ஹாரி பாட்டரும் மந்திரக்கல்லும் - அத்தியாயம் ஒன்று: பிழைத்த பையன்
அதே நேரத்தில் நாடு முழுவதும் இரகசிய இடங்களில் சந்திக்கும் மக்களனைவரும் தங்களது கோப்பைகளை உயர்த்தி அமைதியான ஒரே குரலில், "பிழைத்த பையன் ஹாரி பாட்டருக்கு!" என்று கூறி அருந்துவது அவனுக்கு அப்போது தெரிய நியாயமில்லை.

நான்காம் எண், பிரைவட் டிரைவில் குடியிருக்கும் திரு மற்றும் திருமதி டர்ஸ்லிக்கு தாங்கள் எதிலும் சாதாரணமானவர்கள் தான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை. வித்தியாசமான, புரிந்துகொள்ள முடியாத விஷயங்களில் சம்பந்தப்பட்டிருப்பவர்களாக அவர்களை நீங்கள் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஏனெனில் அத்தகைய விஷயங்களை அவர்கள் பொறுத்துக்கொள்வதில்லை.
திரு டர்ஸ்லி, துளைபோடும் இயந்திரங்களைத் தயாரிக்கும் கிரன்னிங்ஸ் என்னும் நிறுவனத்தின் இயக்குனர். அவர், பருத்த உடலோடும், பெரிய மீசைக்கு சம்பந்தமில்லாத சிறிய கழுத்துடனும் இருந்தார். திருமதி டர்ஸ்லி ஒல்லியாகவும், சராசரிக்கு மீறிய நீண்ட கழுத்துடனும் இருந்தாள். பக்கத்து வீட்டில் நடப்பவற்றை உளவு பார்க்க அவர்களுடைய வேலிகளைத் தாண்டி பார்க்க அது மிகவும் உபயோகமாக இருக்கிறது. இந்த டர்ஸ்லிக்களுக்கு டட்லி என்ற ஒரு மகனும் இருக்கின்றான். அவர்களைக் கேட்டால் அவனைவிட சிறந்த பையனே கிடையாது என்று சொல்லுவார்கள்.
டர்ஸ்லிக்களுக்கு அவர்களுக்குத் தேவையான எல்லாமே இருந்தது. ஆனால் அவர்களிடம் ஒரு இரகசியமும் இருக்கின்றது. மற்றவர்கள் அதைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என்பதுதான் அவர்களின் மிகப் பெரிய பயமே. பாட்டர்களைப் பற்றி யாராவது தெரிந்து கொண்டுவிட்டால் அதை இவர்களால் தாங்க முடியுமா என்பது இவர்களுக்கே தெரியாது. திருமதி பாட்டர் திருமதி டர்ஸ்லியின் அக்காள். ஆனால் அவர்கள் ரொம்பநாளாக சந்தித்ததே இல்லை. சொல்லப்போனால் அப்படியொரு அக்காள் தனக்கு இருப்பதாகவே திருமதி டர்ஸ்லி காட்டிக்கொள்ள மாட்டாள். ஏனெனில் அவளுடைய அக்காளும், அக்காள் கணவனும் எவ்வளவுக்கெவ்வளவு இவர்களை விட வித்தியாசமாக இருக்கமுடியுமோ அவ்வளவுக்கவ்வளவு வித்தியாசமாக இருந்தார்கள். பாட்டர்கள் இவர்களுடைய தெருவில் வந்தால் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் எல்லாம் என்ன சொல்லுவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே இவர்கள் பயந்தார்கள். பாட்டர்களுக்கும் ஒரு சின்னப் பையன் இருப்பது டர்ஸ்லிக்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அவனைப் பார்த்ததே இல்லை. அந்தப் பையனும் பாட்டர்களை இவர்கள் ஒதுக்கி வைக்க ஒரு காரணம். ஏனெனில் அப்படிப்பட்ட ஒரு பையனுடன் அவர்களுடைய பையன் டட்லி பழகுவதை அவர்கள் விரும்பவில்லை.
ஒரு மங்கலான, சாம்பல் நிற செவ்வாய்க் கிழமை காலையில் திரு மற்றும் திருமதி டர்ஸ்லி எழுந்தபோது நமது கதை தொடங்குகின்றது. வெளியே தெரிந்த மேகமூட்டமான வானம் இன்று நாடு முழுவதும் நடக்க இருக்கின்ற விசித்திரமான விஷயங்களைப் பற்றிக் குறிப்பு எதுவும் கொடுப்பதாக தெரியவில்லை. திரு டர்ஸ்லி ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டே அலுவலகத்திற்கான சோம்பலான டையை மாட்டிக்கொண்டிருந்தார். திருமதி டர்ஸ்லி அடம்பிடித்துக்கொண்டிருந்த டட்லியை உயரமான நாற்காலியில் உட்காரவைக்க போராடிக்கொண்டே அக்கம்பக்கத்தைப் பற்றி கிசுகிசுக்களை சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவர்களில் யாருமே ஜன்னலுக்கு வெளியே ஒரு பெரிய பழுப்பு நிற ஆந்தை வேகமாக பறந்து போனதை கவனிக்கவில்லை.
எட்டரை மணிக்கு திரு டர்ஸ்லி தன்னுடைய சூட்கேஸை எடுத்துக்கொண்டு, திருமதி டர்ஸ்லியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு, டட்லியை முத்தம் கொடுக்க முயன்று, அவன் கோபமாக தன்னுடைய சாப்பாட்டை சுவரில் அடித்துக்கொண்டிருந்ததால் முடியாமல் போக, "குட்டிப் பிசாசு" என்று திட்டிக்கொண்டே வீட்டை விட்டு வெளியே வந்தார். காரில் ஏறி நான்காம் எண்ணின் வழித்தடத்திலிருந்து வெளியே வந்தார்.
தெரு முனையில் திரும்பும் போதுதான் அந்த விசித்திரமான முதல் அறிகுறியைப் பார்த்தார் -- ஒரு பூனை வரைபடத்தைப் படித்துக்கொண்டிருந்தது. ஒரு நொடி தான் கண்டதை திரு டர்ஸ்லியால் உணர முடியவில்லை -- தலையை ஆட்டிக்கொண்டு மறுபடியும் பார்க்கத் திரும்பினார். தெரு முனையில் ஒரு காக்கி நிற பூனை நின்று கொண்டிருந்தது. ஆனால் வரைபடம் எதுவும் பார்வைக்குத் தட்டுப்படவில்லை. எதைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தார்? வெளிச்சத்தினால் ஏற்பட்ட பிரம்மையாக கூட இருக்கலாம். கண்களை கசக்கிவிட்டுக்கொண்டு அந்தப் பூனையை திரும்பவும் உற்றுப் பார்த்தார். அதுவும் அவரைத் திரும்பிப் பார்த்தது. திரு டர்ஸ்லி காரை வளைவில் திருப்பி தெருவுக்கு வந்தார், அவருடைய கார்க்கண்ணாடியின் வழியே அந்தப் பூனையைப் பார்த்தார். அது இப்போது 'பிரைவட் டிரைவ்' என்று எழுதியிருந்த பலகையைப் படித்துக்கொண்டிருந்தது -- இல்லை பார்த்துக்கொண்டிருந்தது. பூனைகளால் வரைபடத்தையோ வழிகாட்டுப் பலகைகளையோ படிக்க முடியாது. திரு டர்ஸ்லி தன்னைத்தானே உலுக்கிக் கொண்டு அந்தப் பூனையை யோசனையிலிருந்து அகற்றினார். நகரத்தை அவர் நெருங்கிய போது அன்றைக்கு கிடைக்கலாம் என்று அவர் நம்பிக்கொண்டிருந்த துளைபோடும் இயந்திரங்களுக்கான ஒரு பெரிய ஆர்டரைத் தவிர வேறு எதுவும் அவரது யோசனையில் இல்லை.
