இந்தப் பதிவு மூன்றாவது கண்: ருத்ர முகம் தொடரிலுள்ள 2 பதிவுகளில் 2 ஆவது பதிவு

சிருங்கார சென்னை, தமிழ்நாடு…

சென்னையின் சுள்ளென்ற வெயிலடிக்க ஆரம்பித்துவிடும் காலைப்பொழுதின் அவசரத்தில் அலுவலகத்திற்கு விரையும் அலுவலகர்களும், புத்தகங்களின் சுமையழுந்தியதால் இளமையில் கூன்விழுந்த குழந்தைகளும், இளமைத்துள்ளல் என்ற நினைப்பில் படிக்கட்டில்தான் பயணம் செய்வேன் என்று அடம்பிடிக்கும் இளவட்ட கல்லூரி மாணாக்கர்களும், அவர்களின் சீண்டல்களுக்குப் பயந்து ஒளிந்துகொள்ள முயற்சி செய்து முடியாமல் வியர்வை மழையில் நனைந்து அதில் அங்கங்கள் தெரிந்துவிடுமோ என்ற கலாச்சார பயத்தில் இழுத்துப்பிடித்துக்கொண்டு நின்றிருக்கும் இளம்பெண்களும், அப்படிப்பட்ட கலாச்சாரம் என்றால் கிலோ எத்தனை விலை என்று கேட்கும் தகவல்தொழில்நுட்ப ஜான்சிரானிகளின் தாராள உடைகளும், அதில் தெரிந்த அழகை பருகியதில் தங்களது வயதை மறந்த பெரியவர்களும், அந்தப் பெரியவர்களை பார்த்து தலையிலடித்துக்கொண்டு தன் வேலையைத் தொடர முயலும் நடத்துனருமாக பல்வேறு மக்கள், நெருக்கடியின் உச்ச கட்டத்தைப் பறைசாற்றுவது போல நெருங்கியடித்துக்கொண்டு பயணித்துக்கொண்டிருந்த பல்லவன் பேருந்தில் நமது கதை ஆரம்பிக்கின்றது.

இந்தப் பேருந்தில்தான் நமது கதாநாயகன் பயணிக்கின்றானோ என்று எதிர் பார்த்தால் ஏமாந்து போவீர்கள். அல்லது கதாநாயகியோ என்று எதிர் பார்த்தாலும் ஏமாற்றம்தான். உண்மையில் இன்னும் சில அத்தியாயங்களுக்குப் பிறகு நீங்கள் மறந்துவிடப்போகும் ஆனால் இந்த அத்தியாயத்திற்கு மிகவும் முக்கியமான நந்தினி பயணித்துக்கொண்டிருக்கின்றாள்.

நந்தினியைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம் தேவைதானே? சென்னையின் புறநகரான பாலவாக்கத்தில் ஒரு ஓட்டு வீட்டில் வசிக்கும் நந்தகுமாரன் மற்றும் தேவகியின் நடுத்தரக் குடும்பத்தின் ஓரே வாரிசுதான் இந்த நந்தினி. கூலி வேலை செய்யும் நந்தகுமாரன் தனது மகளை மிகவும் நன்றாக படிக்கவைக்க வேண்டும் என்ற ஆர்வமிகுதியில் மிகவும் கஷ்டப்பட்டு நந்தினியை பி.சி.ஏ வரை படிக்க வைத்தார். தேவகியும் தான் சளைத்தவளில்லை என்று நிரூபிப்பவள் போல இரண்டு மூன்று வீடுகளில் வீடு பெருக்கி துடைப்பது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்து மகளின் படிப்புக்கும் மற்ற தேவைகளுக்கும் முடிந்த அளவு உதவி செய்தாள். இந்த இருவரின் அன்பில் உருவான நந்தினி படிப்பில் படுசுட்டி. பி.சி.ஏ படித்த அவளுக்கு கணினி நிரலாளராக தி ஒப்பன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது மிகப்பெரிய வரம். அந்நிறுவனம் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக மட்டுமின்றி இந்திய அரசாங்கம் சம்பந்தப்பட்ட பல்வேறு மென்பொருட்களையும் வழங்கும் ஒரே நிறுவனமாகவும் உயர்ந்து நிற்கின்றது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட நிறுவனம் என்பதால் உள்ளே நுழைவதே மிகவும் கடினம். அதுமட்டுமின்றி தேர்வுகள் பலவற்றில் தேற வேண்டியிருக்கும். இருப்பினும் அவை அனைத்திலும் அருமையாக தேறி பலத்தபோட்டியை வென்றதற்கு நந்தினியின் படிப்பறிவும் மனவுறுதியுமே காரணம்.

