என்ன காதுகளுக்கும் குளிர்ச்சியைக் கொடுப்போம் என்று கங்கனம் கட்டியது போல தத்தமது இன்னிசைக் குரல்களால் பல்வேறுவிதமான பட்சிகள் சத்தங்களை எழுப்பிக்கொண்டிருந்தன. இவ்வளவு காலையில் எழுந்து நீச்சல் தெரியாமலிருந்தாலும் இடுப்பளவு தண்ணீர் என்பதால் தைரியமாக குளித்துக்கொண்டிருந்த கூட்டத்திற்கு அப்பாற்பட்டு ஆற்றின் கரையோரத்தில் தனியாக குளித்துக்கொண்டிருந்தான் சோமேஸ்வரன். பதினோரு வயது சிறுவனான சோமேஸ்வரனுக்கு ஆற்றங்கரையும் வயல்வெளிகளும் அதை ஒட்டி இருந்த காடும் மிகவும் பிடித்தவை. ஆனால் இன்று அவனுக்கு எதிலுமே கவனம் செல்லவில்லை. எங்கோ அவனுடைய எண்ணங்கள் சிதறிக்கொண்டிருந்ததை அவனுடைய முகமும் அவன் குளித்துக்கொண்டிருந்த விதமும் கூறிக்கொண்டிருந்தன. இன்று அவன் வாழ்க்கையின் ஒரு முக்கிய மைல்கல்.

சோமேஸ்வரனின் குடும்பம் கொஞ்சம் பெரியக் குடும்பம். அவனுடைய தாய் தந்தையருக்கு அவன் நான்காவது பிள்ளை. உடன் பிறந்த சகோதரர்கள் அவனுக்கு ஐந்து பேரிருந்தாலும் மூத்த அக்காவின் மேல் மிகவும் பாசம் கொண்டவன். அவனுடைய அப்பா ஐயனாருக்கு தினக்கூலி வேலை. குலத்தொழிலான ஆச்சாரி வேலையில் மிகவும் திறமைசாலியான அவருக்கு கொஞ்சம் காது கேட்காததால் தொழிலில் தனியாக வேலை செய்து சம்பாதிக்கும் அளவிற்கு அவரால் திறமை வளர்த்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தினம் ஐம்பது முதல் எண்பது வரை கிடைக்கும் கூலி வேலைக்கு சில மேஸ்திரிகளிடம் சென்றுகொண்டிருந்தார். கூலி வேலை என்றாலும் தினம் ஒரு சினிமாப்படம் பார்க்கவில்லையென்றால் ஐயனாருக்கு தூக்கமே வராது.

நல்ல வேளையாக சிகரெட்டைத் தவிர வேறு கெட்ட பழக்கங்கள் இல்லாததால் அவரால் அதிகமாக செலவு இல்லை என்பதால் சோமேஸ்வரனின் தாயார் தாட்சாயினிக்கு தினப்படி குடும்பம் நடத்த கொஞ்சமாவது முடிந்தது. தாட்சாயினி வசதியாக வாழ்ந்து கெட்டக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய அப்பா சொக்கலிங்கம் ஒரு காலத்தில் பெரிய ஜமீன்தார் போன்று வாழ்ந்தவர். அவருக்கு ஏழெட்டு குதிரை வண்டிகள் இருந்ததோடு கொஞ்சம் நிலபுலன்களும் இருந்தது. மஞ்சக்குப்பத்தில் வாழ்ந்த அவருக்கு அந்த ஊரிலேயே பெரிய உறுதியான வீடு இருந்தது. அந்த வீட்டையே மக்கள் கல்லுவீடு என்று அன்புடன் அழைப்பது உண்டு. தாட்சாயினியின் அம்மாள் வடிவுக்கரசிக்கு மிகுந்த கடவுள் பக்தியும் சிறந்த அன்பும் உண்டு. ஒரு நாளைக்கு வேலையாட்களுக்கும் சேர்த்து 20 ஆட்களுக்கு சமைத்து போடும் அந்த அம்மாளுக்கு 12 பிள்ளைகள். நான்கு பெண்கள், எட்டு ஆண்கள் என வீடே நிறைந்துவிடும் பெரியக் குடும்பம். சொக்கலிங்கம் ஒரு நாள் எதிர்பாராத மாரடைப்பில் இறந்து விட்டவுடன் அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது. சொக்கலிங்கம் உயில் எதுவும் எழுதி வைக்காததால் சொந்த பந்தங்கள் ஆளாளுக்கு சொத்தைப் பிரித்துக்கொள்ள கல்லுவீடு மட்டும் வடிவுக்கரசிக்கு எஞ்சியது. நல்ல வேளையாக உயிருடன் இருக்கும்போதே எல்லா பெண்களுக்கும் திருமணம் முடித்துவிட்டதால் வடிவுக்கரசியால் குடும்பத்தை எடுத்து நடத்த முடிந்தது.

நன்றாக வாழ்ந்து கெட்டக் குடும்பம் என்ற பெயர் மட்டும் நிலைத்து நிற்க, வசதியான வாழ்வுக்கு ஏங்கிய தாட்சாயினிக்கு ஐயனாரின் தினக்கூலி சம்பளம் மிகவும் பற்றாமல் போனது. அதை நிவர்த்தி செய்ய அவள் கடன்கள் வாங்க ஆரம்பிக்க, குடும்பமே கடன்கார குடும்பம் போல ஆகிவிட்டது. ஆனாலும் கடைசிவரை கடனில் மூழ்காமல் தப்பிக்க மட்டும் தாட்சாயினிக்குத் தெரிந்திருந்தது. பிள்ளைகள் அதிகம் என்பதால் தாட்சாயினிக்கு உதவ முன்வந்த வடிவுக்கரசி, சோமேஸ்வரனின் சின்ன அண்ணன் சங்கரனைக் கொண்டு சென்று வளர்த்துப் பார்த்தாள். திடீர்குப்பத்தில் வாழ்ந்து பழகிவிட்ட சங்கரனுக்கு மஞ்சக்குப்பம் ஒத்துக்கொள்ளாததால் சில நோய்கள் வந்து பாடாய்ப்படுத்த வேறு வழியின்றி வடிவுக்கரசி அவனைத் திரும்பவும் தாட்சாயினியிடமே கொண்டு வந்து விட்டுவிட்டாள். அதற்கடுத்து சோமேஸ்வரனை ஒன்றரை வயதுக் குழந்தையாக இருக்கும்போதே எடுத்துக்கொண்டு வளர்க்க ஆரம்பித்தாள். ஆச்சரியப்படும்படி சோமேஸ்வரன் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப வகைபடும் உடலோடு பிறந்ததால் சீக்கிரமே தன் ஆயாவிடம் மிகவும் ஒட்டிக்கொண்டான். கடைசியாக ஒரு குழந்தையாவது தன்னோடு ஒட்டிக்கொண்டதே என்ற சந்தோஷத்தில் தாய்க்கு தாயாக நின்று தன் தாயில்லாத குறையே தெரியாதவண்ணம் சோமேஸ்வரனை வளர்த்தாள் வடிவுக்கரசி.