ஆனால் நகரத்தின் ஆரம்பத்தில் வேறு ஏதோ ஒன்று டிரில்களுக்குப் பதிலாக அவரது எண்ணத்தை ஆக்ரமித்துக்கொண்டது. வழக்கமான காலைநேர டிராபிக் ஜாமில் காத்திருக்கும் போது வித்தியாசமான உடையணிந்த மக்கள் பலர் உலாவுவதைப் பார்த்தார். நீண்ட அங்கி அணிந்த மனிதர்கள். வேடிக்கையான உடைகளை அணிந்தவர்களை திரு டர்ஸ்லி எப்போதும் பொறுத்துக் கொள்வதேயில்லை -- இன்றைய இளைஞர்கள் போடும் கெட்டப்புகளைப் பார்க்கவேண்டுமே! இதுவும் அதுபோன்ற முட்டாள்தனமான ஒரு புதிய நாகரீகம் என்று நினைத்தார். காரின் ஸ்டீரிங்கில் அவர் தாளம் போட்டுக்கொண்டிருந்தபோது மிகவும் பக்கத்தில் நின்றிருந்த சில வித்தியாசமான மனிதர்களின் மேல் அவரது பார்வை விழுந்தது. அவர்களுக்குள் ஏதோ சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தார்கள். திரு டர்ஸ்லி, அவர்களில் சிலர் இளைஞர்களாகக் கூட இல்லாததைக் கண்டு மிகவும் கோபப்பட்டார். ஏன் அந்த அவரைவிட வயதான மனிதன் பளிச்சிடும் பச்சை நிற நீள அங்கி அணிந்திருக்கின்றான்? அவனுக்கு என்ன தைரியம்! ஆனால், திரு டர்ஸ்லிக்கு இது ஒரு வேடிக்கையான வித்தை என்று தோன்றியது. அவர்கள் கண்டிப்பாக எதற்காகவோ பணம் சேகரிக்க வந்திருப்பார்கள். ஆமாம்... அப்படித்தான் இருக்கும். டிராபிக் ஜாம் சரியாக திரு டர்ஸ்லி கிரன்னிங்ஸின் பார்க்கிங்கிற்கு வந்து சேர்ந்தார். அவரது புத்தி திரும்பவும் டிரில்களின் மேல் பதிந்தது.
ஒன்பதாம் மாடியிலிருக்கும் தனது அலுவலகத்தில் ஜன்னலுக்கு முதுகுகாட்டிக் கொண்டுதான் எப்போதுமே திரு டர்ஸ்லி அமர்ந்திருப்பார். அன்றைக்கும் அப்படி அவர் உட்கார்ந்திருக்கவில்லையென்றால் அன்றைக்கு காலையில் டிரில்களின் மேல் கவனத்தைச் செலுத்துவது அவருக்கு முடியாமல் போயிருக்கும். பட்டப் பகலில் பறந்து செல்லும் ஆந்தைகளை அவர் கவனிக்கவில்லை. அவர் கவனிக்காவிட்டாலும் கீழே இருந்த சிலர், ஆந்தை மேல் ஆந்தையாக பறந்துகொண்டே இருந்ததைச் சுட்டிக்காட்டிக் கொண்டு, திறந்த வாய் மூடாமல் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இரவில்கூட ஆந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் திரு டர்ஸ்லி ஆந்தைகள் இல்லாத வாடிக்கையான காலைப் பொழுதை அநுபவித்துக்கொண்டிருந்தார். ஐந்து மனிதர்களிடம் கத்திப் பேசினார். முக்கியமான டெலிபோன் கால்கள் நிறைய செய்து சிறிது கத்தவும் செய்தார். அவரது கால்களை கொஞ்சம் நீட்டி கீழே நடந்து போய் எதிரிலிருக்கும் பேக்கரியிலிருந்து மதிய உணவுக்காக ஒரு பன் வாங்கலாம் என்று அவர் நினைக்கும் வரை நல்ல மூடிலிருந்தார்.
பேக்கரியின் பக்கத்தில் சில நீள அங்கி மனிதர்களைப் பார்க்கும் வரை அவர் அவர்களைப் பற்றி மறந்துவிட்டிருந்தார். அவர்களைக் கோபமாக முறைத்துப் பார்த்துக்கொண்டே ரோட்டைக் கடந்தார். அவர்களைக் கண்டாலே இவருக்கு ஏனோ இருப்புக்கொள்ள முடியவில்லை. அவர்களும் தங்களுக்குள் ஏதோ சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தனர் ஆனால் ஒரு உண்டியலைக் கூட அவரால் பார்க்கமுடியவில்லை. கையில் ஒரு பெரிய டாக்நட்டை பிடித்துக்கொண்டு ரோட்டைக் கடந்து போகும்போதுதான் அவர்கள் பேசிய சில வார்த்தைகள் அவரது காதில் விழுந்தது.
"பாட்டர்கள்... சரிதான், அதுதான் நான் கேள்விப்பட்டதும். ஆமாம், அவர்களின் மகன் ஹாரி."
திரு டர்ஸ்லி ஆணியடித்தமாதிரி நின்றுவிட்டார். பயத்தில் மூழ்கினார். பேசியவர்களிடம் ஏதோ கேட்க முயன்றவர் போல அவர்களைத் திரும்பி பார்த்தார் ஆனால் அதைவிட கேட்காமலிருப்பதே மேல் என்று நினைத்ததைப் போல விட்டுவிட்டார்.
ரோட்டை வேகமாக கடந்து, அலுவலகத்திற்குள் விரைந்து நுழைந்து, தனது செக்ரட்டரியிடம் கொஞ்ச நேரம் தொந்திரவு செய்யாமலிருக்கச் சொல்லிவிட்டு, டெலிபோனை எடுத்து தனது வீட்டின் எண்களை டயல் செய்து முடித்த மறுநொடி தனது மனதை மாற்றிக்கொண்டார். போனை திரும்ப வைத்துவிட்டு தனது மீசையைத் தடவிக்கொண்டே யோசித்தார்... இல்லை, அவர் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார். பாட்டர் ஒன்றும் புழக்கத்திலில்லாத பெயரில்லை. பாட்டர் என்ற பெயருடன் ஹாரி என்ற பெயருடைய மகனைக் கொண்டவர்கள் நிறைய பேர் இருப்பார்கள் என்று உறுதியாக நினைத்தார். சொல்லப்போனால் தனது மனைவியின் அக்காள் மகனின் பெயர் ஹாரியா இல்லையா என்றுகூட அவருக்குத் தெரியாது. அவனை அவர் பார்த்ததுகூட இல்லை. அவனுடைய பெயர் ஹார்வே அல்லது ஹரால்டாகக் கூட இருக்கலாம். திருமதி டர்ஸ்லியைக் கலவரப்படுத்துவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. அவளுடைய அக்காளைப் பற்றிப் பேசினாலே அவள் அப்செட் ஆகிவிடுகின்றாள். அவளைக் குற்றம் சொல்லமுடியாது -- அவளுடைய அக்காளைப் போன்ற ஒரு அக்காள் அவருக்கு இருந்திருந்தால்... ஆனால் எல்லாம் ஒன்றுதான். இந்த நீள அங்கி மனிதர்கள்...
அன்றைக்கு மதியம் டிரில்களில் கவனத்தைச் செலுத்துவது அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த யோசனையிலேயே அன்றைக்கு மாலை ஐந்து மணிக்கு அலுவலகத்தை விட்டு கிளம்பிய அவர் கதவுக்கு வெளியே இருந்த யாரோ ஒருவர் மேல் நேராகப் போய் மோதிக்கொண்டார்.
"மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று கிட்டத்தட்ட கீழே விழ இருந்த அந்த மனிதரிடம் கூறினார். வயலட் நிற நீள அங்கியை அந்த மனிதர் அணிந்துகொண்டிருப்பதை உணர அவருக்குச் சில நொடிகள் பிடித்தது. கிட்டத்தட்ட கீழே விழ இருந்ததைப் பற்றி அந்த மனிதர் கவலைப் பட்ட மாதிரியே தெரியவில்லை. மாறாக கடந்து போகிறவர்களை திரும்பி பார்க்கவைக்கும் கிறீச்சிடும் குரலில் அகலமாக புன்னகைத்துக் கொண்டே கூறினார், "கவலைப்படாதீர்கள் சார், இன்றைக்கு எதுவுமே என்னை அப்செட்டாக்க முடியாது! கடைசியில் 'நீங்களே-அறிந்தவன்' போய்விட்டதை எண்ணி கொண்டாடுங்கள்! உங்களைப் போன்ற மானிடர்கள் கூட இந்த மிக மிக சந்தோஷமான நாளைக் கொண்டாட வேண்டும்!"
திரு டர்ஸ்லியை இடையில் கட்டி அணைத்துவிட்டு அந்த மனிதர் தாண்டிப் போனார்.
திரு டர்ஸ்லி தரையில் ஆணிவைத்து அறைந்தமாதிரி நின்றுவிட்டார். யாரென்றே தெரியாத ஒரு மனிதரால் அவர் கட்டியணைக்கப்பட்டிருக்கின்றார். அதோடில்லாமல் ஏதோ 'மானிடர்' என்று தன்னை அந்த மனிதர் அழைத்தது அவரது நினைவில் வந்தது. அவருக்கு மூச்சிரைத்தது. காருக்கு விரைந்து சென்று வீட்டுக்கு ஓட்டினார். இதெல்லாம் பிரம்மையாகத்தான் இருக்கும் என்று நம்பிக்கையில்லாமல் நம்பிக்கொண்டு சென்றார். ஏனெனில் அவருக்கு பிரம்மையின் மேல் நம்பிக்கையில்லை.
நான்காம் எண்ணின் தெருவுக்கு அவர் வந்தடைந்தபோது அவர் பார்த்த முதல் காட்சி அவரது மூடை இன்னமும் மோசமாக்கியது -- அது காலையில் அவர் பார்த்த அதே பூனை இன்னமும் அங்கே இருந்ததுதான். அது இப்போது அவரது தோட்டத்தின் சுவரில் உட்கார்ந்திருந்தது. அது காலையில் பார்த்த பூனைதான் என்பதில் அவருக்கு சந்தேகமேயில்லை. ஏனெனில் அதனுடைய கண்களைச் சுற்றியும் ஒரு கறுப்பு வட்டம் இருந்தது.
"ஷு" என்று கத்தி அதை விரட்ட முயன்றார். ஆனால் அது அசைந்துகொடுக்கவில்லை. அது அவரை முறைத்து பார்க்க மட்டும் செய்தது. இது சாதாரணப் பூனையின் நடவடிக்கையா? திரு டர்ஸ்லிக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை நிதானப்படுத்திக்கொள்ள வீட்டினுள் நுழைந்தார். இப்போதும் அவரது மனைவியிடம் எதுவும் சொல்லுவதில்லை என்று உறுதியோடிருந்தார்.
திருமதி டர்ஸ்லியின் நாள் வழக்கமாக வகையில் போயிருந்தது. இரவு உணவில் பக்கத்து வீட்டுத் திருமதி அவளுடைய மகளிடம் போட்ட சண்டையைப் பற்றியும் டட்லி எப்படி ஒரு புதிய வார்த்தையைக் ("நிகழாது!") கற்றுக்கொண்டான் என்பதைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தாள். திரு டர்ஸ்லி சாதாரணமாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ள முயன்றார். டட்லியைப் படுக்க வைத்தபிறகு ஹாலுக்கு சென்று கடைசி நேர செய்திகள் கேட்க உட்கார்ந்தார்.
"கடைசியாக, நாடு முழுவதிலுமுள்ள பறவை-கண்காணிப்பாளர்கள் இன்றைக்கு ஆந்தைகள் நடந்துகொண்ட வித்தியாசமான நடவடிக்கையைப் பார்த்திருக்கின்றார்கள். ஆந்தைகள் எப்போதுமே பகலில் தூங்கி, இரவில் மட்டுமே வேட்டையாட வெளியே கிளம்பும் வகையாக இருப்பினும், இன்றைக்கு காலை சூரிய உதயத்திலிருந்து ஆந்தைகள் நாடு முழுவதும் வெவ்வேறு திசைகளை நோக்கி பறந்ததை நிறைய பேர் பார்த்திருக்கின்றார்கள். நிபுனர்களால் ஏன் இப்படி அதிரடியாக ஆந்தைகள் தங்களுடைய தூங்கும் பழக்கத்தை மாற்றிக்கொண்டுவிட்டன என்று சொல்லமுடியவில்லை." செய்தி வாசிப்பவர் மெலிதாக புன்னகைத்துக்கொண்டார். "வித்தியாசமாக இருக்கிறது. இப்போது ஜிம் மெக்கப்பின் நமக்கு வானிலை அறிவிப்பை வழங்குவார். இன்றைக்கு இரவு மேலும் ஆந்தைகளின் பொழிவு இருக்குமா ஜிம்?"
"நல்லது டெட்." வானிலை அறிவிப்பாளர் தொடர்ந்தார். "எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஆந்தைகள் மட்டும் இன்று வித்தியாசமாக நடந்துகொள்ளவில்லை. கெண்ட், யோர்க்ஷைர் மற்றும் டன்டி போன்ற தொலைவில் இருக்கும் இடத்திலிருந்தும்கூட பார்வையாளார்கள் இன்று எனக்கு போன் செய்து நேற்றைக்கு நான் உறுதிகூறியிருந்த மழைக்குப் பதில், வெடி நட்சத்திரங்கள் அதிகமாக பொழிந்ததாகக் கூறுகின்றனர்! ஒருவேளை பான்பையர் இரவை மக்கள் சீக்கிரமே கொண்டாடுகின்றார்கள் போலிருக்கின்றது -- அடுத்த வாரம் வரை அது இல்லை நண்பர்களே! ஆனால் இன்றைக்கு இரவு ஈரமாக இருக்கும் என்று என்னால் உறுதி கூறமுடியும்"
திரு டர்ஸ்லி நாற்காலியில் உறைந்து போய் உட்கார்ந்திருந்தார். பிரிட்டன் முழுவதும் வெடி நட்சத்திரங்கள்? ஆந்தைகள் பட்டப்பகலில் பறக்கின்றன? எங்கும் வித்தியாசமாக நீள அங்கி அணிந்த மனிதர்கள்? அதோடு பாட்டர்களைப் பற்றி ஒரு கிசுகிசுப்பு...
திருமதி டர்ஸ்லி இரண்டு டீக்கோப்பைகளை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தாள். அது நன்றாக இல்லை. அவளிடம் ஏதாவது சொல்லியாக வேண்டும். தயக்கத்துடன் தொண்டையைக் கணைத்துக் கொண்டார். "எர் -- பெதுனியா, டியர் -- உன்னுடைய அக்காளிடமிருந்து உனக்கு எதுவும் செய்தி வரவில்லைதானே?"
அவர் எதிர்பார்த்தமாதிரியே திருமதி டர்ஸ்லி அதிர்ச்சியும் கோபமும் அடைந்தாள். எல்லாவற்குக்கும் மேல், அவர்கள் சாதாரணமாக அப்படி ஒரு அக்காள் இருப்பதாகவே காட்டிக்கொண்டதில்லை.
"இல்லை." அவள் பதிலளித்தாள். "ஏன்?"
"செய்தியில் வித்தியாசமான விஷயங்களிருந்தது." திரு டர்ஸ்லி மென்று முழுங்கினார். "ஆந்தைகள்... வெடி நட்சத்திரங்கள்... அதோடு வேடிக்கையான மனிதர்கள் சிலரை இன்று நகரத்தில் பார்த்தேன்."
"அதனால்?" திருமதி டர்ஸ்லி எரிச்சலுடன் கேட்டாள்.
"இல்லை, ஒரு வேளை... இதெல்லாம்... உன் அக்காளுடன் சம்பந்தப்பட்டிருக்கலாமோ என்று நினைத்தேன்... உனக்குத்தான் தெரியுமே அவளின் கூட்டத்தைப் பற்றி"
திருமதி டர்ஸ்லி இறுக்கமான உதடுகளால் தனது டீயை உறிஞ்சினாள். திரு டர்ஸ்லிக்கு தான் 'பாட்டர்' என்ற பெயரைக் கேட்டதை அவளிடம் சொல்ல தனக்கு தைரியமிருக்கிறதா என்று ஆச்சரியமாக இருந்தது. இல்லை என்று முடிவு கட்டினார். அதற்குப் பதிலாக, சாதாரணமாகக் கேட்பது போல குரலை வைத்துக் கொண்டு கேட்டார். "அவர்களுடைய மகன் -- அவனுக்கு நம்ம டட்லி வயதுதான் இருக்கும் இல்லையா?"
"அப்படித்தான் நினைக்கின்றேன்" திருமதி டர்ஸ்லி இறுக்கத்துடன் சொன்னாள்.
"அவனது பெயர் என்ன? ஹாவர்டு தானே?"
"ஹாரி. என்னைக் கேட்டால் முகம் சுளிக்கவைக்கின்ற பொதுவான பெயர்"
"ஓ... ஆமாம்!" திரு டர்ஸ்லி பயத்தில் மூழ்குகின்ற இதயத்தோடு கூறினார். "ஆமாம். நான் ஒத்துக்கொள்கிறேன்."
மாடியிலிருந்த படுக்கையறைக்கு அவர்கள் செல்லும்வரை அவர் அதைப் பற்றி வேறு வார்த்தையேதும் கூறவில்லை. திருமதி டர்ஸ்லி பாத்ரூமுக்குச் சென்றவுடன் திரு டர்ஸ்லி படுக்கையறை ஜன்னலுக்கு வந்து கீழே அவரது தோட்டத்திற்கு முன்னால் பார்த்தார். அந்தப் பூனை இன்னமும் அங்கிருந்தது. யாருக்கோ காத்திருப்பது போல அது பிரைவட் டிரைவையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தது.
அவர் எல்லாம் கற்பனை செய்துகொள்கிறாரா? இதெல்லாம் பாட்டர்களுக்கு சம்பந்தமானதாக இருக்க முடியுமா? அப்படி இருந்துவிட்டால்? இவர்கள் அவர்களோடு சம்பந்தப் பட்டவர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரியவந்தால்? அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.
டர்ஸ்லிக்கள் படுக்கையில் விழுந்தனர். திருமதி டர்ஸ்லி சீக்கிரமே தூங்கிவிட்டாள். ஆனால் திரு டர்ஸ்லிக்கு எளிதில் தூக்கம் வரவில்லை. எல்லாவற்றையும் புத்தியிலிட்டு அலசிக்கொண்டே விழித்திருந்தார். கடைசியாக, பாட்டர்களுக்கு சம்பந்தம் இருந்தால் கூட அவர்கள் இவரிடமோ திருமதி டர்ஸ்லியிடமோ வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்ற நினைப்பு அவருக்கு வந்தது. ஏனெனில் இவரும் பெதுனியாவும் அவர்களையும் அவர்களுடைய கூட்டத்தைப் பற்றியும் என்ன நினைக்கிறார்கள் என்று பாட்டர்களுக்குத் தெரியும். இப்போது நடந்துகொண்டிருக்கும் எதிலும் பெதுனியா எப்படியும் சம்பந்தப்பட வாய்ப்பு இல்லை என்று அவருக்குத் தோன்றியது -- கொட்டாவி விட்டுக்கொண்டு புரண்டு படுத்து ஒரு அசாதாரனமான தூக்கத்துக்குப் போனார்.
அவர் நினைத்தது எவ்வளவு தவறு!
திரு டர்ஸ்லிகூட எப்படியோ தூங்கிவிட்டார், ஆனால் வெளியே இருந்த அந்தப் பூனை மட்டும் தூங்குவதற்கான எந்தவொரு அறிகுறியுமின்றி விழித்திருந்தது. சிலைபோல உட்கார்ந்துகொண்டு பிரைவட் டிரைவின் தெரு மூலையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது. அடுத்த தெருவில் ஒரு காரின் கதவு அறைந்து சாத்தப் பட்டபோதும் இரண்டு ஆந்தைகள் தலைக்கு மேலே பறந்து போனபோதும் சிறிய சலனத்தைத் தவிர வேறு அசைவுகளே அதனிடம் இல்லை. உண்மையில் அது அசைந்தபோது கிட்டத்தட்ட நடு இரவு ஆகிவிட்டது.
அந்தப் பூனை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த தெருமுனையில் திடீரென்று மண்ணிலிருந்து முளைத்தது போல ஒரு மனிதர் தோன்றினார். பூனையின் வால் அசைந்து அதனுடைய கண்கள் உன்னிப்பாயின.
இந்த மனிதரைப் போன்றவரை பிரைவட் டிரைவ் இதுவரை கண்டதில்லை. அவர் மிகவும் உயரமாகவும், ஒல்லியாகவும், அவரது பெல்ட்டில் இறுக்கிக்கொள்ளும் அளவிற்கு தழைய வளர்ந்திருந்த நீண்ட வெள்ளி நிற தாடியை வைத்துப் பார்க்கும்போது மிக வயதானவராகவும் தெரிந்தார். அவர் நீளமான பர்பிள் நிற அங்கியை அணிந்து, குதிகாலுயர்த்திய, பக்கிள் வைத்த பூட்ஸ் அணிந்திருந்தார். அவரது கண்கள் அரை வட்ட மூக்குக் கண்ணாடியின் பின்னால் பளீரிட்டன. அவரது மூக்கு நீண்டும் இரண்டு முறை உடைந்தது போல அழுந்தியும் இருந்தது. அந்த மனிதரின் பெயர் ஆல்பஸ் டம்பிள்டோர்.
ஆல்பஸ் டம்பிள்டோர் அவரது பெயரிலிருந்து பூட்ஸ்வரை எதுவுமே பழக்கப்படாத ஒரு தெருவில் இருப்பதையே உணராதது போலிருந்தார். அவரது அங்கியில் எதையோ மும்முரமாக தேடிக்கொண்டிருந்தார். ஆனால் அவரை யாரோ கண்காணிப்பது அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும், எனென்றால் திடீரென்று அவர் தலையை உயர்த்தி தெருவின் மறுமுனையிலிருந்து அவரையே இன்னமும் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பூனையைப் பார்த்தார். ஏனோ அந்தப் பூனையைப் பார்த்தது அவருக்கு புன்னகையை வரவழைத்தது. அவர் மெலிதாக சிரித்துக்கொண்டே முணுமுணுத்தார், "எனக்கு ஏற்கனவே தெரிந்திருக்கவேண்டும்"
அவர் தேடிக்கொண்டிருந்தது கிடைத்துவிட்டது. அது ஒரு வெள்ளி சிகரெட் லைட்டர் போல இருந்தது. அவர் அதை கிளிக் செய்து திறந்து, காற்றில் உயர்த்திப் பிடித்து, அழுத்தினார். அவருக்கு அருகிலிருந்த தெருவிளக்கு சின்ன சத்தத்துடன் அனைந்தது. அவர் அதை மறுபடியும் அழுத்த அடுத்திருந்த தெருவிளக்கும் அனைந்தது. பன்னிரண்டு முறை அந்த வெளிச்சப்போக்கியை அழுத்தி பூனையின் நெருப்புக்கனல் போன்ற கண்களிலிருந்து வெளிவந்த ஒளியைத்தவிர வேறு எல்லா ஒளியையும் அணைத்துவிட்டார். இப்போது யாராவது தங்களுடைய ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தால், அது கூர்மையான பார்வை கொண்ட திருமதி டர்ஸ்லியாகவே இருந்தாலும் கீழே பேவ்மென்ட்டில் நடக்கும் எதுவும் தெரியாது. டம்பிள்டோர் வெளிச்சப்போக்கியை அங்கிக்குள் போட்டுக்கொண்டு நான்காம் எண்ணை நோக்கி நடந்து, அந்தப் பூனைக்கு பக்கத்திலிருந்த சுவற்றில் அமர்ந்தார். அவர் அதை நோக்கி பார்க்கவில்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து அதனுடன் பேச ஆரம்பித்தார்.
"உங்களை இங்கே பார்த்ததில் சந்தோஷம் புரொபசர் மெக்கோனகல்"
அவர் திரும்பி அதைப் பார்த்து புன்னகைத்தார், ஆனால் அது அங்கே இல்லை. அதற்கு பதிலாக அங்கே உட்கார்ந்திருந்த பூனையின் கண்களைச் சுற்றியிருந்த கறுப்பு வட்டத்தின் அளவேயிருந்த மூக்குக்கண்ணாடி அணிந்து, தீவிர பார்வையுடன் உட்கார்ந்திருந்த ஒரு பெண்மனியைப் பார்த்து அவர் புன்னகைத்துக் கொண்டிருந்தார். அவளும் நீள அங்கி ஒன்று எமரால்டு நிறத்தில் அணிந்திருந்தாள். அவளது கறுப்பு நிற முடியை இறுக்கமான கொண்டையிட்டு கட்டியிருந்தாள். அசதியாகத் தெரிந்தாள்.
"நான்தான் என்று எப்படி தெரிந்துகொண்டீர்கள்?" அவள் கேட்டாள்.
"எனதருமை புரொபசர், இப்படி சிலைபோல அமர்ந்திருக்கும் பூனையை நான் பார்த்ததேயில்லை."
"நீங்களும் நாள் முழுவதும் செங்கல் சுவரில் அமர்ந்திருந்தால் சிலைபோலத்தான் ஆகியிருப்பீர்கள்." புரொபசர் மெக்கோனகல் கூறினாள்.
"நாள் முழுவதுமா? இந்தக் கொண்டாட வேண்டிய நேரத்திலா? இங்கே வரும் வழியில் ஒரு டஜன் பார்ட்டிகளையாவது நான் சந்தித்திருப்பேன்."
புரொபசர் மெக்கோனகல் கோபத்துடன் மூக்கையுறிஞ்சிக்கொண்டாள்.
"ஓ... ஆமாம். எல்லோரும் கொண்டாடுகின்றார்கள். சரிதான்." பொறுமையிழந்து அவள் கூறினாள். "அவர்கள் சிறிது கவனமாக இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்திருக்க வேண்டும். ஆனால் இல்லை -- மானிடர்கள் கூட ஏதோ நடப்பதை கவனித்துவிட்டார்கள். அவர்களின் செய்தியில் அது வந்திருந்தது." அவள் தனது தலையை டர்ஸ்லிக்களின் இருட்டான ஹாலை நோக்கி அசைத்துக்காட்டினாள். "நானே கேட்டேன். ஆந்தைகள் கூட்டம்... வெடி நட்சத்திரங்கள்... நல்லது, அவர்கள் ஒன்றும் வடிகட்டின முட்டாள்களில்லை. அவர்கள் எதையாவது கவனிக்கப்பிறந்தவர்கள். கென்ட்டில் வெடி நட்சத்திரங்கள் -- அது டெடாலஸ் டிக்கிள்தான் என்று பந்தயம் கட்டுவேன். அவருக்கு எப்போதுமே எச்சரிக்கை உணர்வு இருந்தது இல்லை."
"அவர்களை நீங்கள் குற்றம் சொல்ல முடியாது" டம்பிள்டோர் இதமாக கூறினார். "பதினோரு வருஷங்களில் கொண்டாட மதிப்பான ஒரு சிறு விஷயம்கூட நமக்கு இருந்ததில்லை."
"எனக்கு அது தெரியும்" புரொபசர் மெக்கோனகல் சுளிப்புடன் கூறினாள். "ஆனால், அதற்காக எல்லோரும் அவர்களது புத்தியை மறக்கத்தேவையில்லை. மக்கள் கொஞ்சங்கூட கவலைப்படுவதேயில்லை, பட்டபகலில் வதந்திகளைப் பறிமாறிக்கொண்டு தெருவில் அலைகிறார்கள், மானிடர்களின் உடைகளைக் கூட அணியவில்லை." இதைச் சொல்லும்போது டம்பிள்டோர் ஏதாவது கூறுவார் என்று எதிர்பார்த்தது போல பக்கமாக அவரைக் கூர்ந்து பார்த்து அவர் எதுவும் சொல்லவில்லை என்று தெரிந்ததும் மேற்கொண்டு தொடர்ந்தாள், "நல்ல நாளாக இருந்திருக்கலாம், இன்றைக்கு 'நீங்களே-அறிந்தவன்' போய்விட்டது போலத்தான் இருக்கின்றது, ஆனால் மானிடர்கள் நம்மைத் தெரிந்துகொண்டுவிட்டார்கள். அவன் உண்மையிலேயே போய்விட்டான் என்று நினைக்கிறேன் இல்லையா டம்பிள்டோர்?"
"கண்டிப்பாக அப்படித்தான் இருக்கிறது" டம்பிள்டோர் கூறினார். "நன்றி சொல்ல நமக்கு நிறைய இருக்கின்றது. உங்களுக்கு லெமன் டிராப் வேண்டுமா?"
"என்ன?"
"லெமன் டிராப். இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு வகையான மானிடர்களின் இனிப்பு."
"நன்றி. ஆனால் வேண்டாம்." புரொபசர் மெக்கோனகல் இது ஒன்றும் லெமன் டிராப்புகளுக்கான நேரம் இல்லை என்று நினைத்ததைப் போல உணர்ச்சியின்றி கூறினாள். "நான் சொல்ல வந்தது, 'நீங்களே-அறிந்தவன்' போயே இருந்தாலும் -"
"எனதருமை புரொபசர், உங்களைப் போன்ற அறிவுள்ளவர்கள் கூடவா அவனைப் பெயர் சொல்லி அழைக்க முடியாது? இந்த 'நீங்களே-அறிந்தவன்' முட்டாள்தனத்தையெல்லாம் விட்டுவிட்டு அவனை அவனது உண்மையான பெயரான 'வோல்டமார்ட்' என்று அழைக்கச்சொல்லி நானும் கடந்த பதினோரு ஆண்டுகளாக முயற்சி செய்து விட்டேன்." புரொபசர் மெக்கோனகல் சிறிது பயத்தில் முகத்தை சுளித்ததை இரண்டு லெமன் டிராப்புகளை உரித்துக்கொண்டிருந்த டம்பிள்டோர் கவனிக்கவில்லை. "இப்படி 'நீங்களே-அறிந்தவன்' என்று அழைப்பது மிகவும் குழப்பத்தையே கொண்டு வரும். வோல்டமார்ட்டின் பெயரைச் சொல்லி அழைப்பதற்கே பயப்படுமளவுக்கு ஒரு காரணத்தை என்னால் எப்போதுமே நினைத்துப் பார்க்க முடியாது."
"உங்களால் நினைத்துப் பார்க்க முடியாது என்று எனக்குத் தெரியும்" கொஞ்சம் வியப்புடனும் கொஞ்சம் கவலையுடனும் புரொபசர் மெக்கோனகல் கூறினாள். "ஆனால் நீங்கள் வேறுபட்டவர். 'நீங்களே-அறி-- சரி சரி, வோல்டமார்ட் பயப்படும் ஒரே மனிதர் நீங்கள் தான் என்று எல்லோருக்கும் தெரியும்."
"நீங்கள் என்னை புகழ்கிறீர்கள்" அமைதியுடன் கூறினார் டம்பிள்டோர். "என்னிடமில்லாத சக்திகள் வோல்டமார்ட்டிடம் இருக்கின்றன."
"அது ஏனெனில் நீங்கள் அந்த மாதிரி சக்திகளை உபயோகப் படுத்த தயங்குபவர் என்பதால்தான்"
"இருட்டாயிருப்பது நல்லதாப் போச்சு. என்னுடைய புதிய காதுமூடி மிகவும் அழகாக இருப்பதாக மதாம் பாம்ப்ரே சொன்னதிலிருந்து இந்த அளவு நான் வெட்கப்பட்டதேயில்லை."
புரொபசர் மெக்கோனகல் டம்பிள்டோரைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கூறினாள், "ஆந்தைகளைவிட வதந்திகள்தான் அதிகமாக பறக்கின்றன. எல்லோரும் என்ன சொல்லிக்கொள்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? ஏன் அவன் மறைந்தானென்று? எது அவனை கடைசியில் வென்றதென்று?"
டம்பிள்டோரை மிகவும் கூர்மையாக பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டதிலிருந்து, நாள்முழுவதும் பெண்மனியாகவுமில்லாமல் பூனையாக சில்லிட்ட சுவரில் அவள் காத்திருந்ததிற்கான காரணத்திற்கும், அவள் பேச வேண்டிய முக்கியமான விஷயத்திற்கும் புரொபசர் மெக்கோனகல் வந்துவிட்டது தெரிந்தது. டம்பிள்டோர் உண்மை என்று கூறும்வரை யார் என்ன சொன்னாலும் அவள் அதை நம்பமாட்டாள் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. ஆனால் டம்பிள்டோர் இன்னொரு லெமன் டிராப்பை எடுத்தாரே தவிர எதுவும் பதில் சொல்லவில்லை.
"அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்றால்," அவள் மீண்டும் அழுத்தி தொடர்ந்தாள், "நேற்றிரவு வோல்டமார்ட் காட்ரிக் ஹால்லோவிற்கு பாட்டர்களைத் தேடி வந்தானென்றும். வதந்தி என்னவென்றால் லில்லியும் ஜேம்ஸ் பாட்டரும் -- உம் -- இறந்து விட்டார்கள் என்றும்..."
டம்பிள்டோர் தனது தலையை ஆமோதிப்பாக தலையசைக்க புரொபசர் மெக்கோனகல் வாயடைத்துப்போனாள்.
"லில்லியும் ஜேம்ஸும், என்னால் நம்பவே முடியவில்லை... நான் நம்பவும் விரும்பவில்லை... ஓ, ஆல்பஸ்..."
டம்பிள்டோர் தனது கையை நீட்டி அவளது தோளில் ஆறுதலாக தட்டிக்கொடுத்தார். "எனக்குத் தெரியும்... எனக்குத் தெரியும்..." கனத்த இதயத்துடன் அவர் கூறினார்.
புரொபசர் மெக்கோனகல் நடுங்கும் குரலுடன் மேலும் தொடர்ந்தாள், "அது மட்டும் அல்ல. அவன் பாட்டர்களின் மகன் ஹாரியைக் கொல்ல முயற்சி செய்தானென்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் -- அவனால் அது முடியவில்லை. அவனால் அந்தச் சின்னஞ்சிறு பையனைக் கொல்ல முடியவில்லை. யாருக்கும் ஏன் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் எல்லோரும் சொல்வது என்னவென்றால், அவன் ஹாரி பாட்டரைக் கொல்ல முடியாதபோது, வோல்டமார்ட்டின் சக்திகள் அனைத்தும் எப்படியோ செயலிழந்தது என்றும் -- அதனால்தான் அவன் போய்விட்டான் என்றும் சொல்லுகிறார்கள்"
டம்பிள்டோர் அதற்கும் சோகத்துடன் ஆமோதிப்பாக தலையசைத்தார்.
"அது -- அது உண்மையா?" நம்பிக்கையிழந்து கேட்டாள் புரொபசர் மெக்கோனகல். "அவன் செய்த எல்லாம்... எத்தனை மனிதர்களை கொன்றிருப்பான்... அவனால் ஒரு சின்னப் பையனைக் கொல்ல முடியவில்லையா? நம்பவே முடியவில்லை... அவனை நிறுத்த நாம் எவ்வளவு செய்திருப்போம்... ஆனால், எப்படி ஹாரி பிழைத்தான்?"
"நம்மால் ஊகிக்க மட்டுமே முடியும்." டம்பிள்டோர் கூறினார். "நமக்கு எப்போதும் தெரியாமலேகூட போகலாம்..."
புரொபசர் மெக்கோனகல் ஒரு கைக்குட்டையை எடுத்து தனது விழிகளின் ஓரத்தை துடைத்தாள். டம்பிள்டோர் ஒரு பெருமூச்சுடன் தனது அங்கியின் பாக்கெட்டிலிருந்து ஒரு தங்க கடிகாரத்தை எடுத்து பார்த்தார். அது ஒரு வித்தியாசமான கடிகாரம். அதில் பன்னிரண்டு முட்கள் இருந்தன ஆனால் எண்கள் இல்லை. அதற்குப் பதில், சிறிய கோள்கள் ஓரங்களில் நகர்ந்துகொண்டிருந்தன. அது டம்பிள்டோருக்கு புரிந்திருக்கவேண்டும். ஏனெனில் அவர் அதை திரும்பவும் அங்கியின் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கூறினார், "ஹாக்ரிட் லேட்டாக்குகின்றான். அவன்தான் நான் இங்கே வர இருக்கும் விஷயத்தை உங்களிடம் சொன்னான் என்று நினைக்கின்றேன். இல்லையா?"
"ஆமாம்." புரொபசர் மெக்கோனகல் கூறினாள். "எத்தனையோ இடங்களிருக்க இங்கே ஏன் வந்திருக்கின்றீர்கள் என்று என்னிடம் நீங்கள் சொல்லப் போவதில்லை என்று நினைக்கின்றேன். அப்படித்தானே?"
"ஹாரியை அவனது சித்தப்பா மற்றும் சித்தியின் வீட்டிற்கு கொண்டுவரவே நான் இங்கே வந்திருக்கின்றேன். அவனுக்கு இருக்கும் ஒரே குடும்பம் இப்போது அவர்கள் மட்டும்தான்."
"நீங்கள் உண்மையிலேயே அவனை இங்கேயா விட்டு வைக்கப் போகின்றீர்கள்? இங்கே வாழும் மனிதர்களைப் பற்றியா சொல்லுகின்றீர்கள்?" சட்டென்று எழுந்து நான்காம் எண்ணைக் காட்டிக்கொண்டு சத்தமாக கேட்டாள் புரொபசர் மெக்கோனகல். "டம்பிள்டோர் -- உங்களால் முடியாது. அவர்களை நான் நாள் முழுவதும் பார்த்துக்கொண்டுதானிருந்தேன். இவர்களைப் போல நம்மை மாதிரியே இல்லாத வேறு இரண்டு பேர்களை நீங்கள் பார்க்கவே முடியாது. அவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றான் -- இனிப்புகளுக்காக அடம் செய்து கொண்டு அவனது அம்மாவை உதைத்துக்கொண்டே அவன் இங்கே அலைந்ததை நானே பார்த்தேன். ஹாரி இங்கே வந்து வாழப் போகின்றானா?"
"இதுதான் அவனுக்கு சிறந்த இடம்." டம்பிள்டோர் உறுதியுடன் கூறினார். "அவனது சித்தியும் சித்தப்பாவும் அவனுக்கு நடந்ததையெல்லாம் அவன் வயசுக்கு வந்த பிறகு கூறிப் புரியவைக்கலாம். நான் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கின்றேன்."
"கடிதமா?" புரொபசர் மெக்கோனகல் மெல்ல கேட்டுவிட்டு திரும்பவும் அமர்ந்தாள். "உண்மையிலே டம்பிள்டோர், இதையெல்லாம் ஒரு கடிதத்தில் எழுதிவிட முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இந்த மானிடர்கள் அவனை எப்போதும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அவன் மிகவும் புகழ் பெற்றவன் -- சரித்திரம் போன்றவன் -- இன்றைய நாள் ஹாரி பாட்டாரின் நாள் என்று எதிர்காலத்தில் சொன்னால் கூட நான் ஆச்சரியப்படமாட்டேன் -- ஹாரியைப் பற்றி புத்தகங்கள் எழுதப்படப் போகின்றன -- நமது உலகத்திலுள்ள ஒவ்வொரு குழைந்தையும் அவனது பெயரை அறிந்திருக்கும்!"
"அதேதான்." தனது அரைவட்டக் கண்ணாடியின் வழியே மிகவும் தீவிரமாகக் கூர்ந்து பார்த்துக்கொண்டே கூறினார் டம்பிள்டோர். "எந்த ஒரு பையனின் தலைக்கனத்தையும் அதிகப் படுத்த இது போதும். அவன் எழுந்து நடந்து பேசுவதற்கு முன்பே புகழ் பெற்றுவிட்டான். அவன் நினைவுகூறவே முடியாத ஒன்றுக்குப் புகழ் பெற்றிருக்கின்றான். அத்தனை விஷயங்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவனுக்கு வரும்வரை அவற்றிலிருந்து அவன் விலகியிருப்பது மிக நல்லதென்று உங்களுக்குத் தெரியவில்லையா?"
எதிர்த்து எதையோ சொல்ல வாயெடுத்த புரொபசர் மெக்கோனகல், மனதை மாற்றிக்கொண்டு வார்த்தைகளை முழுங்கிவிட்டுத் தொடர்ந்தாள், "ஆமாம் -- ஆமாம். நீங்கள் சொல்லுவதும் சரிதான். ஆனால் அந்தப் பையன் இங்கே எப்படி வருகின்றான் டம்பிள்டோர்?" அவள் சட்டென்று ஏதோ ஹாரியை மறைத்து வைத்திருப்பது போல அவரது நீள அங்கியை சிறிது சந்தேகத்துடன் பார்த்தாள்.
"ஹாக்ரிட் அவனைக் கொண்டு வருகின்றான்."
"அது -- அது -- ஹாக்ரிட்டை இந்தமாதிரி மிக முக்கியமான விஷயத்திற்கு நம்புவது அறிவான செயல் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?"
"ஹாக்ரிட்டை என்னுடைய வாழ்க்கை முழுவதும் நம்புவேன்." டம்பிள்டோர் கூறினார்.
"அவனுடைய இதயம் வேறு இடத்திலிருக்கும் என்று நான் கூறவில்லை" புரொபசர் மெக்கோனகல் தயக்கத்துடன் கூறினாள். "ஆனால், அவன் அக்கறையானவன் என்று நீங்கள் காட்டிக்கொள்ள முடியாது. அவன் சில நேரங்களில் -- அது என்ன?"
தொடர்ச்சியான இரைச்சல் ஒன்று அவர்களைச் சுற்றியிருந்த அமைதியைக் கிழித்தது. அவர்கள் அந்தத் தெருவின் மேலும் கீழும் ஏதாவது காரின் முன்விளக்கு வெளிச்சம் தெரிகிறதா என்று பார்க்கும்போதே அந்த சத்தம் நெருங்கி வர ஆரம்பித்தது. அது மிகப்பெரிய இரைச்சலானபோது இருவருமே வானத்தைப் பார்த்தனர் -- ஒரு பெரிய மோட்டார்சைக்கிள் காற்றிலிருந்து பறந்து கீழே விழுந்து அவர்களுக்கு முன்பேயிருந்த தெருவில் தரையிறங்கியது.
மோட்டார்சைக்கிளே பெரியதாக இருந்ததென்றால் அதில் உட்கார்ந்திருந்தவனைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. சராசரி மனிதனைவிட இரண்டு மடங்கு உயரமும் குறைந்தபட்சம் ஐந்து மடங்கு அகலமும் கொண்டிருந்தான் அவன். அனுமதிக்க முடியாத அளவுக்கு பெரியதாக இருந்தான். அவனைப் பார்க்க பயங்கரத்துடன் தலைமுடியும் தாடியும் முகத்தில் முக்கால்வாசிக்கு மறைக்குமளவு இருந்தான். குப்பைக்கூடையின் மூடியளவுக்கு அவனது கைகள் இருந்தன. அவனுடைய தோல் பூட்ஸ் மூடித் தெரிந்த கால்கள் இரண்டு டால்பின்கள் அளவுக்கு இருந்தன. அவனுடைய பெரிய அகன்ற கைகளில் ஒரு போர்வைக் குவியலை வைத்திருந்தான்.
"ஹாக்ரிட்" டம்பிள்டோர் நிம்மதியுடன் கூறினார். "கடைசியில் வந்துவிட்டாய். இந்த மோட்டார்சைக்கிள் எங்கே கிடைத்தது உனக்கு?"
"கடன் வாங்குனேன் புரொபசர் டம்பிள்டோர் சார்." அந்த ராட்சஸன் கூறிக்கொண்டே மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கினான். "இளைஞன் சிரியஸ் பிளாக் எனக்குக் குடுத்தான். நான் ஹாரியைக் கொண்டாந்திருக்கிறேன் சார்."
"அங்கே ஏதும் பிரச்சினை இல்லையே?"
"இல்ல சார் -- வீடு முழுசும் அழிஞ்சிடிச்சி. ஆனா மானிடர்கள் வந்து மூக்கை நுழைக்கறதுக்குள்ள நான் அவனை நல்லபடியா எடுத்து வந்துட்டேன். நாங்கள் பிரிஸ்டாலின் மேல் பறந்து கொண்டிருந்தபோது அவன் தூங்கிட்டான்."
டம்பிள்டோரும் புரொபசர் மெக்கோனகலும் அந்தப் போர்வைக் குவியலுக்கு முன்னே குனிந்தார்கள். அதனுள் ஒரு குழைந்தைப் பையன் தூங்கிக் கொண்டிருப்பது கொஞ்சமாகத் தெரிந்தது. அவனடைய அடர் கறுப்பு தலைமுடிக்குக்கீழ், அவனுடைய முன் நெற்றியில், ஒரு சிறிய வெட்டுத் தழும்பு மின்னல் கீற்று போன்ற தோற்றத்துடன் இருந்ததை அவர்கள் அனைவரும் பார்த்தார்கள்.
"இதுதான் அந்த--?" புரொபசர் மெக்கோனகல் கிசுகிசுத்தாள்.
"ஆமாம்." டம்பிள்டோர் கூறினார், "அந்தத் தழும்பை அவன் எப்போதுமே கொண்டிருப்பான்."
"நீங்கள் அதற்கு ஏதாவது செய்ய முடியாதா டம்பிள்டோர்?"
"என்னால் செய்ய முடிந்தாலும் நான் செய்ய மாட்டேன். தழும்புகள் உதவியாகவும் இருக்கும். என்னுடைய இடது காலின் முழங்காலுக்கு சற்று மேலே ஒரு தழும்பு இருக்கிறது அது லண்டனின் பாதாளத்தின் மிகச்சரியான வரைபடம். நல்லது -- அவனை இங்கே கொடு ஹாக்ரிட். நாம் இதை சீக்கிரம் முடித்துவிடலாம்."
டம்பிள்டோர் ஹாரியைத் தனது கைகளில் தூக்கிக்கொண்டு டர்ஸ்லிக்களின் வீடு நோக்கி நடந்தார்.
"அவனுக்கு -- அவனுக்கு நான் குட்பை சொல்லலாமா சார்?" ஹாக்ரிட் கேட்டான். அவனுடைய பெரிய தலையைக் குனிந்து ஹாரியின் கன்னத்தில் மிகவும் கீறியிருக்கக்கூடிய முத்தத்தைக் கொடுத்தான். உடன், சட்டென்று அவன் அடிபட்ட நாயைப் போல ஊளையிட ஆரம்பித்தான்.
"ஷ்ஷ்..." புரொபசர் மெக்கோனகல் கிசுகிசுத்தாள். "நீ மானிடர்களை எழுப்பிவிடுவாய்."
"ச-ச-சாரி" அழுதான் ஹாக்ரிட். ஒரு பெரிய கைக்குட்டையை எடுத்து அதில் முகத்தை மூடிக்கொண்டான். "ஆனா என்னால தாங்க முடியல -- லில்லியும் ஜேம்ஸும் இறந்துட்டாங்க -- அதோடு சின்னப் பையன் பாவம் ஹாரியோ மானிடர்களோடு வாழ வேண்டியிருக்குது."
"ஆமாம், ஆமாம். இதெல்லாம் மிகவும் சோகம்தான். ஆனால் உன்னை நீயே தேற்றிக்கொள் ஹாக்ரிட். இல்லையென்றால் மானிடர்கள் நம்மைக் கவனித்துவிடுவார்கள்." புரொபசர் மெக்கோனகல் ஹாக்ரிட்டின் கையில் தட்டிக்கொடுத்துக்கொண்டே முணுமுணுத்தாள். டம்பிள்டோர் சிறிய புல்வெளியைத் தாண்டி வாசல் கதவிற்கு வந்தார். ஹாரியை கதவின் அடியில் மெதுவாக படுக்க வைத்துவிட்டு, தனது அங்கியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து அதை போர்வைக்குள் சொருகி வைத்துவிட்டு திரும்பி இருவரும் இருக்குமிடம் வந்தார். ஒரு முழு நிமிஷம் அவர்கள் அனைவரும் அமைதியுடன் நின்று அந்த போர்வைக்குவியலையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஹாக்ரிட்டின் தோள்கள் குலுங்கியது. புரொபசர் மெக்கோனகல் கண்களை வேகமாக சிமிட்டிக்கொண்டாள். எப்போதும் டம்பிள்டோரின் கண்களில் தெரியும் பளீரென்ற ஒளி அப்போது இருப்பதாகத் தெரியவில்லை.
"நல்லது" டம்பிள்டோர் மெதுவாக கூறினார். "அவ்வளவுதான். இதற்கு மேல் இங்கே இருப்பதற்கு நமக்கு வேலையில்லை. நாமும் போய் கொண்டாட்டங்களோடு இணைந்து கொள்வோம்."
"ஆமா" ஹாக்ரிட் மிகவும் அமுங்கிப்போயிருந்த குரலில் கூறினான். "நான் சிரியஸின் பைக்கை திரும்பித் தரணும். குட்நைட் புரொபசர் மெக்கோனகல் -- புரொபசர் டம்பிள்டோர் சார்."
அவனது வழியும் விழிநீரை கோட் ஜாக்கெட்டின் கைப்பகுதியில் துடைத்தபடியே மறுபடியும் மோட்டார்சைக்கிளில் ஏறி, அதன் எஞ்சினை ஆன் செய்து, இரைச்சலுடன் வானத்தில் செலுத்தி இரவின் இருட்டில் மறைந்து போனான்.
"நான் திரும்பவும் உங்களைச் சந்திக்கிறேன் புரொபசர் மெக்கோனகல்." டம்பிள்டோர் அவளைப் பார்த்து தலையசைத்து கூறினார். புரொபசர் மெக்கோனகல் பதிலுக்கு தனது மூக்கை உறிஞ்சினாள்.
டம்பிள்டோர் திரும்பி தெருமுனைக்கு நடந்து போனார். தெருமுனையில் மறுபடியும் வெளிச்சப்போக்கியை எடுத்து ஒரு முறை கிளிக் செய்ய, பன்னிரண்டு வெளிச்சப் பந்துகள் மறுபடியும் பறந்து சென்று தெரு விளக்குகளை அடைந்தன. பிரைவட் டிரைவ் சட்டென்று ஆரஞ்சு நிறமாகியது. அந்த வெளிச்சத்தில் ஒரு சாம்பல் நிறப் பூணை தெருக் கடைசிக்கு சென்று இருட்டில் மறைவது தெரிந்தது. அவரால் நான்காம் எண் வீட்டின் வாசற்படியிலிருந்த போர்வைக்குவியலை நன்றாகப் பார்க்க முடிந்தது.
"குட்லக் ஹாரி." அவர் முணுமுணுத்தார். தனது குதிகாலைத் திருப்பி அவரது நீள் அங்கியில் ஒரு சுழற்று சுழற்ற, சட்டென்று மறைந்து போனார்.
ஒரு மெல்லிய தென்றல் கறுமையான வானத்திற்கு அடியில் அமைதியாக படர்ந்திருந்த, விசித்திரமான விஷயங்கள் நடக்கும் என்று நினைத்தே பார்க்க முடியாத பிரைவட் டிரைவின் சீரான புல்வெளிகளை தொட்டுக்கொண்டு போனது. ஹாரி பாட்டர் தனது போர்வையில் தூக்கம் கலையாமல் புரண்டு படுத்தான். அவனது சிறிய கை ஒன்று கடிதத்தின் மேல மூட, அவன் சிறப்பானவன் என்பதையோ, புகழ் பெற்றவன் என்பதையோ, இன்னும் சில மணி நேரத்தில் பால் பாட்டில்களை எடுக்க கதவைத் திறந்த திருமதி டர்ஸ்லியின் அலறலால் கண்விழிக்கப்போகின்றான் என்பதையோ, அல்லது அடுத்த சில வாரங்களை அவனது சித்திப் பையன் டட்லியால் குத்தப்பட்டும் தள்ளப்பட்டும் கழிக்கப்போகின்றான் என்பதையோ அறியாமல் தனது தூக்கத்தை தொடர்ந்தான்.
அதே நேரத்தில் நாடு முழுவதும் இரகசிய இடங்களில் சந்திக்கும் மக்களனைவரும் தங்களது கோப்பைகளை உயர்த்தி அமைதியான ஒரே குரலில், "பிழைத்த பையன் ஹாரி பாட்டருக்கு!" என்று கூறி அருந்துவது அவனுக்கு அப்போது தெரிய நியாயமில்லை.