இந்தப் பதிவு இதயமேந்திக் கேட்கின்றேன் தொடரிலுள்ள 2 பதிவுகளில் 2 ஆவது பதிவு

விடியற்காலையிலேயே பரபரப்பாகிவிடும் கோவையின் ஆர்.எஸ். புரத்தின் டி.வி. சாமி தெருவில் கம்பீரமாக வீற்றிருந்த அந்தச் சின்ன பங்களா அமைதியாகத் தெரிந்தது. கோவையின் ஆர்.எஸ். புரம் ஒரு வணிகர் வீதி என்பதால் அதிகாலையிலேயே முழித்துக்கொண்டு நாயர் கடைகளும் பால் வழங்கு நிலையங்களுமாக பரபரப்புடன் இருந்தது. ஆர்.எஸ். புரத்தில் வீற்றிருக்கும் பல பணக்கார முதலைகளின் இல்லங்களாக விரிந்துகிடக்கும் ஒவ்வொரு தெருக்களும் காலைநேர அலுப்பில் மூழ்கிக்கிடந்தது. டி.வி. சாமி வீதியிலிருந்த அந்த சிறிய பங்களா மட்டும் வித்தியாசமாக விடிகாலையிலேயே விழித்துக்கொண்டாலும் அதிக அரவமின்றி அமைதியாகவே இருந்தது. சுற்றிலும் இயற்கையின் அழகை பறைசாற்றும் பச்சைப் பசேலென்ற மரம் செடி கொடிகளுக்கு இடையில் பச்சை நிற டிஸ்டெம்பர் பூச்சில் இலை தழைகளாலேயே கட்டப்பட்டதோ என்ற பிரம்மையை ஏற்படுத்தியது. கோட்டைச் சுவர் போல அமைந்திருந்த சுற்றுச் சுவற்றின் மேல் சிறு சிறு விளக்குகள் பொருந்தி பார்க்க மிகவும் மங்களகரமான அழகுடன் மிளிர்ந்துகொண்டிருந்தது. கேட்டிலிருந்த காவலாளி அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு சலவை செய்த சீருடையை அணிந்துகொண்டு பளிச்சென வீபூதிப் பட்டையில் பிரகாசமாகத் தெரிந்தார். இரவு நேர காவலாளி தூக்கம் நிறைந்த கண்களில் இவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு மெளனமாக தன்னுடைய மிதிவண்டியை எடுத்து ஓட்டிக்கொண்டே வீதியில் மறைந்தார். பங்களாவில் இருந்த மூன்று மாடிகளில் முதல் மாடி மட்டும் முழுவதும் வெளிச்சத்தில் மூழ்கியிருக்க கீழ்தளத்தின் முன்னால் மட்டும் கொஞ்சம் வெளிச்சம் வழிந்துகொண்டிருந்தது.

முன் வாசலிலிருந்து கேட் வரை இருந்த நீண்ட வெளியில் இரண்டு கார்களும் அவற்றுடன் சம்பந்தம் இல்லாததுபோல வீற்றிருந்த பல்சர் பைக்கும் அதிகாலை வெளிச்சத்தில் மூழ்கித்தெரிந்தன. முதலாவது கார் தான் ஒரு செவர்லே கார் என்பதை பெருமிதமாக கூறிக்கொண்டிருக்க, அதற்கு நான் சற்றும் இளைத்தவனில்லை என்று பதிலளித்துக்கொண்டிருந்தது இரண்டாவதாக நின்றிருந்த ஹூண்டாய் ஆக்சென்ட். நீ இருந்தாலும் அதிகம் பயன்படுத்தப்படுவது நான்தான் என்கிற இறுமாப்புடன் இருந்தது மூன்றாவதாக வீற்றிருந்த பல்சர்.