குழந்தைகள் அதிகம் என்பதால் அவர்களை படிக்க வைக்க தாட்சாயினி மிகவும் சிரமப்பட்டாள். அதனால் சோமேஸ்வரனின் பெரிய அண்ணன் உமேஸ்வரனை அப்பா ஐயனாருடன் வேலைக்கு அனுப்பிவிட்டாள். சின்ன அண்ணன் சங்கரன் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட வேறு வழியின்றி தோழிகள் மூலம் தெரிந்துகொண்ட அருகிலிருந்த பாண்டிச்சேரியில் ஒரு பிரெஞ்சு பாதிரியார் நடத்தும் ஆண்கள் அநாதை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு படிக்க வைத்தாள். அநாதைகள் ஆசிரமம் என்ற போதும் படிக்க முடியாமல் மிகவும் ஏழ்மையில் வாடும் குழந்தைகளையும் படிக்க வைக்க அந்தப் பாதிரியார் முயன்றதால் இது சாத்தியமாயிற்று.

ஐந்தாம் வகுப்பு வரை படித்த சோமேஸ்வரன் படிப்பில் மிகவும் சுட்டி. அவனின் படிப்பு ஆர்வத்தையும் அறிவையும் பார்த்த வடிவுக்கரசிக்கு அவனை மேலும் மேலும் படிக்க வைக்க வேண்டும் என்று ஆசை பெருகியது. இருப்பினும் அவளும் கஷ்டத்தில் உழன்றதாலும் மகன்களுக்கும் அவ்வளவாக சம்பாத்தியம் இல்லாததாலும் வேறு வழியின்றி தாட்சாயினியின் உதவியை நாடினாள். தாட்சாயினிக்கு வேறு வழி எதுவும் தெரியாததால் சோமேஸ்வரனையும் அந்த பாண்டிச்சேரி ஆஸ்ரமத்தில் சேர்த்துவிடுவது என்று முடிவெடுத்துவிட அதை வடிவுக்கரசியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மிகவும் பாசம் காட்டி வளர்த்துவிட்ட சோமேஸ்வரனை பிரிவதை அவளால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இருப்பினும் பேரனின் அறிவை மழுங்கடிக்கவோ அவனையும் ஐயனாருடன் வேலைக்கு அனுப்பவோ விருப்பமில்லாத வடிவுக்கரசி வேறு வழியின்றி தாட்சாயினியின் முடிவுக்கு இசைந்தாள்.

இப்போது சோமேஸ்வரனின் உணர்ச்சியற்ற குளியலுக்கு காரணம் இதுதான். இன்று தான் அவனை தாட்சாயினி பாண்டிச்சேரிக்கு கூப்பிட்டுக்கொண்டு போகப் போகின்றாள். என்ன செய்வது என்றே அவனுக்குத் தெரியவில்லை. பாசத்துடன் வளர்த்த ஆயாவைப் பிரிவது அவனால் தாங்க முடியாததாயிருந்தது. இருப்பினும் படிக்க வேண்டும் என்ற ஆவல் அவனைத் தூண்டியது. கடைசியில் பாசத்தை படிப்பு வென்றது. அவனும் அம்மாவிடம் பாண்டிச்சேரிக்குப் போவதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டான். ஆனால் தான் செய்தது சரியா தவறா என்ற பெரிய மனக்குழப்பத்தில்தான் இன்று சோமேஸ்வரன் காலையில் கண்விழித்திருந்தான்.

சரி, வருவது வரட்டும் என்ற முடிவுடன் குளித்து முடித்துவிட்டு மேட்டுக்கரை ஏறி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் சோமேஸ்வரன். தெருவுக்கு வந்து இரண்டு வீடுகள் தள்ளி செம்மண்ணால் ஆகியதால் முன்பொருநாள் பெய்த அடை மழையில் கரைந்துவிட்ட பாதி வீடு போக மீதி பாதி வீடாக இருந்த தன்னுடைய வீட்டை நோக்கி நடைபோட ஆரம்பித்தான். மீதிப் பாதி வீடும் கரைந்துவிடாமலிருக்க வேண்டி ஐயனார் வீட்டிற்கு ஓடு அடித்து உறுதியான தரையும் சுவரும் கொடுத்திருந்தாலும் இழந்துவிட்ட பாதி வீட்டைத் திரும்ப கட்டும் வசதி மட்டும் அவருக்கு அமையாமலிருந்தது. ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த சோமேஸ்வரன் வாசலிலேயே அவனுக்காக காத்திருந்த ஆயாவைக் கண்டவுடன் சிறிது தயங்கினான். இவனைக் கண்டதும் முகம் மலர்ந்த வடிவுக்கரசி அன்புடன் கேட்டாள்.

"குளிச்சிட்டியா சோமூ? இன்னிக்கு நான் வாங்கி வந்திருக்கிற இந்த புது துணிய போட்டுக்கோ."

"எப்ப வாங்கின ஆயா? ராத்திரி காட்டவேயில்லையே?" புதுத் துணியென்றாலே ஆர்வம் வந்துவிடும் சோமேஸ்வரன் தற்காலிகமாக தன் நிலையை மறந்தான்.

"நேத்தே வாங்கிட்டேம்பா. இன்னிக்கு பாண்டிக்குப் போகப் போற இல்ல. அதனால காலையில காட்டலாம்னு இருந்துட்டேன்." வடிவுக்கரசியின் குரல் மிகவும் குழைந்திருந்ததை புதுத் துணியைக் கண்ட ஆர்வத்திலிருந்த சோமேஸ்வரன் கவனிக்கவில்லை.

