மூன்றாவது கண் - 1. ருத்ர முகம்: முன்னோட்டம்
இன்று காலை பத்துமணிக்கு ஏற்பாடு செய்திருக்கும் பொதுமக்கள் சந்திப்பு ஒன்றும் புதியதல்ல. தன்னுடைய மெய்க்காப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் இது ஆபத்தானது என்று எச்சரிப்பதும் பல்வேறுவிதமான முன்னேற்பாடுகளை கவனமாக செய்வதும் அதன்பிறகு ஒன்றுமே நிகழாமல் பத்திரமாக திரும்பி வருவதும் வாடிக்கையாகிவிட்டது.

புது தில்லி, இந்தியா...
பல்வீந்தர் சிங் தனது தலைப்பாகையை அணிந்துகொண்டு இருந்தார். பழக்கப்பட்ட கைகள் தன்னாலேயே சுற்றுகளை போட்டுக்கொண்டிருக்க அவரின் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்று தமிழ்க்கவிஞன் ஒருவன் பாடிய இந்த மேன்மைமிகு பாரத நாட்டின் ஜனாதிபதி தான் என்பதை இன்னமும் அவரால் நம்பமுடியவில்லை. இந்திய நாட்டின் ஏழ்மை மிகுந்த மாநிலங்களின் மூலைகளில் சமூகசேவையில் மூழ்கி வேறு எதிலும் சிந்தனையை செலுத்தாமலிருந்த தன்னை இப்படி இந்தியாவின் அரசியல் மாற்றங்கள் சட்டென்று ஏணியேற்றி ஜனாதிபதி பதவிக்கு தள்ளிவிடும் என்பதை அவர் கனவிலும் நினைத்திருக்கவில்லை. தனது சேவைகளை அரசியல்வாதிகள் இவ்வளவு பெரியதாக நினைத்திருப்பார்கள் என்பதில் அவருக்கு இன்னமும் சந்தேகம்தான். விதியை நம்பாத சீக்கிய மரபில் வந்த அவருடைய சுபாவம் இதை அதிர்ஷ்டம் என்றோ விதியின் விளையாட்டு என்றோ ஒப்புக்கொள்ள மறுத்தது. இதோ கண்ணைமூடித் திறப்பதற்குள் ஒரு வருஷம் ஓடிவிட்டது. இந்தியநாட்டின் மாறாத விதியின் படி அரசியல் மாற்றங்கள் நித்தமும் ஒரு நாடகமாக நடந்தேறிக்கொண்டிருக்க, இடையில் எப்படியோ மக்களின் மனதில் தனக்கென்று ஒரு தனியிடம் பிடித்துவிட்டதே மிகப்பெரிய சாதனைதான் என்று நினைத்த அவருக்கு சட்டென்று உதட்டினோரம் ஒரு இளம் புன்னகை உருவானது. மக்களின் மனதில் இடம்பிடிப்பது எவ்வளவு சுலபம் என்பதை பார்த்துவிட்ட அவருக்கு அதைச் செய்ய முயற்சிக்காமல் மற்ற அனைத்து தகிடுதத்தங்களும் செய்து மக்களை கவர நினைக்கும் அரசியல்வாதிகளின் முட்டாள்தனத்தைப் பற்றிய நினைப்பு கொண்டுவந்த புன்னகை அது.
கிரிங்... கிரிங்...
தொலைபேசியின் அலறலில் எண்ணங்கள் சட்டென்று முடிந்துவிட அமைதியாக தொலைபேசியின் பேச்சு வாங்கியை எடுத்தார்.
"ஹாங்?"
"மிஸ்டர் பிரசிடெண்ட், ஐ ஆம் சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ். யூ ஹேவ் ஆஸ்க்ட் மீ டு ரிமைன்ட் யு அபெளட் தி பப்ளிக் மீட்டிங் டுடே."
இவருக்கு பெரிய அமெரிக்கன் என்று நினைப்பு. ஹிந்தியில் பேசினால் கவுரக்குறைவு போலிருக்கின்றது. தன்னுடைய அந்தரங்க காரியதரிசி ஆச்சாரியாவை மனதில் கண்டித்துக்கொண்டு ஹிந்தியில் பேச்சைத் தொடர்ந்தார் பல்வீந்தர் சிங், "ஆமாம். மக்களை எப்படி நான் மறக்க முடியும்? அவர்கள்தான் எனக்கு மிகவும் முக்கியமானவர்கள். இன்றைக்கு காலை பத்து மணிக்கு பொதுமக்கள் சந்திப்பு இராஜீவ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது சரிதானே?"
"அற்புதம், உங்களின் நிகழ்ச்சிகளை நினைவு வைத்துக்கொள்வதில் எப்போதுமே நீங்கள் சிறந்து விளங்குகின்றீர்கள் ஜனாதிபதி ஐயா. உங்களிடம் இன்னொரு விஷயம் பற்றியும் சொல்ல வேண்டும். உங்களின் மெய்காப்பாளர்கள் இதுபோன்ற திறந்த வெளி சந்திப்புகள் உங்களின் பாதுகாப்புக்கு மிகவும் ஊறுவிளைவிக்கும் செயல் என்று நினைக்கின்றார்கள்."
பல்வீந்தர் சிங் மனதிற்குள் மறுபடியும் சிரித்துக்கொண்டார். இன்று காலை பத்துமணிக்கு ஏற்பாடு செய்திருக்கும் பொதுமக்கள் சந்திப்பு ஒன்றும் புதியதல்ல. கிட்டத்தட்ட இந்த ஒரு வருஷத்தில் ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமையிலும் நிகழும் ஒரு நிகழ்வுதான். தன்னுடைய மெய்க்காப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் இது ஆபத்தானது என்று எச்சரிப்பதும் பல்வேறுவிதமான முன்னேற்பாடுகளை கவனமாக செய்வதும் அதன்பிறகு ஒன்றுமே நிகழாமல் பத்திரமாக திரும்பி வருவதும் வாடிக்கையாகிவிட்டது.
"ஆமாம், எனக்கும் தெரியும். இருந்தாலும் பொதுமக்கள் சந்திப்பு என்பது என்னால் ஒதுக்க முடியாத ஒன்று. இன்னும் பத்து நிமிஷத்தில் கீழே இருப்பேன்."
ஆச்சாரியாவின் பதிலுக்கு காத்திராமல் இணைப்பை துண்டித்துவிட்டு தொலைபேசியை அதனிடத்தில் வைத்த பல்வீந்தர் சிங் சட்டென்று நினைப்பு வந்தவர் போல அதை மீண்டும் எடுத்து ஒரு எண்ணை டயல் செய்யத் தொடங்கினார். சில மணியோசைகளுக்குப்பின் மறுமுனையில் இணைப்பு கிடைக்க ஒரு பெண்ணின் மென்மையான குரல் ஸ்பீக்கரில் வழிந்தது.
"மே ஈஸ்வரி போல்ராவ், யே கோன் ஹே?"
"ஈஸ்வரி, நான்தான் பல்வீந்தர் சிங் பேசுகின்றேன்."
"ஹலோ பிரசிடென்ட் சார், எப்படி இருக்கின்றீர்கள்? இப்படி திடீர் திடீரென்று அதிர்ச்சியைக் கொடுக்காதீர்கள் என்று எத்தனை முறை கூறியிருக்கின்றேன்?"
"ஈஸ்வரி, உன்னால் எனக்கு ஒரு விஷயம் ஆகவேண்டும். அதை உன்னால் மட்டும்தான் செய்ய முடியும் என்று எனக்கு தெரியும். செய்வாயா?"
"விஷயம் என்னவென்று கூறாமலேயே உதவி கேட்கின்றீர்கள். பாரத தேசத்தின் ஜனாதிபதி கேட்டு நான் முடியாது என்று கூற முடியுமா? என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் பிரசிடென்ட் சார்."
"ஈஸ்வரி, எத்தனை முறை கூறியிருக்கின்றேன்? நீ என்னுடைய மகள் போன்றவள், உனக்கு என்னிடம் எல்லா உரிமையும் இருக்கின்றது. தயவு செய்து அப்பா என்றே என்னை அழை என்று எத்தனை முறை கூறியிருக்கின்றேன். கேட்கின்றாயா? இந்த பிரசிடென்ட் சார் போன்ற மரியாதையையெல்லாம் விடமாட்டாயா?"
"அது எப்படி சார்? ஒரு கட்டை பிரம்மச்சாரி இந்திய ஜனாதிபதியை நான் அப்பா என்று கூப்பிட்டால் இந்திய மக்கள் ஒத்துக்கொள்வார்களா? அது எக்காலத்திலும் நிகழாத ஒன்று பிரசிடென்ட் சார். நீங்கள் கேட்க வந்த உதவியைப் பற்றி கூறுங்கள்."
"எப்போதும்போலத்தான் பேசுகின்றாய். மாற்றமே இல்லை. சரி, இப்போது உன்னிடம் அதைப்பற்றி விவாதிக்க எனக்கு நேரம் இல்லை. பொதுமக்கள் சந்திப்பு இருக்கின்றது. இன்னமும் பத்து நிமிஷத்தில் நான் கீழே போகவில்லையென்றால் அந்த ஆர்வக்கோளாறு ஆச்சாரியா என்னவோ ஏதோவென்று பதறிப்போவார். நான் கேட்க வந்த உதவியைப் பற்றி சட்டென்று சொல்லிவிடுகின்றேன். உனக்கு கொல்கத்தா மதர் தெரேஸா ஆர்பன் ஹவுஸ் தெரியும்தானே? அங்கே சென்று சிவகாமி என்று ஒரு அம்மையாரைப் பற்றி தெரிந்துகொள்ள வந்திருப்பதாக நீ சொல்ல வேண்டும். நீ யாரென்று கேட்டால் அந்த அம்மையாரின் மகள் என்று கூறவேண்டும். அதன்பிறகு என்ன அவர்கள் தெரிவிக்கின்றார்களோ அதை யாரிடமும் சொல்லாமல் என்னிடம் தெரிவிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இதில் நான் சம்பந்தப்பட்டிருப்பதாக காட்டிக்கொள்ளவே கூடாது. செய்ய முடியுமா?"
"இது என்ன புதுமையாக இருக்கிறது? இப்படி ஒரு உதவியை நீங்கள் கேட்டு நான் இதுவரை பார்த்ததேயில்லையே? அது சரி நான் அந்த அம்மையாரின் மகளென்று கூறினால் அவர்கள் நம்ப வேண்டாமா?"
"அதைப் பற்றியெல்லாம் நீ கவலைப்படவே வேண்டாம். நீதான் மகள் என்று சொன்னால் அவர்கள் கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள். அதோடு மட்டுமில்லாமல் அந்த அம்மையார் இப்போது இல்லத்திலிருக்க மாட்டார்கள் என்று நினைக்கின்றேன், அவர்கள் கடைசியாக வெளியே செல்லும் முன் ஏதாவது கடிதம் கொடுத்துவிட்டு தன்னுடைய மகள் வந்து கேட்டால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்களா என்று விசாரித்து அப்படியென்றால் அந்த கடிதத்தை வாங்கி அதையும் பிரிக்காமல் என்னிடம் தரவேண்டும். செய்வாயா?"
"இது என்ன விடுகதைக்கு மேல் விடுகதையாக போட்டுக்கொண்டே இருக்கின்றீர்கள்? இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்? அது சரி அந்த அம்மையாருக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?"
"ஈஸ்வரி, அதைப் பற்றியெல்லாம் சொல்ல இப்போது எனக்கு நேரம் இல்லை. பிறகு ஒரு நாள் விவரமாக கூறுகின்றேன். எனக்காக இந்த உதவியை செய்வாயா?"
"உங்களுக்காக செய்கிறேன் என்றுதான் ஏற்கனவே உத்திரவாதம் வாங்கிக்கொண்டீர்களே? செய்யாமல் இருக்க முடியுமா? கண்டிப்பாக செய்கின்றேன். அது சரி பொதுமக்கள் சந்திப்பு இருக்கும் இந்த காலை வேளையில்தான் உங்களுக்கு இது ஞாபகம் வந்ததா? முன்னமே என்னிடம் கேட்டிருந்தால் நான் செய்திருப்பேனே? இப்படி அவசர அவசரமாக கேட்க வேண்டிய தேவை என்ன?"
"ஈஸ்வரி, உன்னிடம் இருக்கும் சிறந்த விஷயம் கூர்மையான அறிவு. அதே சமயம் சில நேரங்களில் அதுதான் எனக்கு மிகவும் சங்கடத்தையும் கொடுத்துவிடுகின்றது. இந்தக் கேள்விக்கும் அப்புறம் பதில் சொல்கின்றேன். இன்னும் இரண்டு நாளில் இந்த செயலை செய்து முடித்துவிட்டு எனக்கு விவரம் சொல்வாயா?"
"இரண்டு நாளா? அப்படி என்ன உயிர்போகிற அவசரம்? இங்கிருந்து கொல்கத்தா செல்லவே எனக்கு இரண்டு நாளாகிவிடுமே?"
"உயிர்போகிற அவசரம்தான். ரயிலில் போனால்தான் இரண்டு நாள் ஆகும். அடுத்த விமானத்தைப் பிடித்து போய்வந்துவிடு. எவ்வளவு செலவு ஆனாலும் நான் கொடுத்துவிடுகின்றேன்."
"உங்களிடம் எத்தனை முறை கூறியிருக்கின்றேன்? பணத்தால் என்னை எப்போதும் விலைக்கு வாங்க முடியாது. உங்கள் பணத்தை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். வேலையை முடித்துவிட்டு நாளைக்கு மறுநாள் காலையில் உங்களிடம் விவரமாக சொல்கிறேன். பை..."
"ரொம்ப நன்றி... பை..."
தொலைபேசியை வைத்தபிறகும் ஈஸ்வரியின் கடைசிக்கேள்வி நெஞ்சில் எரிந்தது 'அப்படி என்ன உயிர் போகிற அவசரம்?' அவளுக்குத் தெரிய நியாயமில்லை. நான் கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியுமா? மனசாட்சியின் கேள்வியை அலட்சியம் செய்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தார் பல்வீந்தர் சிங்.
ஜனாதிபதி மாளிகையின் கீழ்தளத்தில் ஒரு சிறு குழுவே அவருக்காக காத்திருந்தது.
"ஆச்சாரியா, எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டதா?"
"அனைத்தும் உங்களுக்காகத்தான் காத்திருக்கின்றது ஜனாதிபதி ஐயா. நீங்கள் இங்கிருந்து கிளம்பினால் சரியாக 9:50 மணித்துளிகளுக்குள் போய் சேர்ந்துவிடுவீர்கள். மற்ற பாதுகாப்பு விஷயங்களை உங்களின் மெய்க்காவலர் படை ஏற்கனவே செய்துவிட்டார்கள்."
"பீம்சிங், பாதுகாப்பு ஏற்பாடுகள் மக்களை பாதிக்காத வண்ணம் செய்துவிட்டீர்களா?"
"சாஹேப், உங்களுக்குத் தெரியாததல்ல, சிறந்த பாதுகாப்புக்கு மக்களும் கொஞ்சம் வளைந்து கொடுக்கத்தான் வேண்டியிருக்கும். அவர்களின் வசதிக்குப் பார்த்தால் உங்களின் பாதுகாப்புக்கு குறைவு இருக்க வேண்டியதாயிருக்கும். அதை என்னால் அனுமதிக்க முடியாது என்று உங்களுக்கே தெரியும். இந்த நாட்டின் சிறந்த ஜனாதிபதியான உங்களை காப்பதே என்னுடைய முக்கிய குறிக்கோள், மக்களின் ஆசையும் கூட."
"பீம்சிங், உங்களின் கடமையுணர்ச்சியை நான் நன்கறிவேன். ஆனால் மக்களுக்கு குறைந்த அளவிற்கு சிரமம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இந்த மக்கள் இல்லையென்றால் இந்த நாட்டுக்கு ஒரு ஜனாதிபதி தேவையில்லை."
"சாஹேப், உங்களுக்கான விஷேச குண்டு துளைக்காத கார் காத்திருக்கின்றது. போகலாமா?"
"உடனே போக வேண்டியதுதான். ஆச்சாரியா நீங்கள் என்னுடன் வாருங்கள்."
பல்வீந்தர் சிங் மெய்க்காவலர் சூழ காருக்குள் ஏறி அமற முன் பக்க இருக்கையில் ஆச்சாரியா ஏறிக்கொண்டார்.
நிமிஷங்கள் நொடிகளாக கரைய சரியாக 9:45 மணிக்கு இராஜீவ் மைதானம் கண்முன்னே விரிந்தது. பரந்து விரிந்த பசுமைக்கு நடுவில் ஜனாதிபதிக்கென்று போடப்பட்டிருந்த சிறப்பு மேடை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கண்களை உறுத்தின. மேடையைச் சுற்றி மக்கள் கூட்டம் நீண்ட நேரம் நிற்கும் வலி தெரிய வியர்த்து வழிந்துகொண்டு அவருக்காக காத்திருந்தது. கார் சரியாக மேடைக்கு முன்னால் போய் நிற்க கீழிறங்கிய பல்வீந்தர் சிங் பலத்த கரகோஷத்திற்கிடையே மெய்க்காவலர்கள் சூழ மேடையேறினார். ஆச்சாரியா பின்னாலேயே ஏறி அருகில் நின்றுகொண்டார்.
மேடையின் நடுவிலிருந்த குண்டு துளைக்காத கண்ணாடி கூண்டுக்குள் ஜனாதிபதி சென்று அமர்ந்துகொள்ள, மேடையில் இதுவரை நடுநாயகமாக நின்றிருந்த போலீஸ் ஐ.ஜி. விநாயக் பல்வீந்தர் சிங்கை நெருங்கி கைகுலுக்கிக்கொண்டார்.
"எப்படி இருக்கின்றீர்கள் ஜனாதிபதி ஐயா?"
"நன்றாக இருக்கின்றேன் விநாயக். எல்லாம் சரியாக இருக்கின்றதா?"
"ஒரு பிரச்சினையும் இல்லை சார். ஆரம்பிக்கலாமா?"
"சரி, ஆரம்பிக்கலாம்."
மேடையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த மைக்கை நோக்கி போலீஸ் ஐ.ஜி. விநாயக் விரைந்தார்.
"இங்கு குழுமியிருக்கும் மக்களே, உங்களுக்கெல்லாம் ஏற்கனவே தெரிந்ததுபோல ஒவ்வொரு மாதத்தின் முதல் சனிக்கிழமையன்றும் நமது பெருமதிப்பிற்குரிய ஜனாதிபதி திரு. பல்வீந்தர் சிங் அவர்கள் உங்களையெல்லாம் நேரில் சந்தித்து குறைகேட்கும் நாள் இன்று. நமது பெருமதிப்பிற்குரிய ஜனாதிபதி திரு. பல்வீந்தர் சிங் அவர்களின் மாதம் தவறாத இந்த சீரிய செயல் இந்திய வரலாற்றிலேயே போற்றிப் புகழவேண்டிய ஒன்றாகும். இவ்வாறு திறந்தவெளியில் மக்களை சந்திப்பது தனது பாதுகாப்புக்கு ஆபத்து என்பதை அறிந்திருந்தும்கூட நமது பெருமதிப்பிற்குரிய ஜனாதிபதி--"
பேசிக்கொண்டிருந்த போலீஸ் ஐ.ஜி. விநாயக் சட்டென்று விரைத்துப்போய் வெட்டப்பட்ட மரம்போல் சாய்ந்தார்.
"ஐயோ, ஐ.ஜி சார் என்ன ஆச்சு?" ஆச்சாரியா பதறிப்போய் நெருங்கிவர பின்னால் ஏதோ சத்தம் கேட்டு திரும்பினார்.
ஜனாதிபதி பல்வீந்தர் சிங் விரைத்துப்போய் வெட்டப்பட்ட மரம்போல் உட்கார்ந்த நிலையிலேயே சரிந்தார்.
அலறித்திரும்பிய ஆச்சாரியா ஜனாதிபதியின் நெற்றியில் தோன்றிய சிகப்பு பொட்டை பார்த்து திக்பிரம்மை பிடித்து நின்றுவிட்டார். மெய்க்காவலர்கள் ஓடி வந்து கூண்டைத் திறந்து ஜனாதிபதியை சூழ்ந்துகொள்ள, சுயஉணர்வு பெற்ற ஆச்சாரியா திரும்பி போலீஸ் ஐ.ஜி. விநாயக்கை பார்க்க அவருடைய நெற்றியிலும் ஒரு சிகப்பு பொட்டைப் பார்த்து மயக்கம் போட்டு விழுந்தார்.
பீம்சிங் விரைந்து ஓடிவர இதற்குள் குழுமியிருந்த மக்கள் கூட்டம் அலறியடித்துக்கொண்டு மேடையை நோக்கி ஓடிவர ஆரம்பித்தனர். சுற்றியிருந்த காவலர்கள் மக்களை தடுப்பதற்காக விரைய, பீம்சிங் மெய்க்காப்பாளர் வட்டத்திற்குள் நுழைந்து ஜனாதிபதியை பார்த்தார்.
உடலில் எந்தவொரு சின்ன சிராய்ப்பும் இன்றி நெற்றியில் அளவெடுத்ததைப் போன்ற சிறிய ரத்தப் பொட்டோடு கண்கள் நிலைகுத்தி ஜனாதிபதி பல்வீந்தர் சிங் சத்தியமாய் செத்துவிட்டிருந்தார்.
உணர்ச்சியற்ற மரம்போல இன்னமும் நடந்ததை நம்பமுடியாமல் ஜனாதிபதியின் மூக்கினருகில் கையை வைத்துப் பார்த்த பீம்சிங் மனதை ஒரேயொரு கேள்வி அரித்தது, 'இது எப்படி சாத்தியம்? குண்டு துளைக்காத கூண்டுக்குள்ளிருந்த ஜனாதிபதி எப்படி தலையில் சுடப்பட்டு மரணமடைந்தார்?'