சீராக வாரப்பட்ட தலைமுடி பின்னலாக பின்புற இடுப்பு வரை வழிய, பரந்து விரிந்த நெற்றி அதன் அறிவு விசாலத்தைப் பறைசாற்ற, வாள்களின் கூர்மையை ஒத்து வளைந்திருந்த இரண்டு புருவங்களுக்கு மத்தியில் வீற்றிருந்த திருநீற்றுப் பூச்சு அவளின் பக்தியைப் பறைசாற்ற, அதன் கீழே சக்தியின் இரு பிம்பங்களாக அன்பும் வீரமும் ஒருங்கே தரும் கூர்மையான விழிகளில் அமைதி தெரிந்தது. முகத்திற்கு அழகு சேர்க்கவே உருவானதுபோலத் தோன்றிய நேரான நாசியின் வலதுபுறத்தில் இருந்த மூக்குத்தி அவளின் எளிமையை பறைசாற்ற, புன்னகையை எந்நேரமும் தவறாது வழுவவிடுவதால் உருவான இயற்கை அழகில் செயற்கை சாயங்கள் இன்றி பூத்திருந்த ரோஜா இதழ்கள் குழந்தையின் மென்மையை ஞாபகப்படுத்தின. காதுகளின் இரண்டு பக்கமும் தொங்கிய இதயவடிவ தோடுகள் அவளின் தலையசைப்புக்கு இதயங்களும் இசைபடும் என்பதை மறைமுகமாக பறைசாற்றியது. கழுத்திலிருந்த சிறு துளசி மணியுடன் இன்னொரு அணிகலனாக அவளுடைய அடையாள மின்காந்த அலைவரிசை அட்டையின் பட்டை விளங்கியது. கலாச்சாரத்தின் வடிவான அழகின் உருவமான உடல் முழுவதும் சீரான வெள்ளை நிற சுரிதாரில் மூழ்கி சிற்பிக்குள் இருக்கும் முத்தை நினைவூட்டியது. இவ்வளவு அழகு அம்சங்கள் கொண்ட நந்தினி ஒரு பேரழகி அல்ல. ஆனால் இயற்கையும் கலாச்சாரமும் அன்பும் கனிவும் அவளுக்கு ஒரு அசாதாரணமான அழகை கொடுத்திருந்தன.

பேருந்து நிறுத்தத்தை வந்தடைந்ததால் ஏற்பட்ட குலுக்கலில் ஒருமுறை முன்பக்கமாக சாய்ந்து திரும்பிய நந்தினி வெளியே எட்டிப் பார்த்து அது தனது நிறுத்தம்தான் என்பதை உறுதி செய்துகொண்டபின் தான் உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து விடுபட்டு வேகமாக கீழிறங்கினாள். சென்னை அண்ணாசாலையில் பல கட்டிடங்களோடு கட்டிடமாக மறைந்துவிட்டிருந்த அந்த ஆறு மாடிக் கட்டிடத்தில் தி ஓப்பன் சிஸ்டம்ஸ் நிறுவனம் அமைதியாக தெரிந்தது.

வழக்கம் தவறாத வழக்கமாக முன்புற கேட்டையொட்டி வீதிக்கொருவராக முளைத்திருந்த விநாயகப் பெருமானின் சிறு கோயிலை நோக்கி முதலில் சென்றாள். தனது கைப் பையிலிருந்து இரண்டு நாணயங்களை எடுத்து பிள்ளையாரின் முன்னாலிருந்த உண்டியில் போட்டுவிட்டு குங்குமத்தை எடுத்து தனது பழக்கப்பட்ட விரல்களால் புருவங்களுக்கு மத்தியில் ஏற்கனவே வீற்றிருந்த திருநீற்றிற்கு சற்று கீழே அழகுக்கு அழகு சேர்ப்பது போன்ற ஒரு புள்ளியை இட்டாள்.

“மை டியர் விநாயகா, இன்றைய நாள் நல்ல நாளாக கழிய வேண்டும். வழக்கம்போல புராஜக்ட் மேனேஜர் முத்துவிடம் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்காதே. அவரின் கழுகுக் கண்களிலிருந்து இன்றைக்கும் என்னை காப்பாற்றிவிடு. மீறினாய் என்றால் இந்த வெள்ளிக்கிழமை உனக்கு வழக்கமாக கிடைக்கும் கொழுக்கட்டைகளில் இரண்டை கட் செய்துவிடுவேன்.”

சிநேகிதனுடன் பேசுவதைப் போல அன்புடனும் செல்ல மிரட்டலுடனும் தன்னை வணங்கும் இனிய பக்தை நந்தினியை மாறா புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் பிள்ளையார்.

முன்புற கேட்டிலிருந்த பாதுகாப்பு காவலாளி பழக்கப்பட்ட சிரிப்பு ஒன்றை உதிர்க்க அதை ஏற்று முத்துப்போன்ற தன் பற்கள் தெரிய சிநேக சிரிப்பு சிரித்த நந்தினியால் காவலாளியின் தினம் பூத்தது. கேட்டிலிருந்த மானிட்டருக்கு அருகில் சென்று தன்னுடைய அடையாள அட்டையை காண்பிக்க அது மின்காந்த அலைவரிசையை சரிபார்த்து பச்சை விளக்கை எரியவிட்டு வா நந்தினி என்று வரவேற்பது போல பீப் என்றது. தானியங்கியாக திறந்த கேட்டைத் தாண்டி படிகளில் உயர்ந்து வரவேற்பறையை அணுகினாள். வரவேற்பு மேஜைக்குப் பின்னால் மலர்களுக்கிடையில் மலராக தெரிந்த வரவேற்பாளினி தமிழினி யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவள் அரவரம் கேட்டு திரும்பி நந்தினியை பார்த்து கையசைத்தாள்.

“ஹாய் தமிழ். எப்படியிருக்கின்றாய்?”

ஒரு நிமிஷம் என்று சைகையால் காட்டிய தமிழினி தனது தொலைபேசி பேச்சை முடித்துக்கொண்டு அதை கீழே பணிவாக வைத்துவிட்டு, நந்தினியை பார்த்து புன்னகைத்தாள்.

“வாடி நந்து. நான் நன்றாகத்தான் இருக்கின்றேன். சீக்கிரம் போ, லிப்ட்டில் ஆள் போகப் போகின்றார்கள். இல்லையென்றால் அது கீழே வரும்வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.”

“தேங்ஸ்டி, மதியம் வழக்கம்போல பேசலாம்…”

நந்தினி தன் தோழியை நோக்கி கையை அசைத்துவிட்டு பக்கத்திலிருந்த லிப்டை அணுகினாள்.

நந்தினியின் வேலை முழுவதும் நான்காம் மாடியிலிருந்த சிஸ்டம் அப்ளிகேஷன்ஸ் (இயங்குதள மென்பொருட்கள்) செக்ஷனிலிருந்தது. லிப்ட் அப்போதுதான் மூடப்போவதறிந்து விரைவாக மேல் நோக்கு குறியை அழுத்த முக்கால்வாசி மூடியிருந்த லிப்ட் கதவுகள் அழைத்தது யார் என்பதுபோல திறந்து வழிவிட்டன. அவசரத்தில் உள்ளே யார் இருக்கிறார்கள் என்றே கவனிக்காமல் சட்டென்று உள்ளே நுழைந்து நான்காம் எண்ணை நோக்கி தன்னுடைய வெள்ளரிக்காய் விரலை கொண்டு சென்றவள் ஏற்கனவே அந்த கட்டம் சிவப்பு நிறத்தில் ஒளிருவதைக் கண்டு மற்றவர்களும் அந்த மாடிக்கே செல்கின்றார்கள் என்பதை உணர்ந்து யார் என்று பார்க்க விரும்பி திரும்பிய அதே நேரம் லிப்ட் கதவுகள் முழுவதுமாக மூடியது.

பன்னிரண்டு பேர் ஒரே நேரத்தில் செல்லக்கூடிய அந்த லிப்ட் பெட்டியின் ஒவ்வொரு மூலைக்கும் நடுவுக்கும் ஒவ்வொருவராக ஐந்து பேர் நின்றிருந்தனர். அனைவருமே ஒரே மாதிரி கறுப்பு நிறத்திலிருந்த சூட்கோட்டுகளில் உயரதிகாரிகள் போன்ற தோற்றம் வழங்கினார்கள். ஆனால் இதற்கு முன்பு இவர்கள் யாரையுமே பார்த்திராத நந்தினி ஏதேனும் நிறுவனத்திலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும் என்று முடிவு கட்டிக்கொண்டாள். நடுவில் அமெரிக்க கலாச்சாரத்தின் பிரதிநிதி போல நின்றிருந்த ஒரேயொரு பெண்ணை நோக்கி சிநேகமாக புன்னகைத்து “ஹலோ” என்றாள்.

“ஹலோ…”

“நீங்கள் ஏதேனும் நிறுவனத்திலிருந்து எங்களின் நிறுவனத்தை பார்வையிட வந்திருக்கின்றீர்களா?”

“சாரி. ஐ டோண்ட் நோ யுவர் லேங்குவேஜ். டு யூ ஸ்பீக் இங்லீஷ்?”

“ஆங்கிலத்தில் பேசாமல் கணினி வேலையில் இருக்க முடியுமா? கண்டிப்பாக. என்னுடைய பெயர் நந்தினி. நான்காம் மாடியிலிருக்கும் சிஸ்டம் அப்ளிகேஷன்ஸ் பிரிவில் குழு மேலாளராக இருக்கின்றேன்.”

“வாவ். அருமை. எனது பெயர் லிண்டா, நாங்களனைவரும் தென்னாப்ரிக்காவின் தூதரகத்திலிருந்து உங்களின் மேலாளர் திரு. சிவசங்கர் அவர்களை அலுவலக விஷயமாக சந்திக்க வந்திருக்கின்றோம். உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி நந்தினி. உங்களின் உதவி எங்களுக்குத் தேவைப்பட்டாலும் படலாம்.”

“எனக்கும் உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. எங்களின் நிறுவனத்தின் அனுமதிபெற்ற எந்த உதவியாயினும் உங்களுக்கு செய்ய நான் தயாராக இருக்கின்றேன்.”

“மிக்க நன்றி நந்தினி. உங்களுக்கு மிகவும் தோழமையான சுபாவம். இவர்கள் நான்கு பேரையும் பிறகு அறிமுகப்படுத்துகின்றேன். நான்காவது மாடி வந்துவிட்டது. மீண்டும் சந்திப்போம். பை…”

“பை…”

முன்னால் நின்றிருந்ததால் லிப்ட்டை விட்டு முதலில் வெளியே வந்த நந்தினி அவர்கள் ஐவரும் வெளியேவர தோதாக வழிவிட்டு நின்றாள். ஒவ்வொருவராக கடந்துபோக புன்னகைத்துக்கொண்டிருந்த நந்தினி கடைசியாக சென்றவரின் கையில் ஒரு பெரிய சூட்கேஸ் இருப்பதை பார்த்து இது என்ன புதிதாக இருக்கிறது என்று வியந்துகொண்டே திரும்பியபோது சட்டென்று ஞாபகம் வந்ததுபோல திரும்பி பார்த்தாள். அதற்குள் ஐந்துபேரும் சிஸ்டம் அப்ளிக்கேஷன்ஸ் பிரிவின் மேலாளரான சிவசங்கரின் அறை இருக்கும் வளைவில் திரும்பிவிட்டிருந்தனர்.

தென்னாப்ரிக்க தூதரகத்தில் இத்தனை வெள்ளையர்கள் வேலை செய்கின்றார்களா?

தொடர் வரிசை<< மூன்றாவது கண்: ருத்ர முகம் – முன்னோட்டம்

அகஸ்ரீ

எழுத்தாளன், கவிஞன், கலைஞன், இசைஞன் மற்றும் சர்வ கலா இரசிகன்...

0 Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன