இதயமேந்திக் கேட்கின்றேன்: முன்னோட்டம்
தீரனின் பெற்றோர் நல்லவர்கள் என்பதால் நல்ல பண்புகளை தீரன் பெற்றிருந்தும் கூட கூடாத நண்பர்களாலும் அவர்களின் முகஸ்துதியாலும் மிகவும் மாறிப்போயிருந்தான். பள்ளிக்கூடத்தில் அவனின் அட்டூழியம் தாங்க முடியாமல் அவனை வெறுக்கும் சிறுமிகள்தான் அதிகமே தவிர அவனிடம் சிநேகமாக பேசும் சிறுமிகள் மிக மிக குறைவு.

மதுரையின் அதிகாலைச் சூரியனின் இதமான சூட்டில் எழுந்த திருமங்கலம் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக தன் சோம்பலை முறித்துக்கொண்டு வழக்கமான சுறுசுறுப்பை கையிலெடுத்தது. அதிகாலையிலேயே பால் போடும் பையன்களும் பேப்பர் போடும் பையன்களும் தத்தமது வேலையை உத்தமமாக செய்துகொண்டிருக்க, அதிகாலை பூஜைக்கான ஆலய மணிகள் அடிக்கத்துவங்கிவிட்டது. ஹிந்துக் கோயில்களும், கிறிஸ்தவ ஆலயங்களும், முஸ்லீம் மசூதிகளும் கலந்து 'மதத்தினால் வேறுபடினும் மனத்தினால் நாம் இந்தியரே' என்ற இந்திய ஒற்றுமையை பறைசாற்றிக்கொண்டிருந்தது. வாசலில் தெளித்து கோலமிடும் பண்பாடு இன்னமும் எம்மை விட்டு அகலவில்லை என்று பறையறிவது போல ஒவ்வொரு வீட்டின் முன்புறமும் இந்த அதிகாலையிலேயே எழுந்துவிட்ட வண்ணமயமான கோலங்கள் கண்களை உறுத்தாத அழகில் திருமங்கலத்தையே அழகுற செய்துகொண்டிருந்தது. கிறிஸ்தவ வீட்டினரின் முன்பும் முளைத்திருந்த கோலங்கள், இது மதம்தாண்டிய தமிழர் பண்பாடு என்பதை ஆச்சரியப்படும் கண்களுக்கு கூறிக்கொண்டிருந்தன.
தெருக்கோடி பிள்ளையார் கோயில்கள் அதற்குள் ஜெகஜோதியாக விளக்குகளில் மின்ன, ஒவ்வொன்றின் முன்பும் தோன்றியிருந்த கோலங்களும் அதைக் கலைக்காமல் சுற்றி நின்று அதிகாலைக் குளியலின் ஈரம் வற்றிவிட கூந்தலைச் சுற்றி துண்டை அணிந்தும் மீறி நெற்றியிலும் கன்னங்களிலும் வழியும் குளிர்ந்த நீரின் குளிரினாலோ அல்லது பக்தியினாலோ நடுங்கிக்கொண்டே வேண்டிக்கொண்டிருந்த பெண்டிரின் நெற்றிகளில் ஈரக்கசிவுடன் பளிச்சென்று தெரிந்த குங்குமமும் விபூதியும் என்னே ஹிந்து தர்மம் என்று பார்க்கும் கண்களின் புருவங்களை வியக்க வைத்தன.
கிறிஸ்தவ ஆலயங்களை நாடி தலைகளில் முக்காடிட்டபடி கோலங்களை மிதிக்காமல் நடுவிலிருந்த தெருவில் வேக வேகமாக போய்க்கொண்டிருந்த பெண்களும் அவர்களின் கைகளை பிடித்துக்கொண்டு அதிகாலைத் தூக்கத்தைக் கெடுத்துவிட்ட எரிச்சலில் தெருவிலிருக்கும் கற்களின் மேல் தங்களின் கோபத்தைக் காண்பித்தபடி வந்துகொண்டிருந்த சிறுவர் சிறுமிகளும் அவர்களைக் கண்டு காலில் அடி பட்டுவிடப் போகின்றதே என்று கவலை கொண்டாலும் மனைவி முன் அதைக் காட்டாத பாசக்கார தந்தைகளுமாக ஊர்வலம் போல் போய்க்கொண்டிருந்தனர். அவர்களை ஒட்டியே குசலங்களை விசாரித்துக்கொண்டே கையில் அர்ச்சனைக் கூடைகளுடன் நடந்துகொண்டிருந்த பெண்களும் அவர்களில் இளம் பெண்களை இரசிப்பதற்கென்றே அலாரம் வைத்து எழுந்திருந்து அறைகுறையாக குளித்தாலும் பளிச்சென்று தெரியும் ஆடைகளை அணிந்திருந்த இளவட்டங்களும் ஒன்றாகக்கூடி பேச்சுகளும் சிரிப்புகளுமாக போய்க்கொண்டிருந்தது 'ஆண்டவா இந்த இன்பம் என்றும் இருக்க வை' என்று பார்ப்போரெல்லாம் வேண்டும் படி இருந்தது.
அதிகாலையிலேயே எழுந்து கடைகளை திறந்துவிட்ட நாயர் தேனீர்க் கடைகளும் வாழைப்பழ மண்டிகளும் பூக்காரர்-காரிகளும் தெருவுக்கு இரண்டாக முளைத்திருந்த பால் வழங்கு நிலையங்களும் அதை நெருங்கி நின்றிருந்த நீண்ட வரிசைகளும் இதையெதையும் காணாமல் கருமமே கண்ணாக சைக்கிள்களின் மணிகளை கோயில்களின் இசைக்கு சுருதி சேர்ப்பது போல ஒலித்துக்கொண்டே ஒவ்வொரு வீட்டின் முன்னரும் பால் பாக்கெட்டுகளையும், பேப்பர்களையும் போட்டுக்கொண்டே போய்க்கொண்டிருந்த சிறுவர்களும் வயதானவர்களும் வணிகம் உலகின் நாடி என்பதை பறைசாற்றிக்கொண்டிருந்தனர்.
எத்தனை முறை பார்த்தாலும் இவையெல்லாம் சகித்துவிடாத இன்பம் தரும் ஆச்சரியத்தை வியந்துகொண்டே இந்த வயதிலும் சுற்றுச்சூழலையும் இயற்கையையும் இரசிக்கும் தன்மை பெற்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் ரோஸ்லின் தன் தந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு தெய்வப் புன்னகையுடன் நடந்துகொண்டிருந்தாள். அவள் பிறந்தவுடனே அம்மாவை இழந்துவிட்டாள். சுகப்பிரசவம் ஆனால்தான் ஒத்துக்கொள்வேன் என்று விடாப்பிடியாக நின்ற ரோஸ்மேரிப் பாட்டியினால் பனிக்குடம் உடைந்துவிட்டது அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை எடுக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அறிவுறித்திய மருத்துவரின் மன்றாடல்கள் கேட்கப்படவில்லை. இயேசு இருக்கிறார் என் மருமகளை காப்பாற்றி சுகப்பிரசவம் பெற வைப்பார் என்று மூடநம்பிக்கையில் மூழ்கியிருந்த பாட்டியினால் ஆறுமணி நேரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டிய கட்டத்தில் உச்சகட்ட வலிப்பிரசவமாக ரோஸ்லினை ஈன்றெடுத்த தாயார் மரியம்மை அப்போதே உயிர்துறந்தாள். மருமகளைக் கொன்றுவிட்டோமே என்ற அதிர்ச்சியில் உறைந்த பாட்டி வடிகாலுக்கு வேறு வழியின்றி இயேசுவின் மேல் குற்றத்தைச் சுமத்தி ஆலயத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டாள்.
இத்தனை நடந்தபிறகும் அம்மாவின் மேல் அளவுகடந்த பாசம் வைத்திருந்த தந்தையார் டான்போஸ்கோ அவளை ஒரு வார்த்தையும் கேட்காமல் தனக்குப் பிறந்த பெண்பிள்ளையின் மேல் முழுக் கவனத்தையும் திருப்பியிருந்தார். மரியம்மையின் மேல் கொண்ட மாறாத காதலால் மறு திருமணத்தை நினைக்காத டான்போஸ்கோ அன்றுமுதல் தாய்க்கு தாயாக நின்று அவளை வளர்த்து வந்திருக்கின்றார். அவ்வளவாக பணக்காரரில்லாத நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்த அவர் பல தொழிற்சாலைகளில் பகுதி நேர எலக்ட்ரீஷியனாக வேலை பார்ப்பதோடு மட்டுமின்றி சொந்தமாக எலக்ட்ரிகல் ரிப்பேர் செய்யும் ஒரு சிறு கடையையும் வைத்திருக்கின்றார். அம்மா இல்லாத குறையை பாட்டிதான் ரோஸ்லினுக்கு தீர்த்து வைத்துக்கொண்டிருந்தாள்.
ஒவ்வொரு முறை ஆலயத்திற்கு போகும்போதும் அங்கு வரும் சிறுவர் சிறுமிகள் தத்தமது அம்மைகளுடைய கைகளை பிடித்துக்கொண்டே குதித்தோடுவது கண்டு சில நேரங்களில் இயேசுவை ரோஸ்லின் கேள்வி கேட்டிருக்கின்றாள். இருப்பினும் அவரின் மேல்கொண்ட மாறாத பக்தியினால் அந்தக் கேள்விக்கு விடையை அவளே வழங்கிக்கொள்வாள். இந்தச் சிறுவயதில் கேள்வியின் இராணி என்ற பெயரெடுத்த அவளின் கேள்விகளுக்கு உயிருள்ள பள்ளிக்கூட வாத்தியார்களே மிரளுவதுண்டு பாவம் சிலையான இயேசு என்ன செய்வார்? இருப்பினும் ரோஸ்லினுக்கு சந்தோஷத்திற்கு குறையிருந்ததில்லை. இயற்கைதான் அவளுடைய அன்னை. இயற்கைத் தாயின் மடியில் இமை மூடி படுத்திருப்பது ரோஸ்லினுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் குளத்திற்கும் வயல் வெளிகளுக்கும் பூஞ்சோலைகளுக்கும் இரயில் நிலையத்திற்கும் ஹிந்துக் கோயில்களுக்கும் முஸ்லிம் மசூதிகளுக்கும் அப்பாவின் கடைக்கும் ஓடிவிடும் அவள் அனைத்திலும் அழகை காண்பவள். இந்த அழகின் சிரிப்புதான் அவளின் தெய்வீக சிரிப்புக்கு காரணமாக இருந்தது.
ரோஸ்லினுக்கு இருந்த ஒரு கெட்ட பழக்கம் மிகப்பெரிய நண்பிகள் கூட்டம். அவள் படிக்கும் பள்ளி இரு பாலரும் படிக்கும் பள்ளியென்றாலும் சிறுவர்களுடன் அதிகம் பழகமாட்டாள். நண்பிகள் என்றால் மிகவும் பிடிக்கும் அவளுக்கு. ஆனாலும் அவளிடமிருந்த வித்தியாசமான பழக்கம் இயற்கையை இரசிக்கக் கிளம்பும்போது ஒரு தோழியைக்கூட கூப்பிட்டுக்கொண்டு போக மாட்டாள். நண்பிகளின் சூழலை இரசிக்கும் அதே வேளையில் தனிமையையும் மிகவும் இரசிக்கும் வித்தியாசமான பிறவி அவள். அவளைப் பொறுத்தவரையில் இன்னமும் சிறந்த நட்பை அவள் காணவில்லை. அடிக்கடி படிக்கும் சிறுவர் கதைகளிலும் பாட்டி சொன்ன சில அற்புத கதைகளிலும் மட்டுமே அதைக் கண்டிருக்கின்றாள். ஒருவேளை அப்படி ஒரு நட்பு வந்தால் எதுவுமே வேண்டாம் என்று கூறிவிடுவாள்.
வழக்கம் போல வேடிக்கை பார்த்துக்கொண்டே ஆலயத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த ரோஸ்லின் தன்னுடைய காலுக்கருகில் ஏதோ வந்து மோதுவதைப் பார்த்து திரும்பினாள்.
"ஏ புள்ள, அந்த பந்தை இப்படி அடிச்சுவிடுறியா?"
"ஏல, எத்தன தடவ சொல்லிருக்கேன் கோயிலுக்கு போறப்ப உன்னோட வெளையாட்டு பந்த எடுத்து வராதன்னு? காதுல போட்டுக்கவே மாட்டேங்கிற?"
"சாமி என்ன பந்து வெளையாண்டா கோவுச்சுக்குமா? உனக்கு பிடிக்குதுன்னு கோயிலுக்கு போற, செவனேன்னு இருந்த என்னிய கூட்டிவந்துட்டல்ல, அப்புறம் எனக்கு பிடிச்ச பந்த எடுத்து வாராதன்னா எப்பிடீ?"
"வாய்க்கொழுப்புடா மக்கா. இரு வீட்டுக்கு வந்து பார்த்துக்கறேன். ஏ புள்ள அந்த பந்த இப்படி அடிச்சு விடு தாயீ."
பேசிக்கொண்டிருந்த சிறுவனையும் அவனுடைய அம்மாவையும் பார்த்த ரோஸ்லினுக்கு அவன் தன்னுடன் படிக்கும் தீரன் என்பது தெரிந்தவுடன் கோபம் தான் வந்தது. இருந்தாலும் அவனுடைய அம்மாவின் முன் அதைக் காட்ட வேண்டாம் என்று அந்தக் கோபத்தை பந்தின் மேல் காட்டினாள். நான் என்ன குற்றம் செய்தேன் என்று கேட்டதுபோல பொங்கியெழுந்த பந்து தீரனையும் அவன் அம்மா காமாட்சியையும் மீறி அருகிலிருந்த பள்ளத்தில் சென்று விழுந்தது.
"ஏ.. அடிச்சு விடுன்னா இப்படியா அடிக்கிறது? பரவால்ல பெம்பள புள்ளங்கைல்லாம் ரொம்பத்தான் தேறிட்டீங்க. உன்கிட்ட கேட்டேன் பாரு என் புத்தியச் சொல்லணும்."
திட்டிக்கொண்டே தனது பந்தை எடுத்துவர ஓடிய தீரனையும் எதுவும் புரியாமல் அப்படியே நின்றுவிட்ட அவனுடைய அம்மா காமாட்சியையும் பார்த்த ரோஸ்லினுக்கு கோபம் கொஞ்சம் தீர்ந்த மாதிரி இருக்கவே. முகத்தைத் திருப்பிக்கொண்டு அப்பாவுடன் வேகமாக நடக்க ஆரம்பித்துவிட்டாள்.
தீரன் பள்ளிக்கூடத்திலேயே மிகவும் வால் பையன். அவனால் அவதிப்படாத வாத்தியார்களே பள்ளியில் இல்லை. ஹெட்மாஸ்டர் கூட இதற்கு விதிவிலக்கல்ல. அவனுடைய அப்பா உலகநாதன் பெரிய இடம் என்பதால் பள்ளியில் அவனைக் கேள்வி கேட்க ஆளில்லை. பிறக்கும்போதே பணக்காரனாக பிறந்துவிட்ட தீரனிடம் அதற்கான திமிர் நிறையவே இருந்தது. அவனைச் சுற்றி நட்புக்காகவோ அல்லது காசுக்காகவோ சேர்ந்த கூட்டம் ஒன்று எப்போதும் சுற்றிக்கொண்டிருக்கும். இந்த வயதிலேயே கூட்டம் சேர்க்க ஆரம்பித்துவிட்ட அவனைப் பற்றிதான் பள்ளி முழுக்க பேச்சு. காலையில் அப்பாவுடன் புல்லட் வண்டியில் பள்ளிக்கூடமே தடதடக்க அவன் வந்து இறங்குவதிலிருந்து சாயங்காலம் வீட்டின் காரோட்டி கொண்டு வரும் அம்பாசிடர் காரில் புழுதி பறக்க விரைவது வரை அவனுடைய பணக்காரத்தனம் எங்கெங்கும் வியாபித்திருக்கும். அவனுடைய அப்பா கோவையில் இரண்டு நூற்பாலைகளையும் மதுரையின் புகழ்பெற்ற அம்மன் இரும்பு தொழிற்சாலைகளையும் கட்டி மேய்ப்பவர். தீரன்தான் இப்படி எனில் அவனுடைய அப்பா அம்மா மிகவும் விசித்திரமானவர்கள். அந்த ஊரிலேயே பெரிய வீட்டைக் கட்டியிருந்தாலும் பார்க்க மிகவும் எளிமையுடனும் எல்லோரிடமும் சரிசமமாகவும் அன்புடனும் பழகுவார்கள். அவர்களின் முகத்திற்காகவே தீரனைப் பொறுத்துக்கொண்டவர் பலர். அவனுடைய அப்பாவிற்கு இரண்டு கார்கள் இருந்தாலும் தொழிற்சாலைக்கு போகும்போதெல்லாம் புல்லட் வண்டியில் தானாகவே ஓட்டிக்கொண்டு போவதையும் நாள்தவறாமல் தன்னுடைய ஒரே மகனை போகும் வழியில் பள்ளிக்கூடத்தில் இறக்கிவிட்டுப் போவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
தீரனின் பெற்றோர் நல்லவர்கள் என்பதால் நல்ல பண்புகளை தீரன் பெற்றிருந்தும் கூட கூடாத நண்பர்களாலும் அவர்களின் முகஸ்துதியாலும் மிகவும் மாறிப்போயிருந்தான். பள்ளிக்கூடத்தில் அவனின் அட்டூழியம் தாங்க முடியாமல் அவனை வெறுக்கும் சிறுமிகள்தான் அதிகமே தவிர அவனிடம் சிநேகமாக பேசும் சிறுமிகள் மிக மிக குறைவு. அப்படியிருக்க ரோஸ்லின் அவனைக் கண்டாலே வெறுப்பை உமிழ்வது ஆச்சரியப்பட வைப்பதில்லைதானே?
தீரன் பந்தை எடுத்துக்கொண்டு அதிலிருந்த அழுக்கையெல்லாம் சட்டையிலேயே துடைத்துக்கொண்டு வருவதற்குள் ரோஸ்லின் அப்பாவுடன் ஆலயத்துள் மறைந்துவிட்டிருந்தாள். அம்மாவை பார்த்த தீரன் அவள் இன்னமும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து வியந்தான்.
"இன்னுமா போகல நீ? எப்பவோ போயிருப்பனு நினைச்சேன்."
"ஏல, சட்டையெல்லாம் அழுக்காக்கிட்டியேடா. இப்படியே கோயிலுக்கு வந்தா ஆத்தா கண்ணை குத்திடும். ஓடிப்போயி வேற நல்ல சொக்காய் போட்டுக்கிட்டு வாலே..."
"அங்... அஸ்க்கு புஸ்க்கு, எனக்கு வேற ஜோலியில்லனு நினைச்சியா? நா போயி விளையாடப் போறேன். நீ போ கோயிலுக்கு. ஆத்தாகிட்ட நான் இந்த வருசம் பாஸாயிடனும்னு வேண்டிக்க என்ன?"
"அட எடுபட்ட பயலே. வீட்டுக்கு வந்து உன்னிய கவனிச்சுக்கிறேன். ஏற்கனவே நேரமாச்சு. சரி விரசா போயி வெளையாடிட்டு பலகாரம் சாப்பிட நேரத்துக்கு வந்துடுலே, அப்புறம் உன்ற ஐயன் உனக்காக காத்திருப்பாக. நான் கோயிலுக்கு போயிட்டு அரை நாழியில திரும்பி வந்துடுதேன் சரியா?"
"சரித்தா..." அதற்குள் எங்கோ ஓடிவிட்ட தீரனின் குரல் மட்டும் எட்டியது காமாட்சிக்கு.
வழக்கம் போல நேரம் கழித்து வீட்டுக்கு வந்த மகனை காமாட்சி கோபத்துடன் பார்த்தாலும் அவனுடைய அப்பாவின் முன்னால் காட்டுவதற்கு பயந்துகொண்டு கனிவாக கேட்டாள்.
"ஏல.... இதுதானா நீ நேரத்துல வர்ற அழகு? உன்ற ஐயன் காத்துக்கிடக்கிறாருல்ல?"
"காமாட்சி, அவனை வையாத புள்ள. குழந்த புள்ளக அப்படித்தான் நேரம் போவது தெரியாம வெளயாடிக்கிட்டிருக்கும்? நீ நானு இருந்த காலத்துல எவ்வளவு விளையாட்டு விளையாடிருப்போம்?"
இது என்னயிது வெட்கம் கெட்டத்தனமாக இதையெல்லாம் புள்ள முன்னாடி சொல்லிக்கிட்டிருக்கிறாரே வெவரம் கெட்ட மனுஷன். காமாட்சியின் கன்ன ஓரங்கள் சிவந்திருந்தது. அதைக் கவனித்துவிட்ட உலகநாதன் சட்டென்று உணர்வு வந்தவராய் மெளனமாகிவிட்டார்.
"சரி சரி. பலகாரம் சாப்பிட வாலே..." காமாட்சியின் திசை திருப்பலை புரிந்து மீசையைத் தடவிக்கொண்டார் உலகநாதன்.
அம்மாவின் கையாலான மல்லிகைப்பூ இட்டிலியும் கொத்துமல்லி சட்டினியும் ஆடிக்களைத்து வந்திருந்த தீரனுக்கு அமிழ்தம் போல இருந்தது. விரைவாக துண்டுகளை கிள்ளி சாப்பிட ஆரம்பித்தான்.
"ஏல.... எத்தன தடவ சொல்லியிருக்கேன் கைகழுவாம சாப்பிடாதடான்னு?"
"காமாட்சி, சின்னப் புள்ளக அப்படித்தான். நீ சாப்பிட வாலேன்னுதான சொன்ன? கைகழுவிட்டு வாலேன்னா சொன்ன?"
அது சரி, வர வர புள்ளப் பாசத்துக்கு ஒரு அளவே இல்லாம ஆடிட்டிருக்காரு. ஆத்தா நீதாம்மா அவரோட மனசு நோகாம தீரன பாத்துக்கணும். வேண்டுதலுடன் கையோடு சென்று ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு வந்து தீரனின் ஏற்கனவே இட்டிலி படிந்த கைகளை சுத்தமாக கழுவிவிட்டாள்.
"இதப் பாருலே... சாப்பிடும்போது எப்பவுமே கைகழுவிட்டுத்தான் சாப்பிடனும் சரியா? அதுவும் வெளையாட்டுக்குப் போன இடத்துல எவ்வளவு புழுதி இருக்கும்? அத்தனையும் வயித்துக்குள்ள போச்சுன்னா அப்புறம் ஐயோ அம்மான்னு ஒரு நா கத்தத்தான் போற..."
"சரிம்மா...இனிமே அப்புடியே செஞ்சுடறேன்."
"பாத்தியாடீ, தீரன்டி. எம் மவன். தப்பா போகமாட்டான்."
மீசையை முறுக்கிவிட்டுக்கொள்ளும் உலகநாதனின் பாசத்தைப் பார்த்து எப்போதும் போல மலைத்துப் போனாள் காமாட்சி. ஆனாலும் இந்தப் பய இவரு முன்னாடி காட்டுற நடிப்புல சிவாஜி தோத்துப்புடுவாரு.
சாப்பிட்டபின் குளித்து உடையணிந்து வர தீரன் போய்விட. காமாட்சியிடம் அன்றைய வரவு செலவு கணக்குகளை விசாரித்து பணம் கொடுத்தப்பின் திண்ணையில் சென்று அமர்ந்துவிட்டார் உலகநாதன்.
"ஐயா, நானு ரெடிங்க. போலாமா?"
"எங்கடா ரெடி? பெரிய ரெடியாமில்ல துரைக்கு? இப்பிடியே போனா வாத்தியாரு அடிக்காம கொஞ்சுவாரா? தலைமுடி என்னா இப்படி கலைஞ்சுக் கிடக்கு வாரதுக்கு இல்லியோ?"
கேட்டுக்கொண்டே சீப்பை எடுத்து நேர் வாக்கு எடுத்து வாரிவிட்டபின் பூஜை மாடத்திலிருந்த விபூதியை எடுத்து நெற்றியில் அழகாக வைத்துவிட்டு வலது கையை அவனுடைய புருவத்திற்கு மேல் படுக்கையாக வைத்து ஊதிய காமாட்சியை அன்பு பொங்கப் பார்த்துக்கொண்டிருந்தார் உலகநாதன். மகனோட ஒவ்வொரு விசயத்துலயும் எத்தினி கவனமா இருக்கிறா. பாசம்னா எனக்கு மட்டும்னு சொல்லிட முடியுமா? இடிச்சுக் காட்டுறதுக்கு மட்டும்தான் நானு போல.
மகனை அழைத்துக்கொண்டு புல்லட்டை எடுத்து இயக்கத்திற்கு கொண்டு வந்து படபடவென்று அதிரும் சத்தத்துடன் கிளம்பிவிட அது கண்ணை விட்டு மறையும் வரை கையாட்டிக்கொண்டே இருந்தாள் காமாட்சி. பள்ளிக்கூடத்திற்கு வழக்கமாக செல்லும் வழியில் அப்பாவின் சட்டையைப் பிடித்தபடி பின்னால் உட்கார்ந்து வந்துகொண்டிருந்த தீரனின் நினைப்பு முழுக்க காலையில் பந்தை அப்படி அடித்த ரோஸ்லினின் மேலேயே இருந்தது. ஆத்தாடீ, என்னாம்மா அடிச்சுது அந்தப் புள்ள. எப்பவுமே நம்மள பாத்தா உம்மனா மூஞ்சிமாதிரி இருக்கும். பந்து விளையாட்டு தெரிஞ்சுருக்குமோ? ஆங்.. அது எப்படி? அது ஆம்புள புள்ளக வெளையாடுற ஆட்டம்ல? பொம்பள புள்ள வெளையாட முடியுமா? ஆனா அடிச்ச அடி அப்படி இருந்துச்சு இல்ல?
யோசனையில் மூழ்கியபடி வந்த தீரன் தனக்கு முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளைப் பார்த்தவுடன் சட்டென்று கத்தினான்.
"ஐயா... இங்கனயே இறக்கிவிட்டுடுங்க."
"ஏ மக்கா? எப்பவும் ஸ்கூலுக்கு விடுரதுதானே வழக்கம்? இப்ப என்ன இங்கனயே இறங்கிவிடுதியங்கிற?"
"இல்ல ஐயா, இன்னிக்கு ஸ்கூலுல வாத்தியாரம்மா ஒரு கணக்கு கேட்டிருந்தாங்க. நான் இன்னும் செஞ்சி முடிக்கல, இங்கன போற என்னோட நண்பனுங்க முடிச்சிருப்பாய்ங்க. அவனுங்ககிட்ட பேசிட்டே அப்பிடியே நடந்து போற நேரத்துல கணக்கை முடிச்சுடுவேனில்ல?"
"அட மக்கா, பரவாயில்லயே? நீ ஒழுங்கா படிக்கிறதில்லன்னு உன்ற ஆத்தா எங்கிட்ட குற பட்டுக்குறா. நீ இப்படியெல்லாம் படிக்கிற. சரி மக்கா, நல்லா படிச்சு ஐயனுக்கு பேர் வாங்கித் தரணும் என்ன?"
"அதெல்லாம் நீங்க கவலயே படாதீங்க ஐயா. நானு ஒழுங்கா படிச்சி பெரிய கலெக்ட்டரா வருவேனுல்ல?"
"அப்படி சொல்லுடா என் சிங்கக்குட்டி. சரி சரி. இங்கனயே இறங்கிக்க. நானு பேக்டரிக்கு போயிட்டு வரேன்."
"சரிங்க ஐயா..."
தந்தையின் புல்லட் வண்டியை விட்டு முதல்முதலாக ஸ்கூலுக்கு வெளியிலேயே இறங்கிக்கொண்டது புது அனுபவமாக இருந்தது தீரனுக்கு. இருப்பினும் அவன் இறங்கிய காரணமே வேறு. அவனுக்கு கொஞ்சம் முன்னாடி விரைவாக நடந்து கொண்டிருந்தது ரோஸ்லின். அப்பாவின் புல்லட் சத்தம் அடங்கியவுடனே ஓட்டம் எடுத்து மூச்சிரைக்க அவளுக்கு பக்கதில் சென்றுவிட்டு அவளுடைய வேகத்திற்கு ஏற்ப நடக்கத் தொடங்கினான் தீரன்.
"லே... ரோஸ்லின். இங்க பாரு புள்ள... அட உன்னியத்தான் புள்ள"
"டேய்... எதுக்குடா எம்பேர கூவுற? ஒழுங்கா ஸ்கூலு போவமாட்ட?"
"அதுக்கில்ல புள்ள, உங்கிட்ட ஒரு சந்தேகம் கேட்கனும்."
"பாடத்துலயா? உனக்குதான் இத்தினி ப்ரென்ட்ஸ் இருக்காங்க இல்ல? அவங்ககிட்ட போயி கேட்கறதுதானே?"
பாடத்தில் சந்தேகம் என்றால் அது யாராக இருந்தாலும் உடனே தயங்காமல் பதில் சொல்ல தயாராகிவிடுகிற வழக்கத்தால் சிறிது மெள்ளமாக நடையை மாற்றினாள் ரோஸ்லின்.
"பாடத்துல இருந்தா நண்பங்ககிட்ட கேட்டுக்குவேன் புள்ள. உங்கிட்டதான் ஒரு சந்தேகம் கேட்கனும். ஆமா காலையில பந்த அப்பிடி அடிச்சியே, உனக்கு பந்து வெளையாடத் தெரியுமா புள்ள?"
"அதெல்லா ஒரு மன்னாங்கட்டியும் இல்ல. எனக்கு பந்து வெளையாடத் தெரியாது. உம் மேல கோவம் அடிச்சுவிட்டேன்."
"எம்மேல கோவமா? ஏ ஆத்தா என்ன சொல்லுற? நானென்ன பன்னேன் உன்ன?"
"நீ என்னடா பன்னல? என்னிய பன்னாத்தான் கோவம் வரனுமா? ஸ்கூலுல நிம்மதியா யாரயாவது படிக்க விடுறியா? உங்கையன் பெரிய ஆளுன்னா என்ன வேணும்னாலும் செய்வியா?"
ரோஸ்லினின் பக்கத்திலிருந்த பெண் ஒருத்தி அவளுடைய விலாவைக் குத்திவிட்டு கிசுகிசுத்தாள்.
"ஏ புள்ள, சும்மா வரமாட்ட? அவ ரொம்ப பொல்லாதவன். அவங்கிட்ட எங்களயும் மாட்டிவிடலாம்னு பாக்குறியா?"
ரோஸ்லின் காதில் வாங்கிக்கொள்ளாமல் ரொம்ப நாள் பேச வேண்டியதை பேசிவிட்டது போல இருந்தாள். தீரனுக்கு இது மிகவும் புதிது, யாரும் அதுவும் எந்த பெண் பிள்ளையம் அவனை இப்படி ஒரு கேள்வி கேட்டதில்லை. அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கண்களில் ஆச்சரியமாக ஒரு துளி கோர்த்துவிட, காரணம் புரியாத அவன் அவளுடைய முகத்துக்கு அதைக் காட்டாமல் ஓட்டமாக பள்ளிக்கூடத்தை நோக்கி ஓடினாலும் அவனுடைய முகமாற்றத்தை கவனித்துவிட்ட ரோஸ்லினுக்கு என்னவோ போலிருந்தது.
ஐயையோ, ரொம்ப திட்டிப்புட்டமோ? அவம் எதுவும் எதுத்து பேசவேயில்லயே? மூஞ்சியெல்லாம் மாறிப்போச்சு?
"ஏ புள்ள, அவன் பிரெண்டுகள கூட்டியாறத்தான் ஓடுறாம்போல, வாங்கடி நாம வெரசா போயி சேந்திடலாம்."
தோழியின் கருத்து தவறென்று தன் நெஞ்சு கூறினாலும் மறு பேச்சு பேசாமல் நடையை விரைவாக்கினாள் ரோஸ்லின்.
அன்றைய பள்ளி ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் முடிந்துவிட. தீரனின் நண்பர்கள் உம்மனாம் மூஞ்சியாக இருந்த தீரனை ஆச்சரியத்துடன் பார்த்தனர். அவர்கள் எவ்வளவோ செய்தும் அவனை உற்சாகப்படுத்த முடியாமல் சரி அவன் போக்கு அப்படி என்று விட்டுவிட்டனர். ரோஸ்லினுக்கு மட்டும் பாடத்தில் கவனம் போகவே மாட்டேன் என்றது. அவனை சந்திக்கலாமா என்று நினைத்த நேரத்திலெல்லாம் தோழிகள் சூழ்ந்துவிட வேறு வழியின்றி இருந்தாள். ஆனால் அவளுடைய முக வாட்டத்தைக் கவனித்துவிட்ட தோழிகள் என்னவென்று ஆயிரம் கேள்விகளால் துளைக்க ஒன்றும் பேசாமலேயே இருந்துவிட்டாள் ரோஸ்லின்.
பள்ளிக்கூடம் முடிந்ததை அறிவிக்கும் பெல் அடிக்க தாமதமாக வெளியில் வந்த ரோஸ்லின் தீரன் தன்னுடைய கார் ஓட்டியிடம் ஏதோ கூறிவிட்டு தனியே நடக்க ஆரம்பித்துவிட்டதைப் பார்த்து மருகினாள். ஒருவேள அவம் மனச ரொம்ப நோகடிச்சிட்டோமோ? என்னிக்கும் கார் இல்லாம நடக்க மாட்டானே?
அவனிடம் சென்று பேசலாம் என்று அவள் நினைத்த நேரத்தில் காத்திருந்த தோழிகள் சூழ்ந்துவிட்டனர். இவளுக வேற நேரங்கெட்ட நேரம்தான் அன்ப பொழிவாளுங்க. இன்னிக்கு ஒரு நாளு நானில்லாம போனாத்தான் என்ன? மனசு துடித்தாலும் மெளனமாக அவர்களுடன் நடை போட்டாள் ரோஸ்லின்.
வழியில் இவர்கள் வழக்கமாக விளையாடும் குளக்கரை வந்துவிட ரோஸ்லினால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தோழிகள் வழக்கம்போல இவளிடம் புத்தகப் பைகளை கொடுத்துவிட்டு தண்ணீரில் இறங்கி விளையாட ஆரம்பித்தனர். ரோஸ்லினுக்கு நீந்தத் தெரியாது என்பதால் புத்தகப் பைகளுக்கு அவள்தான் காவல்.
கொஞ்ச நேரம் எப்படியும் தோழிகள் மேலே வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் குளக்கரையைச் சுற்றி போய்க்கொண்டிருந்த தீரனிடம் பேசிவிடலாம் ஒரு மன்னிப்பாவது கேட்டுவிடலாம் என்ற முடிவுடன் எழுந்து நடக்க ஆரம்பித்தாள் ரோஸ்லின்.
தீரன் மெளனமாக நடந்துகொண்டிருக்க அவனைப் பார்த்தபடியே நடந்துகொண்டிருந்த ரோஸ்லின் பின்னால் யாரோ தன் பெயரை கூவியழைப்பதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த அதே வேளையில் ஒரு வெள்ளை நிற ஆம்புலன்ஸ் வண்டி சைரன்களுடன் வெகு வேகமாக வருவதைக் கண்டு ரோஸ்லின் அதிர்ச்சியில் விக்கித்து செய்வதறியாமல் நின்றுவிட்டாள்.
பின்னால் கூச்சலைக் கேட்ட தீரன் திரும்பிப் பார்க்க ரோஸ்லின் அதிர்ந்து போய் சிலையென நிற்பதும் அவளை நோக்கி அதிவேகமாக ஒரு வேன் வருவதையும் பார்த்து புயலென பாய்ந்தான். ரோஸ்லினின் மேல் ஆம்புலன்ஸ் மோதுவதற்குள் அவளை அடைந்துவிட்ட தீரன் சட்டென்று அவளின் இடுப்போடு கட்டிப்பிடித்துத் தூக்கிக்கொண்டே வலது பக்கம் குளக்கரை சுவர் இருந்ததால் இடது பக்கமிருந்த முள் பரப்பின் பக்கம் உருண்டுவிட்டான். உடலெல்லாம் முட்கள் குத்தியதின் வலியை உடல் உணர்ந்தாலும் கைகளை விடாமல் ரோஸ்லினை இறுக்கப் பிடித்திருந்தான். ரோஸ்லின் எப்போதோ நினைவிழந்துவிட்டிருந்தாள். ஆம்புலன்ஸ் விரைந்து கடந்து போய்விட. அதைச் சபித்துக்கொண்டே தன் நினைவையும் இழந்தான் தீரன்.
"தீரா... தீரா... கண்ணை முழிச்சுப் பாருடா மக்கா... என்னிய தவிக்க விட்டுடாதடா... ஆத்தா கருமாரி உனக்கு பொங்க வச்சு ஆடு வெட்டுறேன் எம் மவன காப்பாத்தும்மா..."
யாரோ தன்னை உசுப்புவதை மெதுவாக உணர ஆரம்பித்தான் தீரன்.
"லே காமாட்சி. ஊரைக்கூட்டாத புள்ள. இது ஆஸ்பத்திரி" கண்களில் அழுகை நிரம்பியிருந்தாலும் பொம்பிளையான தன் மனைவியைப் போல் அழுது அரற்ற வழிதெரியாத உலகநாதன் தன் படபடப்பை எதிலெதிலோ காட்டிக்கொண்டிருந்தார். டாக்டர் அந்த நேரம் வந்துவிட, தீரனுக்கும் மெள்ள உணர்வு வந்தது. கண்களைத் திறந்ததும் அவன் கண்டது தன் தந்தையின் வாடிப்போன முகத்தைத்தான். அம்மா அவனுக்கு இடது புறம் அரற்றிக்கொண்டிருந்தாள்.
"ஐயா... அந்தப் புள்ளக்கி என்ன ஆச்சு?"
தன் மவன் எழுந்தவுடன் எதைப் பற்றியும் கேட்காமல் தான் காப்பாற்றிய பெண்ணைப் பற்றி கேட்பதைப் பார்த்த உலகநாதன் ஆச்சரியத்தில் அழுகையை மறந்தார்.
"அந்தப் புள்ளக்கி ஒன்னும் ஆகலடா மக்கா. உனக்குத்தான் உடம்புல முள்ளு நிறைய குத்தி இரத்தம் நிறைய போயிடுச்சின்னு டாக்டர் எங்கள மிரட்டிட்டார். உடம்பு வலிக்குதா மக்கா?" அழுகை தழுதழுத்த குரலில் அவர் கேட்பதற்கும் அரற்றலிலிருந்து விடுபட்ட காமாட்சி மகனின்மேல் தாவி அவனை வாரிக் கட்டியனைத்து முகமெங்கும் முப்பது முத்தங்கள் வைப்பதற்கும் சரியாக இருந்தது.
"லெ மக்கா... கொஞ்ச நேரத்துல எங்கள உசுரோட கொன்னுட்டியேடா... உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நாங்க எங்கடா போவோம்?"
அம்மாவின் அரவனைப்பிலும் அப்பாவின் ஆறுதலான தகவலிலும் ரோஸ்லினை மறந்த தீரன் தன் கன்னங்களில் சூடான திரவம் வழிவதைப் பார்த்து அம்மாவின் அழுகையா அவள் கொடுத்த முத்தத்தின் எச்சமா என்று அறிய வழியின்றி அதைத் துடைக்க தன் கண்களிலிருந்து நீரை கொண்டுவந்தான்.
"கவலப்படாத ஆத்தா. அதான் நானு முழிச்சிட்டேனுல்ல?"
உலகநாதனும் பாய்ந்து தன் பங்குக்கு தீரனை வாரிக் கட்டிக்கொள்ள, முள்குத்திய பின்புறம் லேசாக வலித்ததில் ஐயோ என்றான் தீரன்.
"வலிக்குதா மக்கா. மன்னிச்சுக்கடா... தெரியாம இறுக்கிட்டேன். படுத்துக்கோ. பாவம் புள்ள முதுகெல்லாம் புண்ணாயிடுச்சே..."
மெதுவாக மெத்தென்று இருந்த கட்டிலில் படுத்த தீரனின் மனதில் வலியை மீறி சில கேள்விகள் எழுந்தன.
"ஐயா, எத்தினி நேரம் ஆச்சு இங்க வந்து?"
"ரெண்டு நாளா இருக்கேடா மக்கா. உனக்கு வலி தெரியக்கூடாதுன்னு டாக்டர் ஐயா ஊசி போட்டு வச்சிருந்தாங்க. ஒன்னும் கவலப்படாத. நானிருக்கேனுல்ல? எல்லாம் சரியாயிடும். ஒன்னும் மனசுல போட்டுக் குழப்பிக்காம தூங்குடா ராசா. தூங்கு. நாளக்கி உன்ன வீட்டுக்கு கொண்டு போயிடலாம்னு டாக்டர் ஐயா சொல்லிட்டாரு."
காமாட்சி அழுகையினூடே தீரனின் தலையைக் கோதிவிட அவளின் கைசுகத்திற்கு அடிமையான தீரன் மெதுவாக தூங்க ஆரம்பித்தான்.
ஒரு நாள் மருத்துவமனையிலும் இரண்டு வாரம் வீட்டிலுமாக ஓய்வெடுத்துக்கொண்டிருந்த தீரன் தன்னுடைய காயமெல்லாம் நன்றானவுடன் எழுந்து மறுபடியும் விளையாட ஆரம்பித்தான். இன்னமும் ரோஸ்லினை பார்க்க முடியாதது சிறிது வருத்தமாக இருந்தது அவனுக்கு. அந்த புள்ள பாவம் எப்படி இருக்கோ?
வழக்கமாக கோயிலுக்கு போய்விட்ட காமாட்சி இவனை எழுப்பாவிட்டாலும் பழக்கத்தால் எழுந்துவிட்ட தீரன் வெளியில் சென்று அதிகாலையில் நடக்க ஆரம்பித்தான். என்னவோ தனியா நடப்பது அவனுக்கு புதிதாகவும் மிகவும் பிடித்தும் இருந்தது. அதிகாலைக் காற்று மனதிற்கும் உடலிற்கும் இதமாக இருந்தது. நீண்ட நேரத்திற்குப் பிறகுதான் தான் வெகுதூரம் வந்துவிட்டதே அவனுக்குப் புரிந்தது. எங்கிருக்கின்றான் என்று சுற்றும் முற்றம் பார்க்க குளக்கரை வந்துவிட்டது தெரிந்தது. குளத்திற்குள் இறங்கி கடைசிப் படிக்கட்டில் நின்று அதிகாலை குளிர்ந்த நீரில் காலை வைத்து அதன் குளிர் உடலுக்குள் பாய்வதை அணுஅணுவாக இரசித்த தீரன் கொஞ்சம் தூரத்தில் தெரிந்த படிக்கட்டில் யாரோ உட்கார்ந்து இருப்பதை பார்த்து உன்னிப்பாக பார்க்க அது ரோஸ்லின் என்று தெரிந்தது. மனதில் ஒரு தீபாவளி வெடிக்க சட்டென்று அவளை நோக்கி ஓடினான் தீரன். யாரோ தன்னை நோக்கி ஓடிவருவதை கேட்டு தனிமையிலிருந்து விடுபட்டு பீதியுடன் திரும்பிய ரோஸ்லின் தீரனைக் கண்டு அப்படியே உறைந்துவிட்டாள்.
"ஏ புள்ள, இன்னிக்கு சர்ச்சுக்கு போகலியா? எப்பவும் தவற மாட்டியே?"
"இல்லடா, ஒரு வாரமா சர்ச்சுக்கு போகப் பிடிக்காம இங்கனதான் வந்து உக்காந்துகிட்டிருக்கேன்."
"புள்ள, உடம்பு பரவாயில்லயா? அன்னிக்கு அப்புறம் என்ன ஆச்சு? என்னிய பாக்க வருவேன்னு நினைச்சுகிட்டிருந்தேன்."
"மன்னிச்சுக்கோடா தீரா. நானு வரனும்னுதான் பார்த்தேன் ஐயன்தான் அங்கன எல்லாம் போகக்கூடாதுன்னுட்டாங்க. நீ மட்டும் அன்னிக்கு என்னிய காப்பாத்துலன்னா நானு செத்துப்போயிருப்பேன்னு பாட்டி சொல்லி அழுதா. உனக்காக கர்த்தர் கிட்ட ரொம்ப வேண்டிக்கிறேன்னு சொன்னா. நானும் வேண்டியிருந்தேண்டா. கர்த்தர் எப்பவுமே நான் கேட்ட எதயும் கொடுக்காம விட்டதில்ல. நீ நல்லா இருக்கியாடா?"
"எனக்கு ஒன்னும் இல்ல புள்ள. நல்லாத்தான் இருக்கேன். கொஞ்ச நாளு வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கனுமின்னு டாக்டர் ஐயா சொன்னதா ஐயன் சொன்னாங்க. அதான் வீட்ட விட்டு வெளியில வரமுடியல. என் மேல உனக்கு கோவம் எதுவும் இல்லதான?"
"என்னடா இப்பிடி கேக்குற? உன்கிட்ட எப்பிடி மன்னிப்பு கேக்கிறதுன்னு துடிச்சிட்டிருந்தேன் நானு. அன்னிக்கு நானு அப்பிடி பேசியிருக்கக்கூடாதுடா. உன் மனசு ரொம்ப நோகிடிச்சில்ல?"
"சே சே... அப்பிடியெல்லாமொன்னுமில்ல. நீ சொன்னது எனக்கு திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருந்துச்சு..."
"மன்னிச்சுக்கோடா... நானு இனிமே அப்பிடி உன்ன திட்டவே மாட்டேன் சரியா?"
"அடி ஆத்தீ எதுக்கு இத்தினி மன்னிப்பு? நீ சொன்னது நிசந்தாம் புள்ள. நானு கொஞ்சம் திமிரோடத்தான் திரியுறன்னு ஆத்தா அடிக்கடி சொல்லும். நானு அது சொல்லி அவ்வளவா கேட்டதில்ல. நீ சொன்னப்ப நெருப்புல கையை வச்ச மாதிரி இருந்துது. ஆமாம் இது என்ன கையில நோட்டுப்புத்தகம்? பாடம் படிக்க வந்தியா?"
"இது பாட புத்தகம் இல்லடா, கவித புத்தகம். போன மாசம் கவித போட்டியில நானு பரிசு வாங்குன கவித இதுலதான் எழுதினேன். ஒரு மூணுநாளு ஆயிடிச்சி ஒழுங்கா எழுதறதுக்கு. ஆனா எல்லாரும் சூப்பரா இருக்குனு பாராட்டினப்ப அந்தக் கஷ்டமே தெரியல தெரியுமா?"
"கவித எழுதறாங்கலாமில்ல கவித? அது சரி, கவித எழுதறது பெரிய பெரிய ஆம்பிளைகதானே? நீ என்னாத்த எழுதற புள்ள?"
"கவித எழுதறதுக்கு ஆம்பள பொம்பள வேணாம்னு எங்க தமிழ் வாத்தியாரம்மா அடிக்கடி சொல்லும். இது நட்பு பத்திய கவித."
"நட்பு பத்திய கவிதயா, எங்க இங்க கொடு பாப்போம்?"
நோட்டுப் புத்தகத்தை அவளின் மறுப்புக்களை மீறி பிடுங்கி பிரித்து பார்த்த தீரனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
"ஐய... என்ன இப்படி எழுதியிருக்காப்புல? ஒன்னுமே புரியல புள்ள."
"உன் மரமண்டைக்கு எங்கடா புரியும்? அது நட்புதான் உலகத்துலேயே உசந்ததுன்னு எழுதியிருக்கு."
"அது சரி, உலகத்துலேயே உசந்ததாமில்ல? என்ன எங்க ஐயனாரு சாமியவிட உசரமா புள்ள?"
"போடா மக்கு. அது வானத்தைவிட பெரிசு. உனக்கு சொன்னா புரியாது."
"சரிதான், ரொம்ப பெரிய புள்ள மாதிரிதான் பேசுற. சரி, உனக்கு நட்புதான் பெரிசுன்னா நிரூபிச்சுக்காட்டேன் பாப்போம்."
"எப்பிடி நிரூபிக்கச் சொல்லுற?"
"என்னிய நண்பனா ஏத்துக்கோ புள்ள. அப்ப நம்புறேன் உனக்கு நட்புதான் பெரிசுன்னு?"
அவனின் எதிர்பாராத கேள்வியைக் கண்டு ஒரு கணம் திகைத்த ரோஸ்லினுக்கு அடுத்தக் கணம் சிரிப்பு பொத்துக்கிட்டு வந்தது.
"ஏ புள்ள, இப்ப என்ன சொல்லிட்டாவன்னு இப்படி சிரிக்கிற?"
"நீ நெசமாலுமே மக்குதான்டா. நீ எப்ப என்னோட உசுர காப்பாத்தினியோ அப்பவே எனக்கு நீ நண்பன்தானடா? இதுக்குமேல உனக்கு நான் வேற தனியா சொல்லனுமோ?"
"அட... அப்படியா விசயம்? அது சரி, பொம்பள புள்ள நட்பு பெரிய ஸ்கூலுக்கு போற வரதான்னு என்னோட நண்பனுங்க சொல்லுவாய்ங்க. நீ எப்பிடீ?"
"போடா, உனக்கு நட்ப பத்தியும் தெரியல, என்னியப் பத்தியும் தெரியல. உண்மையான நட்பு உசிரு இருக்கிற வர இருக்கும்டா..."
"அப்ப உன்னோட நட்பு நான் உசிரோட இருக்கிற வர இருக்குமா புள்ள?"
விளையாட்டாக பேசிக்கொண்டிருந்த தீரனின் கண்களில் திடீரென்று முளைத்த ஏக்கத்துடன் கைகள் நீண்டு வந்து அவளின் முன்னால் நிற்க ஒரு நிமிடம் திகைத்துவிட்ட ரோஸ்லின் தன்னுடைய கைகளை எடுத்து அவனின் கைகளின் மேல் வைத்து இறுக்கமாக மூடினாள்.
"கண்டிப்பா இருக்குண்டா... இன்னியிலேர்ந்து நீ தான் என்னோட உயிர் நண்பன்."
எங்கோ ஆலய மணிகள் ஒரு சேர ஒலித்து ஆமாம் என்றன.