இரண்டாவது மாடியின் மையத்திலிருந்த அந்தப் படுக்கையறை முழுவதும் பச்சை நிற இரவு விளக்கின் மந்தமான வெளிச்சத்தில் மூழ்கித்தெரிய படுக்கையின் தலைப் பக்கத்திலிருந்த சுவற்றில் பெரிய அழகிய ஓவியமாக கூரிய கண்களில் அறிவு தெரிய அமைதியாக வீற்றிருந்தார் சுவாமி விவேகானந்தர். அவரைத் தவிர யாரும் இல்லை என்று நினைத்துவிடுவதற்குள் என்ன அவசரம் என்பதுபோல படுக்கையின் கால் பக்கத்திலிருந்த சுவற்றில் ஆளுயர புகைப்படத்திலிருந்த ஒரு ஆணும் பெண்ணும் அன்றலர்ந்த மலர்களைப் போன்ற புன்னகையுடன் வீற்றிருக்க சங்கோஜமே இல்லாமல் அந்த ஆணின் தோளின் மேல் தனது வலது கையை போட்டுக்கொண்டு இடது கையை தோளிலிருந்து தொங்கிக்கொண்டிருந்த சிறிய பையின் பட்டையில் வைத்துக்கொண்டு தெரிந்தாள் அந்தப் பெண். புகைப்படத்தின் பின்புறத்தில் பச்சைப் பசேலென்ற ஊட்டியின் காலைநேர வனப்பு விரிந்திருக்க அந்தப் பெண்ணின் இடுப்பில் இடது கையையும் தனது இடுப்பில் வலது கையையும் வைத்திருந்த அந்தப் ஆணின் முகத்தில் குறும்பு தெரிந்தது. அமைதியைக் கிழிப்பது போன்ற அலறலுடன் சட்டென்று அலார மணி அடிக்க, படுக்கையின் மெத்தென்ற விரிப்பில் வலது காலை மடக்கியும் இடது காலை நீட்டியும் வைத்து குப்புறப் படுத்திருந்த இளைஞன் திரும்பிப் படுத்ததில் அவன் புகைப்படத்திலிருந்த இளைஞனே என்பது புலனாயிற்று. தூக்கம் கலையாவிடினும் காதுகள் பொறுக்காததால் தானாகவே இயங்கிய இடது கை பக்கத்திலிருந்த சிறிய மேஜையின் மேலிருந்த மிக்கி மவுஸ் அலார கடிகாரத்தின் தலையில் தட்ட, வாயைப் பிளந்திருந்த மிக்கி மவுஸ் வாயை மூடிக்கொண்டு புன்னகையைச் சிந்தியது. அமைதி திரும்பிவிட்டாலும் வழக்கம் மாறாத உடல் தன்னாலேயே எழுந்திருக்க கண்களைத் திறந்த தீரனின் கண்களில் தூக்க கலக்கம் தெரிந்தாலும் எதிரிலிருந்த புகைப்படத்தைப் பார்த்தவுடன் பிரகாசம் தெரிந்தது.

“ஹாய் ரோஸ். குட் மார்னிங்…”

புகைப்படத்திற்கு தனது காலை வணக்கங்களை வழங்கிவிட்டு எழுந்த தீரன் ஆறடிக்கு கொஞ்சமும் குறையாத உயரத்தில் கட்டுக்கோப்பான உடலில் காலைப் பயிற்சியின் உறுதியும் பணத்தின் செழிப்பும் தெரிய குண்டாகவுமில்லாமல் ஒல்லியாகவம் இல்லாமல் அளவாக இருந்தான். கலைந்திருந்தாலும் வடு மாறாத தலைமுடியின் ஒரு கீற்று புருவத்தைத் தாண்டி கண்களை மறைக்கும் அளவிற்கு இறங்கியிருக்க மற்ற முடிக்கற்றைகள் இரண்டு பக்கங்களிலும் காதுகளுக்குப் பின்னால் அழகாக மறைந்திருந்தன. பரந்து விரிந்த நெற்றியின் மையத்தில் அடர்ந்து தெரிந்த புருவங்களுக்கு அடியில் பிரகாசமான கண்கள் தெரிந்தது. நேர்க்கோடு போன்று இறங்கிய நாசிக்குக் கீழே கம்பீரமான மீசை தெரிய அதைத் தாண்டி இருந்த சிவந்த உதடுகள் இவனுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாத ஆச்சரியத்தை பறைசாற்றிக்கொண்டிருந்தது. மழமழவென்று இறங்கிய தாடைக்கு பின்னால் இறங்கிய கழுத்தில் தங்கத்தாலான மெல்லிய சங்கிலியும் அதன் முனையில் இதய வடிவ டாலரும் தொங்கிக்கொண்டிருந்தது. கழுத்துக்கு கொஞ்சமே இடம்விட்டதுபோல் நெருங்கியிருந்த அந்தச் சங்கிலிக்குக் கீழே வளர்ந்திருந்த மார்பு முடிகள் கம்பீரமாக இருந்தன. சிறந்த உடற்பயிற்சியின் விளைவால் கட்டுக்கோப்பாகத் தெரிந்த மார்பையும் வயிற்றையும் தாண்டி இடுப்பிலிருந்து முழங்கால் வரை ஒரு நீண்ட வெள்ளை நிற கால்சட்டை வீற்றிருந்தது. திண்ணென்ற கால்கள் உறுதியான பாதங்களுடன் முடிந்திருக்க பாதங்கள் தரையிலிறங்கும் முன்னர் அங்கே ஏற்கனவே வீற்றிருந்த குளியலறை செருப்பில் நுழைந்தது.

படுக்கைக்கு வலது பக்கத்தில் இருந்த குளியலறைக்குள் நுழைந்த தீரன் ஐந்து நிமிஷங்கள் செலவழித்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு பல்லை விளக்கிவிட்டு முகம் அலம்பி தெளிவாக திரும்பவும் படுக்கையறைக்குள் நுழைந்தான். அறையின் மூலையிலிருந்த அலங்கார மேஜைக்கு மேலே இருந்த அரை ஆளுயரக் கண்ணாடிக்கு இரண்டு பக்கமும் வீற்றிருந்த கப்போர்டுகளிலிருந்து ஒன்றைத் திறந்து காலை உடற்பயிற்சிக்கு அணியும் உடைகளை எடுத்து உடுத்திக்கொண்டு அதை மூடிவிட்டு தலையை வழக்கம் போல இடதுபுறமாக வாரி பாதி முடிக் கற்றைகள் முழுவதும் இடது பாதி முகத்தை மூடும் அளவு இறக்கிவிட்டுக்கொண்டு மீதிப் பாதி முடிக் கற்றைகள் முழுவதையும் காதுகளுக்குப் பின்னால் கொண்டு சென்று அழகாக வாரிக்கொண்டான். அறையின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்து அருகிலிருந்த மாடிப்படிகளில் கீழிறங்க காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு மங்களகரமான முகத்தில் பொட்டும் ஈரக்கூந்தலை துண்டுகொண்டு மூடியிருந்தும் அதிலிருந்து வழிந்த ஒருசில நீர்த்துளிகள் ரோஜாப்பூவின் இதழ்களில் வழியும் பனித்துளிகளை நினைவுக்கு கொண்டு வரும்படி தெரிந்த தீரனின் அம்மாள் காமாட்சி முதலில் தெரிந்தாள்.

“வா தம்பி, முழிச்சிட்டியா?”

“இல்லம்மா, எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு!”

மகனின் அதிகாலை கடியை இரசித்துப் புன்னகைத்த காமாட்சியம்மாள் தனது கைகளில் வைத்திருந்த அருகம்புல் சாறு நிரம்பிய டம்ளரை தீரனை நோக்கி நீட்டினாள். தீரன் வாங்கிக்கொண்டு இரசித்துக் குடித்தான்.

“அது என்னவோ தெரியலம்மா, நீ செஞ்சா அருகம்புல் சாற்றுக்குக் கூட சுவை வந்துடுது.”

“ஏலேய். காலங்காத்தால ஐஸ் வைக்காத. தினம் போடற ரெண்டு துளி தேன்தான் அதுக்கு காரணமின்னு உனக்கே தெரியும்.”

“சரிம்மா, குடிச்சுட்டேன். அப்பா எழுந்துட்டாரா?”

“உன்ற ஐயன் காலைங்காத்தால முழிச்சாருன்னா உடனே ஓட ஆரம்பிச்சுடுவாருன்னு தெரியாதாய்யா உனக்கு?”

“ஓடல்லாம் வேணாம்மா, சும்மா என்கூட வந்து யோகாசனம் செய்யச்சொல்லு, உடம்ப சும்மா கல்லுமாதிரி ஆக்கி காட்டுறேன்.”

“உன்ற ஐயன் வயசுக்கு யோகாசனம் செய்யமுடியுமா? பிஞ்சிலிருந்தே வளைஞ்சாத்தான் உடம்பு யோகாசனத்துக்குப் பழகும். அது மட்டுமில்ல அவரு நண்பர்களை தெனம் சந்திச்சு அரட்டையடிக்க வேணாமா?”

“அது சரி. சரிம்மா, நான் மொட்ட மாடிக்குப் போயி யோகாசனம் முடிச்சிட்டு மூணாவது மாயடியிலிருக்கிற உடற்பயிற்சி அறையில இருப்பேன். அப்பா வந்து எங்கேன்னு கேட்டாருன்னா சொல்லிடு.”

“ஏந்தம்பி, இது என்ன புதுசாயிருக்கு? நீ தினப்படி செய்யற எல்லா விஷயமும் எங்களுக்கு மனப்பாடமாச்சே…”

“சும்மா சொல்லியாவது பாக்கலாம்னுதான். விடமாட்டியே.”

மாடிப்படியை திரும்பவும் ஏறும் மகனை பெருமிதத்துடன் பார்த்தாள் காமாட்சியம்மாள். ஒரே மகன் என்று செல்லமாக வளர்த்ததால் கெட்டு போயிடுவானோ என்று பயந்த எங்களுக்கு நான் அப்படியில்லை என்று உணர்த்திய மகன். அப்பாவையும் அம்மாவையும் தன்னுடைய நண்பர்களைப் போல அவன் நடத்தினாலும் மகனாக அன்பைப் பொழியும் பாசக்காரன். புன்னகையுடன் காலை உணவை தயாரிக்க திரும்பவும் சமையலறைக்குள் நுழைந்தாள் காமாட்சியம்மாள்.

ஒரு மணிநேரம் கழித்து வாசலில் படபடவென்ற சத்தத்துடன் அதிகாலை அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒரு புல்லட் வண்டி வந்து நிற்க அதன் சத்தத்தைக் கேட்டவுடனே கேட்டைத் திறந்த காவலாளி புன்னகையுடன் வண்டியில் வந்தவருக்கு ஒரு கும்பிடு போட்டார். காவலாளியின் கும்பிடை ஒரு தலையசைப்பால் ஏற்றுக்கொண்டு உள்ளே நுழைந்து புல்லட் வண்டியை பல்சர் பைக்குக்கு பக்கத்தில் நிறுத்திவிட்டு இறங்கிய உலகநாதன் தன்னுடைய ஐம்பது வயதையும் தாண்டி கம்பீரமாகத் தெரிந்தார். காலைநேர ஓட்டத்திற்காக அவரணிந்திருந்த வெள்ளை நிற பணியனும் கால்சட்டையும் அவரை இளமையாக காட்ட முயற்சி செய்துகொண்டிருக்க பாதி நரைத்துவிட்ட தலையும் ஓரங்களில் வெண்மையைக் காட்டிய முறுக்கிய மீசையும் அவருடைய வயதைக் காட்டிக்கொண்டிருந்தன. வராந்தாவில் நுழைந்து முதல்மாடிக்கு சென்று சாப்பாட்டு அறைக்குள் நுழைந்தார். அவருடைய வரவுக்கு காத்திருந்ததுபோல காமாட்சி உடனே அங்கே உதயமானாள். கையில் வைத்திருந்த காப்பிக் கோப்பையை அவருக்கு கொடுக்க, அதை ஏற்றுக்கொண்ட உலகநாதன் ஒருமுறை அதன் சுகந்த வாசனையை திருப்தியுடன் முகர்ந்துவிட்டு அருந்த ஆரம்பித்தார்.

“தம்பி குளிச்சுட்டு வந்துட்டானாம்மா?”

“வர நேரம்தாங்க. நீங்க குளிச்சுட்டு வந்திட்டீயன்னா சாப்பிடலாம்.”

காப்பிக் கோப்பையை காலி செய்துவிட்டு காமாட்சியிடமே கொடுத்துவிட்டு தங்களது அறைக்குள் நுழைந்தார் உலகநாதன்.

மாடிப்படிகளில் அரவம் கேட்கத் திரும்பிப் பார்த்த காமாட்சி தீரன் வருவதைக் கண்டு முகமலர்ந்தாள். குளித்துவிட்டு புத்துணர்ச்சியுடன் பளிச்சென்று கொஞ்சம் மடித்துவிட்ட முழுக்கைச் சட்டையும் பேண்ட்டும் அணிந்து கம்பீரமாக இறங்கினான் தீரன்.

“அப்பா வந்துட்டாராம்மா?”

“வந்துட்டாருப்பா, இப்பத்தான் குளிக்கப் போனாரு. நீ இரு உனக்கு பிடிச்ச இஞ்சி டீ எடுத்துட்டு வரேன்.”

சாப்பாட்டு மேஜைக்கு பின்புறமிருந்த தொலைக்காட்சிப் பெட்டியை மேஜையின் மேலிருந்த ரிமோட் மூலம் தீரன் ஆரம்பித்து காலைநேர செய்திகளைப் பார்த்துக்கொண்டே அம்மா கொடுத்த இஞ்சி டீயைக் காலி செய்ய சிறிது நேரத்தில் உலகநாதன் சாப்பாட்டு அறைக்குள் நுழைந்தார்.

“என்ன தம்பி. டீ குடிச்சிட்டியா? சாப்பிடலாமா?”

“உங்களுக்காகத்தாம்பா வெயிட்டிங். சாப்பிடலாம். அம்மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?”

“உனக்குப் பிடிச்ச ரவா உப்புமாவும் தக்காளி சட்டினியும்தான். உன்ற ஐயனுக்கு வழக்கம்போல பிரட் சான்ட்விட்ச். கொஞ்சம் பொறு இப்ப எடுத்துட்டு வந்துடறேன்.” சமையலறையிலிருந்து அதிர வைக்காத சத்தத்துடன் கூறினாள் காமாட்சி.

“இன்னிக்கு காலேஜு முடிஞ்சதும் வீட்டுக்கு சீக்கிரம் வந்துடு தம்பி. சாயிங்காலம் நாமெல்லாம் வெளிய போறோம்.”

“என்னப்பா ஏதாவது விஷேசமா? இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இல்லையே?”

“அதில்லைய்யா, உங்கம்மா இந்த வெள்ளிக்கிழமை இரத்தின விநாயகர் கோயிலுக்கு உன்னையும் கூப்பிட்டுக்கிட்டு போகனும்னு சொன்னா அதான்.”

“அது சரி, எனக்கு வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏன்தான் இப்படி என்ன தண்டிக்கிறாங்களோ தெரியல. நீங்களாவது சொல்லுங்களேன்பா எனக்கு கோயிலுக்கு போறதெல்லாம் பிடிக்காதுன்னு.”

“கோயிலுக்கு போறது சாமி கும்பிட மட்டும் இல்ல தம்பி, மனசு ஆரோக்கியத்திற்கும்தான்.” அதற்குள் நுழைந்துவிட்ட காமாட்சி கணவருக்கு பதிலளிக்கும் அவகாசமே வழங்காமல் கூறினாள்.

“அது சரி. சரி சரி, நான் வரேன்.”

சாப்பாடு மெளனமாக முடிய. தொலைக்காட்சியில் செய்திகள் வாசிப்பு நின்றிருந்தது. உலகநாதனும் தீரனும் கைகழுவி விட்டு எழுந்தனர். தீரன் மாடிப்படிகளில் மறுபடியும் ஏறி தன்னுடைய அறைக்கு சென்று காலேஜுக்கு போகும்போது எடுத்துப்போகும் ஒரு பக்கம் மட்டும் மாட்டும் சிறிய பையை எடுத்து மாட்டிக்கொண்டு திரும்பவும் கீழே வந்தான். வழக்கம் போல அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு விடைபெற்றுக்கொண்டு அப்பாவிடம் சொல்லிக்கொண்டு தன்னுடைய பல்சருக்கு வந்து அதை உதைத்து ஆரம்பித்துக்கொண்டு காவலாளி திறந்த கேட்டை விட்டு வெளியே வந்து வேகமெடுத்து விரைந்தான்.

லாலி ரோட்டில் நுழைந்து இடது புறமாக ஒடித்துக்கொண்டு மருதமலை ரோட்டில் நுழைய காலை நேர காற்று இதமாக வருடிவிட்டது. தமிழ்நாடு வேளாண்மைக் கல்லூரியைத் தாண்டித் தெரிந்த ஒரு கட்டிடத்தில் வந்து நிறுத்தினான். கட்டிடத்தின் மேல் அன்னை தெரேசா மகளிர் விடுதி என்ற போர்டு மஞ்சள் நிறத்தில் தெரிய நீண்டு வளைந்திருந்த வாசல் ஏதோ கிறிஸ்தவ தேவாலயத்திலிருக்கும் ஆர்ச் போல் தெரிந்தது. அதனுள் நுழைத்து வாயிற்படிகளுக்கருகில் சென்று பைக்கை நிறுத்தினான். சாவியை எடுத்து சுழற்றிக்கொண்டே வாயிற்படிகளில் ஏறி உள்ளே நுழைய எதிர்பட்ட விடுதியின் காப்பாளர் சாந்தி இவனைப் பார்த்துவிட்டு நின்றுவிட்டாள்.

“குட்மார்னிங் மேடம்.”

“குட்மார்னிங் தீரன். என்ன இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட போல இருக்கு? ரோஸ்லின் கீழ வரவரைக்கும் இங்கேயே வெயிட் பண்ணு என்ன? மேல போயிடாத.”

“சரி மேடம். எத்தனை தடவதான் சொல்லுவீங்க?”

