கடவுள்-2048

25 வயது ஈஷ்வருக்கு உலகமே தலைகீழாய்ச் சுற்றியது. அவனுடைய காதல் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ளமுடியாமல் காரியங்கள் செய்த கையோடு முதன்முறையாக ஓயின் ஷாப்பிற்கு சென்றபோதே உயிர் நண்பன் சிவா படித்துப்படித்து சொன்னான், முதல்தடவையிலேயே இவ்வளவு சாப்பிடாதடா உயிருக்கே ஆபத்தாகப்போகுதுன்னு, கேட்டாத்தானே?

கடவுள்-2048
எதிர்கால உலோக மனிதன் மாதிரி படம்

25 வயது ஈஷ்வருக்கு உலகமே தலைகீழாய்ச் சுற்றியது. அவனுடைய காதல் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ளமுடியாமல் காரியங்கள் செய்த கையோடு முதன்முறையாக ஓயின் ஷாப்பிற்கு சென்றபோதே உயிர் நண்பன் சிவா படித்துப்படித்து சொன்னான், முதல்தடவையிலேயே இவ்வளவு சாப்பிடாதடா உயிருக்கே ஆபத்தாகப்போகுதுன்னு, கேட்டாத்தானே? துக்கம் தொண்டையை அடைக்க அதைத் திறக்க உள்ளே விட்ட ஆல்கஹாலின் அளவு அதிகமானதில் இப்போது உலகமே சுற்றுகிறது. ஆமாம் இது என்ன இடம், திடீரென்னு வெள்ளை வெளேரென்று? ஒருவேளை நண்பன் கூறியது போலவே இறந்து சொர்க்கம் வந்துவிட்டேனா? அன்பு மனைவி உமா இங்கே இருக்கின்றாளா?

"ஹலோ மிஸ்டர் ஈஷ்வர். வெல்கம் டூ 2048!"

"2048 ஆ? யார் நீங்கள்? என்ன சொல்கின்றீர்கள்? இது என்ன இடம்?"

"மிஸ்டர் ஈஷ்வர் இது 2048ம் வருஷம், நீங்கள் இருந்த 2008ம் வருஷத்திலிருந்து கால இயந்திரத்தின் உதவியால் இந்த வருஷத்திற்கு ஒரு முக்கியமான சேவை வேண்டி அழைத்துவரப் பட்டிருக்கின்றீர்கள். என் பெயர் சந்திரபிரகாஷ். நான் இந்த இந்திய விஞ்ஞான நிறுவனத்தின் மேலாளர்."

"அட, 40 வருஷம் கழிச்சு வந்துட்டேனா? சரிதான். என்ன சேவை அது?"

"உங்களுக்கு விளக்கமாக சொல்கின்றேன். கொஞ்சம் எழுந்து இங்கே சுற்றிலும் பார்க்கின்றீர்களா?"

எழுந்து சுற்றிலும் பார்த்த ஈஷ்வருக்கு மறுபடியும் தலை சுற்றியது. இன்னமும் போதை தெளியவில்லை. வெள்ளை வெளேரென்று இருந்த அந்த வட்ட வடிவ கட்டிடத்தின் ஒரு மூலையிலிருந்த ஆய்வுக்கூடத்தில் படுக்க வைக்கப்பட்டிருந்தான். சுற்றிலும் அவனால் புரிந்துகொள்ள முடியாத அறிவியலில் மிகவும் முன்னேறிய கருவிகள் தெரிந்தன. அறைக்கு நேரெதிரில் ஒரு ஆய்வுக்கூடம் தெரிய அதிலிருந்த பெட்டகமும் பக்கத்திலிருந்த மனிதனைப் போல தோற்றமளித்த ஒரு இயந்திரமும் தெரிந்தது.

"நீங்க பார்த்த அந்த பெட்டகம் உங்களுடையதுதான். அதற்குப் பக்கத்திலிருக்கும் கடவுள்-2048 இயந்திரமும் உங்களின் கண்டுபிடிப்புத்தான். இதுவெல்லாம் நீங்கள் உங்களின் 65-வது வயதில் சாதித்த விஷயங்கள். இருப்பினும் எதிர்பாராத விதமாக நீங்கள் தற்கொலை செய்துகொண்டீர்கள். அது ஏன் என்று எங்களுக்குத் தெரியாது. அதே சமயம் உங்களின் ஆய்வு சம்பந்தப்பட்ட முக்கிய ஆவனங்களை அந்தப் பெட்டகத்தில் வைத்து அதற்கு ஒரு முறை மட்டுமே அனுமதிக்கும் நுழைவுச்சொல்லையும் வைத்துவிட்டீர்கள். என்னதான் அறிவியல் வளர்ந்தாலும் இறந்த மனிதர்களை உயிர்பிக்கும் வழியை நாங்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. அதனால்தான் கால இயந்திரத்தின் மூலம் உங்களை இங்கு வரவழைத்தோம். எங்களுக்கு அந்த நுழைவுச்சொல்லை நீங்கள் வழங்க வேண்டும். இந்த இயந்திரத்தைப் பற்றிய குறிப்புகளும் ஏன் அந்த ஆவணங்கள் முக்கியம் என்ற விவரங்களும் இந்தக் கோப்பில் இருக்கின்றது படித்துவிட்டு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் நுழைவுச்சொல்லைக் கண்டுபிடித்தவுடன் இங்கே இருக்கும் பட்டனை அழுத்தினால் நாங்கள் வந்து உங்களை மீண்டும் 2008-ம் வருஷத்திற்கே அனுப்பிவிடுவோம்."

தலையும் காலும் புரியாவிட்டாலும் வேறு வழியின்றி அதை வாங்கிக்கொண்ட ஈஷ்வர் அதன் மேல் பார்வையை செலுத்த சந்திரபிரகாஷ் சென்றுவிட்டார். குறிப்புகளைப் படிக்க படிக்க போதை முழுவதும் தெளிந்துவிட்டது ஈஷ்வருக்கு. உண்மையிலேயே இது 2048ம் வருஷம்தான். இல்லையென்றால் 2008-ல் இதுபோன்றவை சாத்தியமில்லை. படித்தவற்றின் சாராம்சம் அவன் மனதில் ஓடியது.

2008-ம் ஆண்டில் ஒரு குண்டு வெடிப்பில் தன் காதல் மனைவியை இழந்த ஈஷ்வர் வேறு கல்யாணம் செய்துகொள்ளாமல் தன்னை நாட்டின் பாதுகாப்புக்கு அற்பணித்துக்கொள்ள, இனிவரும் வருஷங்களில் முளைவிடும் எந்தத் தீவிரவாதச் சக்தியையும் முறியடிக்கும் ஒரு வலிமையான இயந்திரத்தை தயாரிக்க மிகவும் சிரமப்பட்டு தன்னுடைய அறுபத்தியைந்தாவது வயதில் கண்டுபிடித்ததுதான் கடவுள்-2048 இயந்திரம். இந்த இயந்திரத்தின் சக்தி மனிதர்களுக்கு அப்பாற்பட்டது. இதனால் எந்த உருவத்தையும் எடுத்துக்கொள்ள முடியும், இல்லை முழுவதும் கண்ணிலிருந்து மறைந்துவிடவும் முடியும். எந்தவிதமான படையையும் தனியாளாய் தோற்கடிக்கும் வல்லமை பெற்ற ஆயுதங்களை தன் உடலில் கொண்டது. எந்தவிதமான குறுகிய இடத்திற்குள்ளும் நுழையுமளவிற்கு உடலை குறுக்கிக்கொள்ளவும் சக்திவாய்ந்த கேட்டறியும் மற்றும் படம்பிடிப்பு கருவிகளையும் இயக்க வல்லது. மற்றவர்களிடம் மாட்டிக்கொண்டால் தன்னுடைய தொழில்நுட்பத்தை அவர்கள் அறியாத வண்ணம் சட்டென்று தன்னுடைய இதயப்பகுதியிலிக்கும் சக்திவாய்ந்த சிறிய அணுகுண்டால் 10 கிலோ மீட்டர் சுற்றுப்பரப்பை தூள்தூளாக்கிவிட்டு அழித்துக்கொள்ள வல்லது. ஆனால் இதன் மூளைப்பகுதியாக இயங்க வேண்டிய செயற்கை மூளைத்திறன் (Artificial Intelligence) மட்டும் இன்னமும் முழுவதுமாக முடியவில்லை. அதை முடித்துவிட்டாரோ என்னவோ என்று அறியாத வண்ணம் அதற்குள் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

நாட்டின் பாதுகாப்பு பற்றிய இந்த விஷயத்திற்கு கண்டிப்பாக தான் உதவ வேண்டும் என்று முடிவெடுத்த ஈஷ்வர் உடனே தான் நுழைவுச்சொல்லை வடிவமைக்கும் முறையை மனதில் இறுத்தினான். அவன் இன்று இருந்தால் எந்த நுழைவுச்சொல்லை வைப்பான் என்று யோசித்ததில் மூளையில் பல்பு எரிய சட்டென்று எழுந்துசென்று பெட்டகத்தை நெருங்கி உம்முக்குட்டி2008 (அவனுக்கு மட்டுமே தெரிந்த காதல் மனைவியின் செல்லப்பெயரும் அவனால் மறக்க இயலாத வருஷமும்) என்று தட்டச்சிட பெட்டகம் திறந்தது. கையில் முதலில் அகப்பட்ட ஆய்வுக்குறிப்புகளுக்கு மேல் ஒரு டைரி இருந்தது. அதை எடுத்து கடைசி பக்கங்களை ஆராய்ந்த ஈஷ்வருக்கு ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது.

தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் தான் தயாரித்த கடவுள்-2048 இயந்திரத்தின் செயற்கை மூளைத்திறன் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் அதனுடைய மூளைத்திறனால் ஏற்படப்போகும் அழிவுத்திறனும் அதை தவறான வழிகளில் பயன்படுத்த சந்திரபிரகாஷ் முயலுவதையும் அறிந்த ஈஷ்வர் அந்த இயந்திரத்தையும் அது சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் முழுவதும் அழித்துவிட முயன்ற இரவுதான் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்துவிட்டார். ஆனால் அந்தத் தற்கொலையைப் பற்றிய எந்தக் குறிப்பும் டைரியில் இல்லை. உண்மையில் தற்கொலை செய்துகொள்வதென்றால் முழுவதையும் அழிக்காமல் செய்ய வாய்ப்பேயில்லை.

பலவாறாக சிந்தித்த ஈஷ்வர் கடைசியில் ஒரு முடிவெடுத்து மொத்த ஆவணங்களையும் குறிப்புகளையும் எடுத்துக்கொண்டு இயந்திரத்தை அணுகினான்.


"இதில் நீங்கள் எதிர்பார்த்த 2000 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள் இருக்கின்றன மிஸ்டர் சந்திரபிரகாஷ். இன்று எங்களுக்கு கடவுள்-2048 கிடைக்க வேண்டும்."

"கண்டிப்பாக கிடைத்துவிடும். அது கிடைக்க வேண்டுமென்றுதானே, முழுவதும் தயாராகிவிட்டது என்று சொல்லிய ஈஷ்வரின் சொல்லை நம்பி அவரைக் கொலை செய்து தற்கொலை போல செய்தேன். ஆனால் அவர் இன்னமும் செயற்கை மூளைத்திறனை அமைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது போயிற்று. ஆனால் அவரின் முந்தியகாலத்திலிருந்து கொண்டு வந்திருக்கும் இந்த ஈஷ்வர் எப்படியும் நுழைவுச்சொல்லை கண்டுபிடித்துவிடுவான். அப்புறம் அந்தக் குறிப்புகள் கிடைத்துவிட்டால் செயற்கை மூளைத்திறனை பொருத்திவிடலாம். வாருங்கள் அடுத்த அறையிலிருக்கும் திரையில் ஆய்வுக்கூடத்தில் நடப்பதை பார்வையிடலாம்."

அடுத்த அறைக்குள் நுழைந்த அமெரிக்கனும் சந்திரபிரகாஷும் அங்கே திரையில் ஈஷ்வர் பெட்டகத்தை திறந்து எல்லா ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு கடவுள்-2048 இயந்திரத்தை அணுகுவதைப் பார்த்து சந்தோஷத்தில் மூழ்கினர்.


ஆய்வுக்கூடத்தின் பக்கவாட்டுச் சுவற்றினருகே வந்த சலீம் தன்னுடைய முதுகுப்பையிலிருந்த சிறு கருவியை எடுத்து இயக்க சுவற்றில் மறைந்திருந்த ஒரு திறப்பு திறந்து வழிவிட்டது.

ஆகா, எவ்வளவு நாட்கள் கஷ்டப்பட்டது இன்று சாத்தியமாகப்போகின்றது! கடவுள்-2048 கண்டிப்பாக நம் 'அல்லாஹ் ஜிஹாத்' தீவிரவாதக் குழுவிற்கு பயன்படப்போகின்றது. நினைத்தாலே சிரிப்புதான் வருகின்றது. தீவிரவாதத்தை அழிக்கும் கடவுள் தீவிரவாதிகளிடமே சேரப்போகின்றான். ஆஹா, தோழர்கள் பூரித்துப்போவார்கள்.

கதவைத்திறந்து உள்ளே நுழைந்த சலீம் கண்ணெதிரில் விரிந்த காட்சியைப் பார்த்து திகைத்துவிட்டான். யாரிந்த இளைஞன்? ஈஷ்வரைப் போலவே இருக்கின்றானே? அவருடைய மகனாயிருப்பானோ? இல்லையே அவர் மனைவி இறந்தபின் யாரையும் கல்யாணம் செய்துகொள்ளவில்லையே? ஆமாம், கல்யாணம் செய்தால்தான் குழந்தையா? இன்றைக்கு இருக்கும் விஞ்ஞானத்தில் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளாமலேயே குழந்தையை உருவாக்கும் வித்தைகள் வந்துவிட்டதே. ஈஷ்வர் அப்படி இவனை உருவாக்கியிருப்பாரா? அட, நமக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்கிய ஆவணங்கள் அனைத்தும் அவன் கைகளிலிருக்கின்றதே? ஒரே கல்லில் இரண்டு மாங்காயா? ஆஹா, அல்லாஹ் எங்களை கைவிடவில்லை.

அந்த இளைஞனை நோக்கி சலீம் சிறுக சிறுக முன்னேறினான்.


அமைதியாகத் தெரிந்த இந்திய விஞ்ஞான நிறுவனத்தின் வட்டவடிவ கட்டிடத்தை சுற்றி காவலுக்கு இருந்த காவலர்கள் திடீரென்று மயக்கமாகி விழ காவல் இயந்திரங்கள் செயலற்று நின்றன. இருட்டிலிருந்து திடீரென்று உதயமானார்கள் 12 பேர் கொண்ட அந்தக் குழுவினர். அவர்களின் தலைவன் போல தெரிந்தவனின் வாய் மெதுவாக அசைய மற்றவர்களின் காதுகளுக்குள் கண்ணுக்குத் தெரியாமலிருந்த சின்னஞ்சிறிய கருவியில் அவன் குரல் தெளிவாக விழுந்தது.

"பாகிஸ்தான் ஜிந்தாபாத். தோழர்களே இன்றைய நாள் நம் சரித்திரத்தின் ஒரு முக்கிய நாள். இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையே நமக்கு அடிமையாக்கும் சக்திவாய்ந்த கடவுள்-2048 இயந்திரமும் அதுபோன்ற இயந்திரங்களடங்கிய ஒரு படையையே உருவாக்க உதவும் குறிப்புகளும் நமக்கு கிடைக்கப் போகின்றன. திட்டத்தின் ஒவ்வொரு கட்டமும் உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதுதானே?"

11 பேரும் ஒரே குரலில் ஞாபகம் இருக்கின்றது என்று கூற, திருப்தியை முகத்தில் தழுவவிட்ட முகம்மது கான் மறுபடியும் தன் உதடுகளை மெதுவாக அசைத்தான்.

"பெட்டகத்தை திறக்கும் நுழைவுச்சொல்லை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அதனால் நம்மிடமுள்ள சக்திவாய்ந்த இந்த கருவியினால் பெட்டகத்தையே உடைக்க வேண்டும். உள்ளிருக்கும் காகிதங்கள் எதுவும் பாதுகாப்பு ஏற்பாடுகளால் அழிந்துவிடாமல் இந்தக் கருவி பார்த்துக்கொள்ளும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பக்கவாட்டு சுவரை உடைத்துக்கொண்டு உள்ளேயிருக்கும் கடவுள்-2048 ஐ வெளியே கொண்டு வருவதுதான். நான் ஆவணங்களை கொண்டு வருகின்றேன். யார் எதிரில் வந்தாலும் தடுக்க முயன்றாலும் உடனே இந்தத் துப்பாக்கியை இயக்கினால் அவர்கள் பஸ்பமாகிவிடுவார்கள். புறப்படுவோம், பாகிஸ்தான் ஜிந்தாபாத்!"

பக்கவாட்டுச் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த முகம்மது கான் உள்ளே தெரிந்த காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். ஈஷ்வரைப் போலவே இருக்கும் இந்த இளைஞன் யார்? அது யார் மற்றொரு பக்கத்திலிருந்து அந்த இளைஞனை நோக்கி வருவது? அவன் வருவதைப் பார்த்தால் கடவுள்-2048 ஐ திருட வந்தவன் போலிருக்கின்றதே? ஈஷ்வர் இறந்துவிட்டதால் அந்த இளைஞன் நமக்கு பயன்படுவானே. இவன் போகும் வேகத்தைப் பார்த்தால் அவனைக் கொன்றுவிடுவான் போலிருக்கின்றது. உடனே அதை தடுக்க வேண்டும்.

முகம்மது கானின் இடுப்பிலிருந்த சத்தமிடாத லேசர் துப்பாக்கியை நோக்கி கைகள் சென்றன.


இயந்திரத்தை அணுகிய ஈஷ்வர் மெலிதாக தனக்குள் புன்னகைத்துக்கொண்டான். வந்தே மாதரம்! இயந்திரத்தின் மார்பிலிருந்த ஒரு சூட்சும பொத்தானை அவன் அழுத்த மார்புக்கூடு திறந்துகொள்ள அதனுள்ளிருந்த ஒரு விசையை நோக்கி கைகளை கொண்டு சென்றான்.

அதே சமயம்...

திரையில் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த சந்திரபிரகாஷும் அமெரிக்கனும் அதிர்ச்சியடைய, நடக்க இருக்கும் ஆபத்தைக் கண்ட சலீம் வேகமாக ஓடிவர, சலீமைக் குறிவைத்துக்கொண்டிருந்த முகம்மது கான் கைகளை தழைத்துக்கொண்டு ஈஷ்வரை நோக்கி ஓடிவர, எதையும் கவனிக்காத ஈஷ்வர் அந்த விசையை அழுத்த அவனைத்தவிர மற்றவர் அனைவரும் ஒரே நேரத்தில் அலறினார்கள், "நோ......"

இயந்திரத்தின் வீரியமிக்க அணுகுண்டின் வெடிப்பில் 10 கிலோ மீட்டர் சுற்றுப்பரப்பும் இந்திய விஞ்ஞான நிறுவனமும் தூள்தூளாகின.


எத்தனை முறை கூறியும் கேட்காமல் அதிகம் குடித்துவிட்டதில் மயங்கி விழுந்துவிட்ட ஈஷ்வரின் மூச்சை சோதித்துப் பார்த்த சிவா அதிர்ச்சியில் உறைந்துவிட்டான்.

காதல் மனைவி இறந்துவிட்டாள் என்று அவளுடன் உடன் கட்டை ஏறிவிட்டாயா நண்பா?

சிவாவின் தொண்டையிலிருந்து இரவைக் கிழித்துக்கொண்டு புறப்பட்ட அலறலில் அந்த சுற்றுப்புறமே அதிர்ந்தது.