"நல்லாருக்கு ஆயா. எனக்கு எப்படி எடுக்கனும்னு உனக்குத்தான் ஆயா தெரியும். நான் போயி உடுத்துக்கிட்டு வந்து காட்டுறேன் என்ன?" கேள்விக்கு பதிலை எதிர்பாராமல் குதித்தோடினான் சோமேஸ்வரன்.

கண்களின் ஓரம் துளிர்த்துவிட்ட கண்ணீரை கைகளால் துடைத்துக்கொண்ட வடிவுக்கரசி மறுபடியும் மனதிற்குள் கூறிக்கொண்டாள். நான் அழுவதைப் பார்த்துவிட்டால் அப்புறம் பாண்டிச்சேரிக்குப் போகவே மாட்டேன் என்று கூறிவிடுவான் சோமேஸ்வரன். அப்புறம் அவன் படிப்பு என்னாவது? பாசம் இருந்தால் மட்டும் போதுமா? படிக்க வைக்க காசு இருக்க வேண்டாமா? அவனுடைய வாழ்க்கையில் அவன் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்க இந்தக் கிழவியின் பாசம் அதற்கு குறுக்கே நிற்கலாமா?

மனது எவ்வளவுதான் ஆறுதல் கூறிக்கொண்டாலும் ஒன்பதரை வருடம் அவனுடன் வாழ்ந்திருந்த வாழ்வு கண்முன்னேயே நின்றுகொண்டிருந்தது. ஆயா ஆயா என்று காலைச் சுற்றிவரும் அவன் இல்லாமல் இனிக் கல்லுவீடே வெறும் கல்லு மட்டும் உள்ள வீடாக காட்சிதரப் போகின்றது. அவன் இருந்த வரையில் அவனுக்காகவே ஓடிக்கொண்டிருந்த வடிவுக்கரசியின் வாழ்க்கை இன்று சூன்யமாகிவிட்டதைப் போல உணர்ந்தாள். தன் புருஷனை இழந்தபோது அவளுக்கு ஏற்பட்ட தனிமை உணர்வை விட தன் பேரனை இழக்கும்போது ஏற்படும் தனிமை உணர்வு அவளைக் கொன்றது. அவன் மீதுகொண்ட அளவற்ற பாசத்தின் சக்தி கொண்டே அவளை தேற்றிக்கொண்டாள்.

"ஆயா... எப்படியிருக்கு என் டிரெஸ்சு?"

"ஆகா... உனக்குப் பொருத்தமா இருக்குப்பா. தலைமுடியைச் சீவவே இல்லையே? இங்கே வா..."

பேரனை இழுத்து தலையை சீவும் சாக்கில் ஒரு முறை அணைத்துக்கொண்டாள் வடிவுக்கரசி.

"சரி, சரி, வா ஒன்னா போயி சாமி கும்பிடலாம்..."

ஆயாவுடன் வளர்ந்துவிட்டதில் அவளின் அன்பும் பக்தியும் ஒருங்கே பெற்றிருந்த சோமேஸ்வரனுக்கு சின்ன வயதிலிருந்து தெய்வ பக்தி என்பது இரத்தத்தோடு ஊறிய ஒன்றாகிவிட்டது. ஆயாவுடன் சென்று அமைதியாக அவளுடன் சேர்ந்து பின்பக்கமிருந்த மூன்று செங்கற்களுக்கு முன்னால் நின்றான். ஏழைக்கு செங்கல்லும் கடவுள்தான் என்பதுபோல தாட்சாயினி தன்னுடைய குலதெய்வமான அங்காளம்மனை மூன்று செங்கற்களாக வைத்து மஞ்சள் குங்குமம் பூசி வைத்திருந்தாள். அந்த மூன்று தெய்வங்களின் முன்னால் மெளனமாக வேண்டியபடி நின்ற சோமேஸ்வரனின் கண்ணில் வழக்கம்போல தன்னை மீறி கண்ணீர் சேர்ந்தது. ஆயாவுடன் சேர்ந்து மனமுருக வேண்டி வேண்டி பழக்கப்பட்டுவிட்டதால் எப்போது தெய்வத்தின் முன்னால் நின்றாலும் அவனையறியாமலேயே கண்களில் நீரைக் கொண்டுவந்துவிடுவான் சோமேஸ்வரன்.

அம்மா... இன்னைக்கு பாண்டிச்சேரிக்கு படிக்க போறேன். நான் நல்லா படிக்கவும் அம்மா அப்பாவுக்கு பேர் வாங்கித் தருகிற பிள்ளையாகவும் ஆயாவின் பாசத்துக்கு எப்போதும் அடிமையான பேரனாகவும் இருக்க உன் அருள் தர வேண்டும். பாண்டிச்சேரியில் எந்தக் குறையுமின்றி நான் வாழ நீதான் வழி செய்ய வேண்டும். நெஞ்சமுருகி வேண்டிக்கொண்டிருந்த சோமேஸ்வரனின் வேண்டுதல் பலிக்கட்டும் என்பது போல அந்த சமயத்தில் மணியை எடுத்து வடிவுக்கரசி ஆட்டிக்கொண்டே கற்பூரம் ஏற்றி தாம்பூலத் தட்டை எடுத்து சுற்றிக் காட்டிவிட்டு பேரனின் முன்னால் வைத்து கற்பூர ஜோதியை அணைத்து அவனின் முகத்திற்கு கொண்டு சென்றாள். மனது பலவாறாக பேரனுக்காக வேண்டிக்கொண்டிருக்க, கை தன்னாலேயே விபூதியை எடுத்து பேரனின் நெற்றியில் அழகாக வைத்துவிட்டது.

நெற்றியில் ஆயாவின் கைகள் பட்டதுமே, தன் வேண்டுதல் நிறைவேறிவிடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்ற சோமேஸ்வரன் பழக்கம் மாறாமல் சட்டென்று ஆயாவின் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து அவளுடைய கால்பாதங்களைத் தொட்டு தன் கண்களில் ஒற்றிக்கொண்டான். பேரன் முறை மாறாமல் தொழுவதைக் கண்ட வடிவுக்கரசி நல்ல பயிரையே வளர்த்திருக்கின்றேன் என்று பெருமிதம் கொண்டாள். அவளும் வழக்கம் மாறாமல் தட்டிலிருந்த துளசி இலைகளை எடுத்து அவனுடை தலையின் மேல் போட்டு ஆசீர்வாதம் செய்துவிட்டு எழுந்த பேரனின் வாயில் இரண்டு இலைகளை இட்டாள்.

"வா ஆயா, சாப்பிடலாம்..."

ஆயாவின் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த சோமேஸ்வரன் அம்மா தாட்சாயினியின் கைப்பக்குவத்தில் உருவான உப்புமாவைக் கண்டு உடனே மிகுந்த பசி கொண்டான்.

"வாப்பா, வா. ஆயாவோட சேர்ந்து சாமியைக் கும்பிட்டுக்கிட்டியா? நம்ம குலதெய்வம் அங்காளம்மன் உனக்கு ஒரு குறையும் வைக்க மாட்டா. இப்ப சாப்பிடறியா இன்னும் கொஞ்சம் நேரமாகட்டுமா?"

"இப்பவே சாப்பிடறேம்மா. ஆயா நீயும் உக்காரு. ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிடலாம்."

"அதெப்படி உன்னைத் தனியா சாப்பிட விட்டுவிடுவேனாப்பா? இரு நானும் கைகழுவி விட்டு வந்துடறேன். உனக்கு இன்னிக்கு நானே ஊட்டி விடுகின்றேன்."

பதினோரு வயது பாலகனானாலும் ஆயாவின் கையால் ஊட்டி விட்டு சாப்பிடுவது என்றால் கொள்ளை இன்பம் சோமேஸ்வரனுக்கு. மறுபேச்சே இல்லாமல் மகிழ்ச்சியுடன் தலையசைத்தான்.

சாப்பாடு மெளனமாக கழிந்துவிட, ஊருக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளை செய்வதில் தாட்சாயினி முனைந்துவிட வடிவுக்கரசி பேரனை இன்னமும் மடியிலேயே வைத்திருந்தாள்.

"சோமு, இந்தா இந்தக் காசை வச்சுக்கோ, அங்கே போனப்புறம் தவறாம மேரி பிஸ்கட்டு வாங்கி சாப்புடு. டீ குடி என்ன?"

"சரி ஆயா..."

"பாண்டிச்சேரி போனப்புறம் இந்த ஆயாவை மறந்துட மாட்டியே?"

"என்ன ஆயா இப்படி கேக்குற? உன்ன நான் மறப்பேனா? நீ வேணும்னா பாரேன், பாண்டிச்சேரி போய் நல்லா படிச்சு பெரிய ஆளா வந்து உன்ன பிளஷர் காருல கூட்டிட்டுப் போயி நானே உன்னை கடைசிகாலம் வரை கண்கலங்காம பாத்துக்குவேன்."

பெரிய மனுஷன் போல கூறிக்கொண்டிருக்கும் பேரனின் மாறாத அன்பைப் பார்த்து மனமுருகினாள் வடிவுக்கரசி. நல்ல நிலத்தில் விளைத்த பயிர் என்றும் வீணாவதில்லை. அவன் செய்கிறானோ இல்லையோ, நான் வளர்த்த பிள்ளை கண்டிப்பாக ஒருநாள் நல்ல நிலைக்கு வருவான். அதைப் பார்க்க நான் உயிரோடு இருக்க வேண்டும் பிள்ளையாரப்பா.

"இதப்பாருப்பா, அங்கயெல்லாம் இயேசு சாமியக் கும்புடுவாங்களாம். அதனால நீ உடனே நம்ம சாமிங்கள மறந்துடக்கூடாது என்ன? எல்லா சாமியும் ஒன்னுதான். பகவான் விஷ்னுதான் பல அவதாரங்களா எடுத்து இப்படி பல சாமியா மாறிட்டாரு. ஆனா அவர மட்டும் கும்புடுறேன்னு பிள்ளையாரையும் அம்மனையும் கும்புடாம இருந்துடாதே? அம்மன் நமக்கு குலதெய்வம்னா, பிள்ளையாரப்பா நமக்கு கேட்டதையெல்லாம் கொடுக்கிற கடவுள். அதுவும் உன்னைப் போல சின்னப்பசங்க வேண்டினால் தவறாம செஞ்சிடுவாரு."

"தெரியும் ஆயா, நீதான் நிறையதடவ கதைகளில் சொல்லியிருக்கியே? பிள்ளையாரப்பாவையும் மறக்க மாட்டேன். அங்காளம்மாவையும் மறக்க மாட்டேன். உன்னையும் மறக்க மாட்டேன்."

பேரனின் அறிவான பதிலால் அகமலர்ந்த வடிவுக்கரசி கண்களில் நீர் மல்க பேரனை உச்சி முகர்ந்தாள்.

"தெரியும்பா, உன்னை நல்லபடியாத்தான் இந்த ஆயா வளர்த்திருக்கிறேன். எல்லார் கிட்டயும் நல்ல பேரு எடுத்து ஆயாவுக்கு நல்ல பேரு வாங்கித்தரணும் என்ன? அப்புறம் ஆயா நினப்புல படிக்காமல்லாம் இருந்திடாத. படிக்கும்போது வீட்டு நினைப்பே வரக்கூடாது என்ன? லீவு கிடக்கிறபோதெல்லாம் இங்க வந்துடு, உனக்காக இந்தக் கிழவி எப்பவும் காத்திருப்பேம்பா... என்னைக் கைவிட்டுடாத."

"கண்டிப்பா ஆயா. படிப்புதான் முக்கியம்னு நீதானே சொல்லிக்கொடுத்துருக்க? படிப்பு நேரத்துல உன்னிய நினைக்கமாட்டேன். ஆனா, லீவு விட்டா உடனே இங்க வந்துறேன் என்ன?"

"அம்மா, பேசி முடிச்சிட்டீங்களா? நேரமாச்சு, அந்தப் பாதிரியார் வேற பதினோரு மணிக்கு மேல யாரையும் பார்க்க மாட்டாராம்." தாட்சாயினி கிளம்பி வெளியே வந்துவிட்டிருந்தாள்.

"எல்லாம் முடிஞ்சிடிச்சிம்மா. பார்த்து பத்திரமா கூப்பிட்டுப்போயி விடு. பிள்ளையார் அருள் எப்போதும் உன் கூடவே இருக்கும்"

"அங்காளம்மன் அருள் இருக்க கவலை எதுக்கும்மா. நான் என்ன முதல் முறையா பாண்டிக்கு போறேன்? எல்லாம் அவ பாத்துக்குவா நீ கவலப்படாதே. சோமு அம்மாவோட குங்குமம் வைக்கலயாடா?"

"போம்மா... எனக்குத்தான் குங்குமம் புடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா? ஆயாவுக்கும் புடிக்காது எனக்கும் புடிக்காது. அதான் விபூதி வச்சிருக்கேன்ல அப்புறம் என்ன?"

"டேய்... ஆயாவுக்கு புடிக்கலன்னுலாம் இல்ல, அவங்க வைக்கக்கூடாது. என்னப் பாரு எவ்வளவு பெரிசா வச்சிருக்கேன்."

"சரிம்மா... நீயே வச்சுவிடு..."

மகனைக்கூட்டிக்கொண்டு திரும்பவும் பின்னால் சென்று நடுச்செங்கல்லிருந்து குங்குமத்தில் கொஞ்சம் எடுத்து அவனின் நெற்றியில் அழகாக வைத்துவிட்டாள் தாட்சாயினி.

"சரி... ஆயாகிட்ட சொல்லிக்கோ, நாம புறப்படலாம்."

"வரேன் ஆயா... உடம்ப பாத்துக்கோ ஆயா... லீவு விட்டா உடனே உன்ன பாக்க வந்துடுவேன். கவலப்படாத. அப்புறம் மாமாகிட்ட லீவுல வந்து பாக்குறேன்னு சொல்லிடு என்ன?"

"செல்றேம்பா... நீ பார்த்து போ. அம்மா கைய நல்லா புடிச்சிக்கோ. எங்கேயும் விட்டுவிட்டு போகக்கூடாது என்ன?" கடைசிநேர அறிவுறைகளை வழங்கிவிட்டு கையசைத்தாள் வடிவுக்கரசி.

ஆயா தன்னுடைய கண்களில் இருந்து மறையும் வரை திருப்பித் திரும்பி கையாட்டிக்கொண்டே அம்மாவின் கைப்பற்றி நடந்தான் சோமேஸ்வரன்.

பஸ் நிலையம் வந்துவிட அம்மாவுடன் சேர்ந்து பஸ்ஸில் ஏறினான். அவர்களின் திடீர் குப்பத்தின் வழியாகத்தான் பாண்டிக்குப் போகும் எல்லா பஸ்களும் போகும் என்பதால் உடனே உடனே பஸ் கிடைத்துவிடும்.

பஸ்ஸில் உட்கார்ந்துகொண்டு வந்த சோமேஸ்வரனின் நினைவுகள் மறுபடியும் ஆயாவின் மேலேயே சென்றன. பாவம் ஆயா என்னியவுட்டுட்டு எப்பிடி தனியா இருக்குமோ... மாமா இருந்தாலும் நான் இல்லண்ணா தூக்கமே வராது ஆயாவுக்கு. லீவு எப்படியும் மூணுமாசம் ஆகுமே... அதுவரை ஆயா நல்லபடியா இருக்கணும். ஆயா மடியில தூங்காம கதை கேட்காம நான் எப்படி இருக்கப்போறேனோ தெரியல.

"சோமு. அந்த ஆஸ்ரமத்துல முக்கால்வாசிப் புள்ளகளுக்கு அப்பா அம்மா இல்ல. அதனாலதான் அநாதை ஆஸ்ரமம்னு பேரு வச்சிருக்காங்க. என்னடா அம்மா அங்க எல்லாம் நம்மள கொண்டுபோயி விடறாளேன்னு நீ நினைச்சுக்காத. என்ன?"

"அப்படில்லாம் நெனக்க மாட்டேன்மா. என் படிப்புக்குத் தானே நீ கூப்பிட்டுகிட்டு போற. அதோட அண்ணனும் இருக்கு இல்ல? எனக்கு ஒரு குறையும் இருக்காது. நீ கவலப்படாத. நான் நல்லா படிச்சி வருவேன்."

"நீ நல்லா படிப்பேங்கிறதுல எனக்கு சந்தேகமே இல்லடா. ஆயாவப் பிரிஞ்சி இருக்கோமேன்னு நீ ஏங்காம இருக்கனும் அதுதா முக்கியம்."

"அதெல்லாம் ஆயாவே சொல்லிடுச்சி. நான் படிப்புன்னு வந்துட்டா எல்லாத்தையும் மறந்துடுவேன்மா..."

"அதுக்கில்லடா, போன கொஞ்சநாளு உன்னோட அண்ணனும் வீட்டு நெனப்பாவே இருந்துச்சும்மான்னு புலம்பினான் அதுக்குத்தான். இப்ப நல்லா படிக்கிறானில்ல? அப்புறம் ஒரு விசயம், அங்கே வாரத்துக்கு ஒரு முறை வந்து பாக்கலாம்னு சொல்லியிருக்காங்க. என்னால வாரா வாரம் வர முடியாது ஆனா மாசம் ஒரு வாட்டி வந்து பாக்குறேன் என்ன?"

"சரிம்மா... ஆனா பாக்க வரும்போது காசு குடுத்துவிடு என்ன? ஆயா கொடுத்துருக்கிற காசு ஒரு வாரத்துக்கே எனக்கு பத்தாது."

"டேய்... அங்க சாப்பாடு, துணிமணி, பாய், தலைக்காணி, புத்தகம், பையின்னு எல்லாமே இலவசமா கொடுப்பாங்க. அப்புறம் எதுக்குடா உனக்கு காசு?"

"இல்லம்மா, ஆயாதான் மேரி பிஸ்கட்டும் டீயும் சாப்பிட சொல்லிச்சு.."

"டேய்... அதெல்லாம் ஆயாவோட பழக்கம். அதெல்லாம் நீ வளத்துக்கக்கூடாது என்ன? நானே காசில்லாமத்தானே கஷ்டப்படுறேன்? சாப்பாடு மட்டும் சாப்பிட்டுக்கோ. வேணும்னா நா வரும்போது மேரி பிஸ்கட்டு வாங்கிட்டு வரேன்."

"அப்படின்னா சரிம்மா. அப்புறம் மறக்காம எனக்கு பிடிச்ச உருண்டைக் குழம்பும் மீனும் எடுத்து வரணும் என்ன?"

"அதெல்லாம் எடுத்து வரேண்டா. உனக்கு பிடிச்ச மீன் வருவல், உருண்டைக் குழம்பு, ஆப்பம், மைசூர்பாக்கு, லட்டு, மேரி பிஸ்கட்டு எல்லாம் எடுத்துவரேன் என்ன? காசு இருந்தா கொடுக்கிறேன் இல்லன்னா அடம்புடிக்கக்கூடாது என்ன?"

"நா எப்பம்மா உன்கிட்ட அடம் பிடிச்சேன்? தம்பிங்கதான் அடம்பிடிப்பாங்க. நான் சமத்துப்பிள்ளை."

"நீ ஆயாகிட்ட கத்துகிட்டதிலேயே எனக்கு பிடிச்ச விசயம் இந்த அடம்பிடிக்காம இருக்கிறதுதான். உன் வயசுல உன் அண்ணனெல்லாம் என்ன படுத்தி எடுத்துட்டானுங்க. நீ தான் எது சொன்னாலும் கேட்டுக்குவ. அதனாலதான் சொல்லுறேன் என்ன?"

"சரிம்மா..."

அரைமணி நேரப் பயனத்திற்குப் பிறகு பாண்டிச்சேரியின் பஸ் ஸ்டேண்டு கண் முன்னே விரிந்தது. அடேயப்பா என்று சோமேஸ்வரன் வியக்கும் வண்ணம் பெரிய பஸ்டேண்டாக இருந்தது அது. சுற்றிலும் மக்கள் கூட்டம் ஈக்களைப் போல மொய்த்துக்கொண்டிருக்க, வெளியில் ஆட்டோ நின்ற வரிசைக்கு அப்புறம் நீண்ட வேன்களைப் போல எதுவோ நின்றிருந்தது.

"அது என்னம்மா?"

"இங்க பாண்டிச்சேரியில எல்லாம் இதுதாண்டா ஆட்டோ மாதிரி. இது பேரு டெம்போ. இதுல போனா கொஞ்ச காசுதான். நம்ம இதுலதான் போகப்போறோம்."

சின்னஞ்சிறிய பஸ் போன்று இருந்த அந்த வாகனத்தை ஆச்சரியத்துடன் பார்த்தான் சோமேஸ்வரன். அம்மாவுடன் அதில் ஏறி அமர்ந்துகொள்ள அவனின் வயதை விட கொஞ்சம் வயது மூத்தவன் போல தெரிந்த ஒரு சிறுவன் தொத்திக்கொண்டே டிக்கெட் டிக்கெட் என்று கத்தினான்.

"சுர் கூப் வீதி ரெண்டு கொடுப்பா..."

"எங்கம்மா பிரெஞ்சு ஆஸ்ரமத்துக்கா?"

"ஆமாப்பா..."

கண்ணெதிரே விரிந்த பாண்டிச்சேரி நகரத்தை ஆச்சரியம் தாளாமல் பார்த்துக்கொண்டு வந்தான் சோமேஸ்வரன். அப்பாவுடன் டவுனுக்கு சினிமா பார்க்கப்போகும்போதெல்லாம் நகரங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்திருந்தாலும் இங்கே பாண்டிச்சேரியில் வீதிகள் ஒவ்வொன்றும் நேர்க்கோடு போல சென்றது அவனுக்கு புதிதாக இருந்தது.

"ஏம்மா, எப்பிடி இந்த தெரு எல்லாம் நேர்க்கோடு போல போகுது? அளவெடுத்து செய்வாங்களோ?"

"அது பிரெஞ்சுக்காரங்க முறைடா. இங்க எல்லா தெருவுல போயும் எங்க வேணும்னாலும் போகலாம். பீச்சுக்கு போறதுக்கு இந்தமாதிரி எந்தத் தெருவயும் நேர்க்கோடா பிடிச்சுக்கிட்டே போகலாம்."

"ஐ... பீச்சு இருக்காம்மா இங்க? நா அப்பாவோட ஓ.டிக்கு போகும்போது பார்த்ததோடு சரி... இங்க ஓ.டி போல இருக்குமாம்மா?"

"ஓ.டி எல்லாம் இங்க பொருந்தாதுடா. இங்க இருக்கிறது பெரிய பீச்சு. கல்லு எல்லாம் போட்டு பூங்கா அது இதுன்னு சூப்பரா இருக்கும். பீச்சு முழுசும் நடக்கறதுக்குன்னே பாதை போட்டுருக்காங்க. வழியில உக்காரதுக்கு பேசறதுக்குன்னு நிறைய இடம் இருக்கு. பெரிய பெரிய பூங்கால்லாம் இருக்கு. உன்னோட ஆஸ்ரமமே பீச்சுக்கு ரொம்ப கிட்டத்தான் இருக்கு?"

"ஐ... அப்ப ஆஸ்ரமத்திலருந்தே பீச்ச பார்க்கலாமா?"

"ஆஸ்ரமத்துல இருந்து தெரியாது, கோயிலுல இருந்து தெரியும்."

"ஐ... கோயிலு இருக்கா அங்க?"

"கிறிஸ்து சாமிக் கோயிலுடா. நம்ம சாமிக் கோயிலு இங்க அதிகம் இல்ல. பீச்ச தாண்டி போனா மனக்குள விநாயகருன்னு பிள்ளையாரப்பா கோயிலு இருக்கு. ஆனா, ஆஸ்ரம கோயிலு பிரெஞ்சுகாரங்களுது, ரொம்ப பெரிசா இருக்கும். பாதிரியாருதான் இதயெல்லாம் பாத்துக்குறாரு."

"பாதிரியாருக்கு தமிழு தெரியுமாம்மா?"

"அவரு தமிழே ஒரு மாதிரி. ஆனா புரியும். இங்க வந்து முப்பது வருசம் ஆச்சாம். எவ்வளவு பெரிய மனுசன். எங்கிருந்தோ வந்து இங்க இருக்கிற அநாதப் புள்ளகளுக்கும் ஏழப்புள்ளகளுக்கும் படிக்க வசதி செஞ்சு கொடுத்துட்டு சொந்த ஊருக்கே போகாம இருக்காரே..."

"அவரு ஊரு எவ்வளவு தூரம்மா? பஸ்ல ஏறனா போக முடியாதா?"

"பஸ்ல எல்லாம் போக முடியாதுடா. ஐரோப்பான்னு நீ படிச்சிருப்ப இல்ல? அந்த ஊருல பிரான்சுன்னு ஒரு சின்ன ஊருதான் அவருடைய ஊரு. ஆகாய விமானத்துலதான் போகனும்."

"அம்மா, சுர் கூப் வீதி வந்துடிச்சி. இறங்குறீங்களா?" டெம்போ பையன் கேட்டான்.

டெம்போவை விட்டு இறங்கிய சோமேஸ்வரன் கண்முன்னே விரிந்த பெரிய பெரிய கட்டிடங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். எல்லா கட்டிடமும் ஒரே மாதிரி இருந்ததோடு பெயிண்ட்டும் ஒரேமாதிரி அடித்திருந்தது.

"எங்கேம்மா ஆஸ்ரமம் இருக்கு?"

"அதோ அந்தக் கோடியில ஒரு பெரிய கோயிலு தெரியல? அதுக்கு முன்னால வலதுப்பக்கம் சுவர் பூரா செடிகொடி முளச்சி இருக்கு இல்ல? அதுதான் ஆஸ்ரமம்."

புதிய ஊர், புதிய கட்டிடங்கள் என்பது சோமேஸ்வரனுக்கு ஒரு புத்துணர்வைக் கொடுத்தது.

பெரிய இரட்டைக் கோபுரங்கள் கொண்ட கோயிலுக்கு எதிரில் கொடிகளடர்ந்த சுவற்றிற்கு நடுவே மரத்தாலான கதவதை்தாண்டி ஆசிரம கட்டிடம் விரிந்திருந்தது. கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவுடன் பார்வைக்கு இரண்டு புறமும் அழகாக பாத்தி கட்டி வளர்க்கப்பட்ட செடிகள் தெரிந்தன. இடது புறமிருந்த மரத்தின் மேலிருந்த ஒரு போர்டில் 'Our Lady of Angels, Boys Orphanage' என்ற எழுத்துக்கள் கொட்டையாகத் தெரிந்தன. நான்கு படிகள் தாண்டி விரிந்த வராந்தாவின் வலது கோடியில் ஒரு சிறிய வெள்ளை நிற போர்டும் அதனை ஒட்டிய சந்தில் வளைந்து மேலேறிய படிக்கட்டுகளும் தெரிந்தது. வெள்ளை நிற போர்டின் மேல் 'Rev. Fr. Jean Pierre' என்ற எழுத்துக்கள் தெளிவாகத் தெரிந்தன.

சோமேஸ்வரனின் கைகளைப் பற்றி இழுத்துக்கொண்டே வளைந்து சென்ற படிகளில் கவனமாக ஏறினாள் தாட்சாயினி.

"சோமு, அவருகிட்ட நல்லபடியா பேசு என்ன? எந்தக் கேள்வி கேட்டாலும் தயங்காம பதில் சொல்லு."

"சரிம்மா..."

அவர்களிருவரும் மேலேறி வர  இன்னொரு நீண்ட வராந்தா அவர்களை வரவேற்றது. மரத்தாலான தடுப்புகளில் நடுநடுவே பூந்தொட்டிகளில் பூக்கள் வீற்றிருந்தன. வராந்தாவின் கடைசியில் வலதுபக்கமிருந்த மரக்கதவின் மையத்தில் மேஜிக் ஐ எனப்படும் லென்சு இருந்தது. தாட்சாயினி அதை நெருங்கி மெள்ளமாகத் தட்டினாள்.

"யெஸ்.. கம் இன்..."

கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த தாட்சாயினியின் கைகளைப் பிடித்துக்கொண்டே உள்ளே நுழைந்த சோமேஸ்வரனின் கண்களில் முதலில் பட்டது புத்தகங்கள்.

அறை முழுவதும் புத்தகங்கள் பல்வேறு வண்ணங்களில் வரிசையாக அடுக்கப்பட்டுக் கிடக்க, பெரிது பெரிதாக நின்ற அலமாரிகளிலும் பல்வேறு புத்தகங்கள் தெரிந்தன. ஏதோ நூலகத்திற்கு வந்தமாதிரி ஒரு பிரம்மையை அந்த அறை அவனுக்கு ஏற்படுத்தியது. சுவர்களில் இடமிருந்த இடத்திலெல்லாம் பல்வேறு விதமான புகைப்படங்கள் வீற்றிருந்தன. அறைக்கு மையமாக இருந்த மிகப்பெரிய மேஜையின் மேல் பல்வேறுவிதமான கோப்புகளும் காகிதங்களும் இறைந்து கிடக்க அவற்றைத் தாண்டி இன்னுமொரு புத்தகச்சூழலுக்கு நடுவே கம்பீரமாக வீற்றிருந்த வெள்ளைக்கார பாதிரியாருக்கு 55 வயது இருக்கும். பளீரென்ற வெள்ளைத் தலைமுடியை ஸ்டைலாக இடதுபுறம் வழித்து அவர் சீவியிருந்ததே கம்பீரமாக இருக்க அதிலிருந்து ஒரேயொரு ஒற்றை முடிக்கற்றை அவரின் இடது புருவம் வரை வந்து நின்றது. தடிமனாக தெரிந்த மூக்குக் கண்ணாடி பாதியிறங்கி விரிந்து பரந்து தெரிந்த பெரிய மூக்கின் மையத்தில் அமர்ந்திருக்க மீசையின்றி தாடியின்றி தெரிந்த கீழ்ப்குதி செம்மையாகத் தெரிந்தது. பெரிய உதடுகளின் ஓரத்தில் ஒரு சுருட்டு விழுந்துவிடுமோ என்று அச்சம் தரும் அளவிற்கு ஒட்டிக்கொண்டிருக்க, அதன் நுனியில் சாம்பல் படர்ந்திருந்தது. தடிமனான கண்ணாடிக்குப் பின்னே தெரிந்த பச்சைநிற விழிகள் கூர்மையாக இருந்தன. கழுத்துக்குக் கிழே முழுவதும் தூய தும்பை நிற வெள்ளையில் இருந்த பாதிரியார்களின் அங்கி பார்ப்பவருக்கு ஒரு மரியாதை உடனே தோன்றவைத்தது.

"என்னம்மா? யாரு நீங்க?" பாதிரியாரின் தமிழ் மழலைத்தமிழ் போலிருந்தாலும் சோமேஸ்வரனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

"பாதர், என் பேரு தாட்சாயினி. நாங்க கடலூரிலிருந்து வரோம். இன்னிக்கி என்னோட இரண்டாவது புள்ளைய இங்க சேர்க்க வந்திருக்கேன். ஏற்கனவே இருக்கிற சங்கரனின் அம்மா நான்."

"ஓ.... ஆமா. ஞாபகம் இருக்கு. பரபாஸ் சொல்லியிருந்தாரு. இவருதான் உங்க புள்ளயா?"

"ஆமாங்கய்யா... நல்லா படிப்பான். மேல படிக்க வைக்க வசதி இல்ல. ஐயாதான் உதவனும்."

"நீ இப்ப எத்தனாவது படிக்கிறப்பா?"

"அஞ்சாவது படிச்சி முடிச்சிட்டேன் பாதர்."

"இவனோட மார்க் சர்டிபிகேட்டெல்லாம் வச்சிருக்கீங்களா?"

தன்னுடைய மஞ்சள் நிறப் பையிலிருந்து ஒவ்வொரு சான்றிதழ்களாக வெளியே எடுத்து அவரிடம் கொடுத்தாள் தாட்சாயினி.

"அப்பா என்ன செய்யிறாரு?"

"கூலிவேலைங்கய்யா, தினக்கூலிக்கு போறாரு.. ஆசாரி வேலை."

"ம்... மார்க்கெல்லாம் நல்லாத்தானிருக்கு. உன்னோட பேரு என்னப்பா?"

"சோமேஸ்வரன் பாதர்..."

"சாமேசுவரன்? ம்... ஓகே... இங்க பாரு இந்த ஆஸ்ரமத்துல சேர பசங்க எல்லாம் நல்லா படிச்சாத்தான் இங்க இருக்க முடியும். இல்லண்ணா வீட்டுக்கு அனுப்பிடுவோம். அது மட்டும் இல்லாம நீ வீட்டு நினப்பு அது இதுன்னு அழக்கூடாது சரியா?"

"அதெல்லாம் அழமாட்டேன் பாதர். சமர்த்தா இருந்துக்குவேன். நல்லா படிப்பேன் பாதர்..."

"சரி.. எனக்கு நல்லா படிக்கிற பசங்கள கண்டா ரொம்ப பிடிக்கும். நல்லா படிச்சியின்னா நிறைய பரிசெல்லாம் தருவேன் என்ன? உங்கண்ணன் இங்கதானே படிக்கிறார்? அவருடைய ஹெல்ப் அப்பப்ப வாங்கி நல்லா படிக்கணும் என்ன?"

"சரி பாதர்..."

"சரிம்மா. நீங்க இவர கூப்பிட்டுகிட்டு பரபாசிடம் போய் நான் சொன்னேன்னு சொல்லி விட்டுடுங்க. நாங்க பார்த்துக்குறோம்."

"ரொம்ப நன்றி பாதர். இந்த உதவிய என் வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டேன். உங்களுடைய காலுக்கு செருப்பா என் நன்றிய தெரிவிச்சுக்குறேன்." தழுதழுத்த குரலில் கூறினான் தாட்சாயினி.

"அட என்னம்மா பெரிய பெரிய வார்ததையெல்லாம் சொல்லிக்கிட்டு. ஏழைங்க நல்லா படிக்கணும்னு பிரெஞ்சுகாரங்க கொடுக்குற உதவியில நாங்க ஆஸ்ரமம் நடத்துறோம். இதுல நன்றிக் கடன் படறதுக்கு ஒன்னுமேயில்ல. நீங்க சந்தோஷமா போயிட்டு வாங்க."

"டேய் சோமு. பாதர் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோடா..."

காலில் விழவந்த சோமேஸ்வரனை உடனே தடுத்தார் பாதிரியார், "எனக்கு பிடிக்காத பழக்கம் இந்தக் காலுல விழறது. மனுசன மனுசனா மதிக்கனும் ஆசீர்வாதம் வாங்கக்கூட இன்னொருத்தர் காலுல விழக்கூடாது என்ன? முட்டிபோடு ஆசீர்வாதம் பண்ணுறேன்."

இது என்னடா காலில் விழக்கூடாது என்று தண்டனை தருவது போல முட்டிபோடச் சொல்லுறாரே என்று சோமேஸ்வரன் வியந்துகொண்டே இரண்டு கால்களையும் மடக்கி முட்டிப்போட அவனுடைய நெற்றியில் சிலுவைக் குறியை அன்போடு இட்டார் பாதிரியார். எழுந்துகொண்ட சோமேஸ்வரனுக்கு இதெல்லாம் ரொம்ப புதிதாக இருந்தது. தாட்சாயினியும் சோமேஸ்வரனும் வாசலை விட்டு வெளியே வந்து வராந்தாவிற்கு வர அங்கிருந்த மரத்தாலான கைப்பிடிக்கருகே சென்றாள் தாட்சாயினி.

"டேய், சோமு. அதோ அந்த கோயில பார்த்தியா? அங்க இருக்கிற மாதாதான் இனிமே உனக்கு அம்மா அப்பா எல்லாம் சரியா? ஒழுங்கா படி... எங்களப் பத்தி கவலப்படாதே..."

"சரிம்மா..."

தலையாட்டிக்கொண்டே எதிரிலிருந்த கோயிலின் உச்சியில் நின்றிருந்த மாதாவின் சிலையைப் பார்த்த சோமேஸ்வரனின் உடலில் அவனையும் அறியாமல் ஒரு நடுக்கம் வந்து மறைந்தது. ஏதோ கண்டுவிட்ட ஒரு உணர்வு.

மதிய நேரத்திற்கான ஆலயமணி பெரும் சத்தத்துடன் அடிக்கலாயிற்று...