“நீயும் ரோஸ்லினும் நண்பர்களாக இருக்கலாம் தீரன். மத்தப் பெண்கள் இருக்கின்றார்கள் அல்லவா? இது மகளிர் விடுதி என்பதால் அப்படி இப்படி சுதந்திரமாக இருக்கும் அவர்கள் உன்னைப் பார்த்துவிட்டு நெளியக்கூடாது இல்லை? அதனால்தான்.”

“அது சரி. சரி மேடம். நான் இங்கேயே வெயிட் பன்றேன்.”

ஆனால் அதிக நேரம் அவனைக் காத்திருக்க வைக்க வேண்டாம் என்பது போல மாடிப்படிகளிலிருந்து வேகமாக இறங்கிக்கொண்டிருந்தாள் ரோஸ்லின். அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு அன்று பூத்த ரோஜாப்பூ போல பார்ப்பவருக்கும் புத்துணர்ச்சி தரும்படி தெரிந்தாள் ரோஸ்லின். மூன்றடி நீள கூந்தல் விரிந்து இரண்டு புறங்களிலும் அழகாக இறங்கியிருக்க அதில் இன்னமும் ஒட்டிக்கொண்டிருந்த சிறிய நீர்த்திவலைகள் அவள் தலையின் அசைப்புக்கு சிதறித் தெறித்தன. சிறிய நெற்றியின் மையத்தில் ஒரு ரோஸ் நிற பொட்டு தெரிய, அதன் கீழே வளைந்து இறங்கியிருந்த புருவங்களின் அடியில் கவர்ந்திழுக்கும் கண்கள் தெரிந்தது. சீரான மூக்கும் அதன் கீழே இரண்டு ரோஜா இதழ்களை எடுத்து வெட்டி ஒட்டிவிட்டானோ பிரம்மன் என்று வியக்கும்படி தெரிந்த உதடுகளும் அதன் கீழே இருந்த தாடையிலிருந்த மச்சமும் அவளின் அழகுக்கு அழகு சேர்த்தன. கழுத்துவரை மூடியிருந்த சீரான ரோஸ் நிற சுரிதாரில் மூழ்கி பனியில் நனைந்த ரோஜாப்பூவை நினைவு படுத்தினாள்.

“வாவ், ரோஸ். இன்னைக்கு என்ன உனக்கும் எனக்கும் பிடித்த ரோஸ் நிறத்தில் பளிச்சுனு இருக்க? ரொம்ப சந்தோஷமா இருக்கியோ?”

“உன்னைப் பார்த்த நாள் எல்லாமே என்னோட சந்தோஷ நாட்கள்தானே தீரா?”

“ஐயோ, தாங்கமுடியலயே, இவ்வளவு ஐஸ் வைக்கிறாளே…”

“டேய், எது சொன்னாலும் உடனே ஐஸ்னு சொல்லிடறதா?”

“பின்ன? நீ இந்தமாதிரி பொழிஞ்சா ஐஸ்னு சொல்லாம சகாரான்னா சொல்ல முடியும்? சரி சரி, கிளம்பு நேரமாயிடுச்சி. பத்து மணிக்குள்ள போகலன்னா அருள்பிரகாசம் சாருக்கு அருள் வந்துடும்…”

“டேய். அவருக்கு எப்பவுமே உன்னையும் என்னையும் ரொம்ப பிடிக்குங்கிறதால திட்டலாம் மாட்டாரு. நீ வேணும்னா பாரேன்…”

“ஐயோ, உனக்கு அவரப் பத்தி சரியாத் தெரியல ரோஸ், அவரு என்னதான் பாசமா இருந்தாலும் ஒழுக்கம்னு வந்துட்டா சாமியாட்டம் ஆடிடுவாரு. சரி சரி, பேச்ச வளக்காம வண்டியில ஏறு…”

தீரன் பல்சரை உதைக்க அது அலறி புகையை வெளியே விட்டது. ரோஸ்லின் பழக்கப்பட்டுவிட்டதால் இலகுவாக ஏறி இரண்டு பக்கமும் கால்களைப் போட்டுக்கொண்டு நாகரீக இடைவெளிவிட்டு அமர்ந்துகொண்டாள். தீரன் திரும்பவும் மருதமலை சாலைக்கு வந்து வேகம் எடுத்து விரைந்தான்.

“டேய் தீரா, இன்னிக்கு ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு காரணம் கேட்ட இல்ல, உண்மையான காரணம் காலங்காத்தால ஒரு கவிதை எழுதினேன்டா. உன்னப் பத்திதான். அது அருமையா வந்துட்டதால சந்தோஷமா இருக்கேன்.”

“ஐயோ… தாயே… ஆரம்பிச்சிட்டியா உன் கவிதைய? கடவுளே என்ன மட்டும் காப்பாத்துடா… ரோஸ், உனக்கே தெரியும் எனக்கு கவிதைகள்னாலே பிடிக்காதுன்னு. இந்த உளரலை எல்லாம் நான் கேட்கனுமா? அதுவும் என்னப் பத்தியும் நம்ம நட்பைப் பத்தியும்தான் பேச்சிலேயே நிறைய உளர்ற இல்ல அப்புறம் கவிதை வேற வேணுமா? வேற ஏதாவது பேசேன்.”

சட்டென சந்தோஷம் வடிந்துவிட்டதுபோல முகவாட்டமடைந்த ரோஸ்லின் அதை அவனுக்குக் காட்டாமல் திரும்பிக்கொண்டாள். ஆனால் அவளின் திடீர் மெளனத்தை வைத்தே அவளின் முகவாட்டத்தை புரிந்துகொண்டுவிட்ட தீரனுக்கு என்னவோ போலிருந்தது. அடச்சே, ஆரம்பிச்சிட்டியாடா உன்னோட அழிச்சாட்டியத்த? அவ சந்தோஷமான விஷயம் சொல்றப்பல்லாம் ஏதாவது குறுக்கிட்டு உளறி அவளோட மனச நோகடிக்கிறதே உனக்கு வேலையா போச்சு. பாவம்டா, ஒரு கவிதைதானே அதுவும் உன்னைப் பற்றியதுன்னுதானே சொல்றா, என்னன்னு ஒரு சம்பிரதாயத்திற்காகவது கேட்டு வையேன். ஒரு அடி குறைந்தா போயிடுவ? மனசாட்சியின் கேள்வி உறுத்த, தயக்கத்துடன் கேட்டான்.

“ஹேய், ரோஸ். கோபமா? சரி சரி, நான் இனிமே அப்படி பேசல. உன்னோட கவிதையை சொல்லு கேட்கின்றேன்…”

அவன் கவிதையைக் கேட்டவுடன் சட்டென்று பிரகாசமாகிவிட்ட ரோஸ்லின் அதிகாலையில் தனக்கு தோன்றி உடனே தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துவிட்ட கவிதையைக் கூறினாள். கவிதையைக் கேட்ட தீரனின் முகம் சிறிது மாறியது.

“கவிதை நல்லாத்தாண்டி இருக்கு. ஆனா, நீ ஒரு மழலைக் குறள் சொல்லியிருக்கியே, அது மட்டும் இல்லன்னா இது ஏதோ உன்னோட காதலனைப் பற்றி எழுதிய கவிதைன்னு எல்லாரும் நினைச்சுடுவாங்க…”

“டேய்… தீரா, உனக்கு எல்லாத்துலயும் விளையாட்டுதானா? மத்தவங்களுக்கா நான் கவிதை எழுதறேன்? என் ஆத்ம திருப்திக்குத்தான் எழுதறேன். கவிதையையே மதிக்காத உன்ன மாதிரி ஜடம்கிட்ட வந்து சொன்னேன் பாரு என்னைச் சொல்லணும்.”

திரும்பவும் அவள் முகத்தைத் திருப்பிக்கொண்டதைப் பார்த்த தீரனுக்கு இதென்னடா வம்பா போச்சு என்று தோன்றியது.

“ஏ, ரோஸ்… நீதான கவிதையைக் கேளுன்னு அடம்பிடிச்ச? கவிதையைக் கேட்டுட்டு விமர்சனம் பண்ணாதன்னு சொல்லியிருந்தா நான் பண்ணியிருக்க மாட்டேனே? சரி சரி, மறுபடியும் முகத்தைத் தூக்கி வச்சுக்காத? நீ எப்பவும் சிரிச்ச முகமா இருந்தாத்தான் எனக்கு பிடிக்கும்.”

அவனின் உடனடி சமரசத்தைக் கண்ட ரோஸ்லின் தனக்குள் சிரித்துக்கொண்டாள். தீரன், எவ்வளவு அருமையான நண்பன்! விளையாட்டுக்குக்கூட என் முகம் வாடிவிடக்கூடாது இவனுக்கு. எத்தனை தவமிருந்தேனோ இப்படிப்பட்ட ஒரு நண்பன் கிடைப்பதற்கு. ஆண்டவா இந்த நட்பு நான் வாழும்வரை நிலைக்கச்செய்…

“ஹேய்… என்ன ஆச்சு? சத்தத்தையே காணோம்? வேணும்னா என்னோட முதுகுல எப்பவும் அடிக்கிற மாதிரி ரெண்டு அடி அடிச்சுக்க தாயே, இப்படி பேசாம இருந்தெல்லாம் என்ன கொல்லாத…”

“நீ வேறடா… சும்மா யோசனையில இருந்தேன் அவ்வளவுதான். இனிமே நான் உன்கிட்ட கவிதை சொல்லல போதுமா?”

“இத ஒரு நூறு தடவையாவது சொல்லியிருப்பேடி நீ…”

“கால வாரிட்டியேடா…”

அவனின் முதுகில் செல்லமாக ஒரு குத்து குத்திய ரோஸ்லின் வாய்விட்டு சிரிக்க, தீரனும் சேர்ந்துகொண்டான். இந்தச் சிரிப்பு சத்தத்தில் கரைந்து வண்டி வேகமெடுக்க வடவள்ளியை வேகமாக கடந்து மருதமலைக்கு கொஞ்சம் முன்னாலிருந்த பாரதியார் பல்கலைக்கழகத்தின் அகலவிரிந்த நுழைவு வளைவை வந்தடைந்தது. மருதமலை ரோட்டிலேயே வட்டமாக அகன்று விரிந்த இடம் அமைத்து அதன் இரண்டு பக்கங்களிலும் பஸ் நிறுத்தத்தையும் நடுவில் இரண்டு பெரிய நுழைவு வளைவுகளையும் கொண்டு தெரிந்தது கோவையின் பாரதியார் பல்கலைக் கழகம். தீரன் இடதுபுற வளைவில் பைக்கை நுழைக்க இரண்டு பக்கங்களும் விரிந்து பரந்த மரங்கள் பச்சைப் பசேலேன்று கண்களுக்கு விருந்தளிக்க நீண்ட பாதையின் முடிவில் தெரிந்த பாரதியார் பல்கலைக் கழகத்தின் முக்கிய கட்டிடம் தெரிந்தது. பாதை இரண்டு புறமும் கட்டிடத்தைச் சுற்றி வளைந்து போக, இடது புறமாக நுழைத்து கொஞ்சம் தள்ளி இருந்த வாகனங்களை நிறுத்துமிடத்திற்கு வந்து வண்டியை நிறுத்தினான் தீரன். பின்னாலிருந்த ரோஸ்லின் இறங்கிக்கொள்ள, அதன்பின் இறங்கிய தீரன், வண்டியைப் பூட்டிவிட்டு அவளுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

“ரோஸ், இன்னைக்கு முதல் பீரியட் என்ன?”

“வேற என்ன? பிஸினஸ் மேத்ஸ்தான். அருள்பிரகாசம் சாரோட கிளாஸ்தாண்டா. அதான் பத்து மணிக்குள்ளேயே வந்துட்டமே. அப்புறமும் என்ன கேள்வி?”

“அதுக்காக கேக்கலடி. அவருதான் ரெண்டு பாடத்துக்கு வராரு இல்ல? அதனால இப்ப என்ன பாடம் எடுக்க வர்றாருன்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன். உனக்குத்தான் எல்லா கால அட்டவணையும் மனப்பாடம் ஆச்சே!”

“சரி சரி, இதோ அருள்பிரகாசம் சாரே எதிர்ல வர்றாரு பாரு…”

அவள் கூறியபடியே அவர்களிருவரை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்தார் அருள்பிரகாசம்.

“குட்மார்னிங் சார்…”

“பேட் மார்னிங் தீரன்…”

வழக்கமில்லாத வழக்கமாக கெட்ட காலைப் பொழுது என்று அருள்பிரகாசம் கூறியது அதிர்ச்சியாக இருந்தது தீரனுக்கு. அவருடைய முகத்தில் தெரிந்த அவசரமும் படபடப்பும் அவர் அப்படி கூறியதற்கு ஏதோ காரணம் இருப்பதை தீரனுக்குத் தெளிவு படுத்தியது.

தொடர் வரிசை<< இதயமேந்திக் கேட்கின்றேன் – முன்னோட்டம்

அகஸ்ரீ

எழுத்தாளன், கவிஞன், கலைஞன், இசைஞன் மற்றும் சர்வ கலா இரசிகன்...

0 Comments

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன